Wednesday, December 14, 2011

கம்பம் மெட்டில் மக்களைத் தாக்கிய போலீஸ் ஏடிஜிபி ஜார்ஜைக் கண்டித்து சென்னை உயர்நீதிமன்ற வக்கீல்கள் ஆர்ப்பாட்டம்.


கம்பம் மெட்டுப் பகுதியில் கேரளாவை எதிர்த்துப் போராட்டம் நடத்தத் திரண்ட மக்களை போலீஸார் தொடர்ந்து தடியடி நடத்தி கலைத்து விரட்டி வருவதை எதிர்த்தும், கூடுதல் டிஜிபி ஜார்ஜைக் கண்டித்தும் சென்னை உயர்நீதிமன்ற வக்கீல்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

கூடுதல் டிஜிபி ஜார்ஜ் கம்பத்தில் முகாமிட்டுள்ளார். அவர் கம்பத்திற்கு வருவதற்கு முன்பு வரை தேனி மாவட்ட மக்கள் போராட்டத்தில் போலீஸார் தலையிடாமல் இருந்து வந்தனர். ஆனால் ஜார்ஜ் வந்த பின்னர் தற்போது பேரணியாக செல்வோரைப் போலீஸார் தடுத்தும், தடியடி நடத்திக் கலைத்தும் விரட்டியடிக்கின்றனர். இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

குறிப்பாக கம்பம், கம்பம் மெட்டுப் பகுதியில் பேரணியாக சென்ற பொதுமக்கள், விவசாயிகளை போலீஸார் தடியடி நடத்தி விரட்டுவது பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதைக் கண்டித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வக்கீல் ராம.சிவசங்கர் தலைமையில் வக்கீல்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

அப்போது வக்கீல்கள் கூறுகையில், கூடுதல் டி.ஜி.பி.ஜார்ஜ் கேரளாவைச் சேர்ந்தவர்.அமைதியாக ஊர்வலம் சென்ற தமிழர்கள் மீது அவரது தூண்டுதலின்பேரில்தான் தடியடி நடத்தப்பட்டது என்று அப்போது வக்கீல்கள் குற்றம் சாட்டினர். தமிழர்கள் மீது தடியடி நடத்திய ஜார்ஜை சஸ்பெண்ட் செய்து அவர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால், தமிழகம் முழுவதும் வக்கீல்கள் கிளர்ந்து எழுவார்கள் என்றும் வக்கீல்கள் எச்சரித்தனர்.

போராட்டங்களால் தேனி மாவட்டம் முடங்கியது

இந்த நிலையில் தொடர் போராட்டங்கள் காரணமாக தேனி மாவட்டமே முடங்கிப் போயுள்ளது.

தேனி மாவட்டத்தில் கடந்த 3 நாட்களாக குமுளி, கம்பம் மெட்டு எல்லைச்சாலைகளில் பொது மக்கள் முற்றுகை போராட்டம் நடத்தினார்கள். இந்த போராட்டம் எதிரொலியாக தேனி மாவட்டத்தில் நேற்று 4-வது நாளாக இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

சின்னமனூர், கருநாக்கமுத்தன்பட்டி, மார்க்கையன்கோட்டை, உ.அம்மாபட்டி, குள்ளப்ப கவுண்டன்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து பொதுமக்கள் ஆயிரக்கணக்கானோர் சாரை சாரையாக மோட்டார் சைக்கிள்கள், டிராக்டர்களில் குமுளி நோக்கி முற்றுகை போராட்டம் நடத்த சென்றனர்.

இந்த போராட்டக்குழுவினர் சென்ற சில நிமிடங்களில் அனுமந்தன்பட்டி, உத்தமபாளையம், கம்பம் உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்கள் ஆங்காங்கே சாலைகளில் கற்கள் மற்றும் மரக்கிளைகளை வெட்டிப்போட்டு போக்குவரத்தை தடை செய்தனர்.சின்னமனூர் நகரில் பொது மக்கள் டயர்களை கொளுத்திப்போட்டு தீ வைத்தனர். இதனை அடுத்து அங்கு தீயணைப்பு படையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர்.

இதையடுத்து சின்னமனூர் பகுதியில் இருந்து கம்பம், கூடலூர், குமுளி வரையிலான சாலையில் நேற்று காலை முதலே பஸ் போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டது.

கூடலூரில் மக்கள் மீது போலீஸ் தடியடி

இதனிடையே குமுளி நோக்கி செல்ல முயன்ற பொது மக்கள் கூடலூரில் போலீசாரால் தடுத்து நிறுத்தப்பட்டனர். அப்போது போலீசாருக்கும், பொது மக்களுக்கும் இடையே நடைபெற்ற மோதலை அடுத்து போலீசார் லேசான தடியடி நடத்தினர். பின்னர் அங்கிருந்து லோயர் கேம்ப் நோக்கி போராட்டக்குழுவினர் புறப்பட்டு சென்றனர். தம்மணம்பட்டி விலக்கு பகுதியில் போலீசார் மீண்டும் போராட்டக்குழுவினரை தடுத்தனர். அந்த தடையை மீறி லோயர் கேம்ப் குருவனூத்து பாலம் அருகே பகல் 1 மணி அளவில் ஊர்வலமாக பொது மக்கள் வந்து சேர்ந்தனர்.

அங்கே பாலத்தை மறித்து போலீஸ் வாகனங்கள் நிறுத்தப்பட்டதுடன், தென் மண்டல போலீஸ் ஐ.ஜி. ராஜேஷ்தாஸ், போலீஸ் சூப்பிரண்டுகள் பிரவீண்குமார் அபினபு, ஈஸ்வரன் மற்றும் ஆயுதம் தாங்கிய சிறப்பு அதிரடிப்படை போலீசார் போராட்டக்குழுவினரை தடுத்து நிறுத்தினர்.

போராட்டக்குழுவினரிடம் தென் மண்டல போலீஸ் ஐ.ஜி. ராஜேஷ்தாஸ் மேற்கொண்டு இந்த பாதையில் செல்ல முடியாது என அறிவுரை வழங்கி பேசினார். சுமார் 45 நிமிடம் அவர் பொது மக்களிடம் பேசியதை தொடர்ந்து அங்கு நின்ற பொது மக்கள் கேரள மாநில அரசை கண்டித்தும், இடுக்கி மாவட்டத்தை தமிழ் நாட்டுடன் இணைக்க வலியுறுத்தியும், அணையின் நீர் மட்டத்தை 142 அடியாக உயர்த்தவும் வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் அங்கிருந்து பொது மக்கள் தங்கள் கிராமங்களுக்கு திரும்பி சென்றனர்.

மரங்களை வெட்டித் தீவைத்த மக்கள்

இந்த நிலையில், நேற்று பிற்பகலில் கோட்டூர், சீலையம்பட்டி, உப்பார்பட்டி விலக்கு பகுதிகளில் மர்ம நபர்கள் மரங்களை வெட்டி போட்டனர். இதனால் அந்த பாதையில் போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டது. சீலையம்பட்டி பகுதியில் சாலைகளில் குப்பைகளை கொட்டி தீ வைத்து எரித்தனர். இதனால் அந்த பாதையில் கலவரம் ஏற்பட்டது போன்று பரபரப்பாக காணப்பட்டது.

ஏற்கனவே தேனி நகரில் நேற்று பகலில் கேரள மாநிலத்தவர்களின் கடைகள் உடைக்கப்பட்டது. மேலும் உம்மன்சாண்டியின் உருவ பொம்மையும் ஆங்காங்கே எரிக்கப்பட்டது. தேனி அருகே உள்ள பழனிசெட்டிபட்டியில் தேனி தொகுதி எம்.பி. ஆரூண் அலுவலகத்தில் பா.ஜனதா கட்சியினர் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

தேனி பஸ் நிலையத்துக்கு நேற்று ஆட்டோ தொழிலாளர்கள் உள்பட பல்வேறு அமைப்பைச் சேர்ந்தவர்கள் வந்தனர். செங்கோட்டைக்கு பஸ்களை இயக்கக்கூடாது என்று மறியலில் ஈடுபட்டனர். அப்பகுதியில் கேரளாவைச் சேர்ந்தவருக்கு சொந்தமான 3 நட்சத்திர ஓட்டலின் ஜன்னல், கண்ணாடிகளை அடித்து நொறுக்கினர். இதையடுத்து, பஸ் நிலையத்தில் இருந்த பஸ்கள், பணிமனைக்கு கொண்டு செல்லப்பட்டன.

தேனியில் உள்ள கேரள நிறுவனங்கள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது. கேரளாவுக்கு மொத்தமாக சரக்குகளை ஏற்றி அனுப்பும் தொழில் அதிபரின் கடை மீதும், அவரது கார் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது. இதன் எதிரொலியாக, தேனியில் அனைத்து பள்ளிகளுக்கும் பிற்பகலில் விடுமுறை விடப்பட்டது.

ஒரு கடையும் திறக்கப்படவில்லை

போடி நகரில் டீக்கடை முதல் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு இருந்தன. சின்னமனூரிலும் கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன. அங்கு கேரள நிறுவனங்களின் பெயர் பலகையை உடைத்து தீவைத்தனர். ஆங்காங்கே மரக்கிளைகளை வெட்டி போட்டனர்.

கம்பம், உத்தமபாளையம் பகுதியில் அனைத்து கடைகளும், பள்ளி, கல்லூரிகளும் மூடப்பட்டு இருந்தன. தேனி மாவட்டம் முழுவதும் மரங்களை போட்டும், குழாய்களை போட்டும் வைத்திருந்ததால், போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இந்த பெரும் போராட்டத்தால் தேனி உள்ளிட்ட பகுதிகளில் ஏதோ பந்த் நடப்பது போன்ற தோற்றம் காணப்பட்டது. தேனி மாவட்டத்தில் நடந்து வரும் தொடர் போராட்டங்களால் மாவட்டம் முழுவதுமே அசாதாரண நிலை தொடர்கிறது.

No comments: