Thursday, July 7, 2011

தலைகுனிந்த தயாநிதியின், ராஜினாமா !

இன்று மாலை முதல், புதுடில்லி அரசியல் வட்டாரங்களில் இதனால் மிகவும் பரபரப்பாகக் காணப்படுகின்றது.

இன்று மாலைதான் தயாநிதி தனது ராஜினாமாவைக் கொடுத்திருந்தாலும், ராஜினாமா எபிசோட் இன்று காலையிலேயே தொடங்கிவிட்டது. காங்கிரஸ் வட்டாரங்களுடன் நெருங்கிய தொடர்புடைய பத்திரிகையாளர்கள் சிலர் இன்று காலை முதலே ராஜினாமா செய்திக்காகக் காத்திருந்தனர்.

இதற்குகூட, தலைகுனியாவிட்டால் எப்படி?

“இருந்து பாருங்கள், இன்று மாலைக்குள் உங்களுக்கு ராஜினாமா செய்தி வந்துவிடும்” என்று எம்முடன் தொடர்பில் இருக்கும் ஹிந்தி மாலைப்பத்திரிகை ஒன்றின் நாடாளுமன்றச் செய்தியாளர் ஒருவர் கிசுகிசுத்திருந்தார்.

பிரதமரின் அலுவலகத்தில் ஆட்களை வைத்திருக்கும் சில பத்திரிகையாளர்கள், காலையிலிருந்தே உள்ளங்கையில் செல்போனை வைத்துப் பார்த்தபடி இருந்தனர்.

இன்று காலை 7 மணியிலிருந்து, ராஜினாமா செய்யப்போகும் செய்தி கிட்டத்தட்ட கன்பர்ம்ட் ஆன நிலையிலேயே, குறிப்பிட்ட சில பத்திரிகையாளரிடையே இருந்தது.

ஆனால், எல்லோரையும் தலைகீழாகக் குழப்பத்தில் தள்ளிவிட்ட சம்பவம் ஒன்று, காலையிலேயே நடந்தது!

அமைச்சரவைக் கூட்டத்தில் கலந்துகொள்ள ஜாம்ஜாம் என்று வந்திறங்கியவர், சாட்சாத் தயாநிதி மாறனேதான்!

இதைத் தொடர்ந்து, பத்திரிகையாளரிடையே குழப்பம். இன்று ராஜினாமா செய்யவுள்ளதாக கிசுகிசுக்கப்படும் ஒருவரை, அமைச்சரவைக் கூட்டம் நடைபெறும் இடத்தில் யாரும் எதிர்பார்க்காததால் ஏற்பட்ட மகா குழப்பமான நிமிடங்கள் அவை.

தயாநிதியின் ராஜினாமா பற்றிக் கொடுத்த தகவல்கள் பொய் என்று சில பத்திரிகையாளர்கள் தங்களுக்கிடையே திட்டிக் கொண்ட சம்பவங்களும் நடந்தன.

“இருங்கள்.. இருங்கள்.. பொறுமையாக இருங்கள்.. நடப்பதைப் பாருங்கள்” என்றார் நமது தொடர்பாளர்.

திடீரென மீண்டும் பரபரப்பு. அமைச்சரவைக் கூட்டத்தில் கலந்துகொண்ட தயாநிதி மாறன், பாதியிலேயே அவசர அவசரமாக வெளியேறினார் என்ற செய்தி வந்தபோது ஏற்பட்ட பரபரப்பு அது.

அந்த நிமிடத்தில், மீண்டும் உயிர்பெற்றது ராஜினாமா செய்தி.

அமைச்சராக உள்ளே சென்றவர், வெளியே வரும்போது...

மதியம், பிரதமர் அலுவலகத்திலிருந்து வந்தது அடுத்த தகவல். தயாநிதி மாறன் வந்திறங்கி உள்ளே சென்றிருக்கிறார் என்றது அந்தச் செய்தி. இன்று தயாநிதி பிரதமரைச் சந்திக்கும் அப்பாயின்ட்மென்ட் ஏதும் இருக்கவில்லை. ஆனாலும், வந்திறங்கிய சிறிது நேரத்திலேயே பிரதமரின் அறைக்குள் அவர் அனுமதிக்கப்பட்டார்.

பிரதமரின் அறைக்குள் தயாநிதி 5 நிமிடங்கள்கூடத் தாமதிக்கவில்லை. போன வேகத்திலேயே வெளியே வந்தார்.

காலையிலிருந்து இந்த விஷயங்களையெல்லாம் ஃபாலோ பண்ணிக்கொண்டிருந்த பத்திரிகையாளர்கள் சிலர், தயாநிதி மாறன் பிரதமரின் அலுவலகக் கட்டடத்துக்கு வெளியே ஆஜர்!

வெளியே வந்த தயாநிதி, தலைகுனிந்த நிலையில் இறுகிய முகத்துடன் காணப்பட்டார். பத்திரிகையாளர்கள் கேட்ட கேள்விகள் எதற்கும் அவரிடமிருந்து பதில் வரவில்லை. வேகமாக அந்த இடத்தைவிட்டு அகன்றார். அவரைப் பின்தொடர்ந்து வந்த அதிகாரி ஒருவர் மாத்திரம், பத்திரிகையாளர்களுக்கு கண்களால் ஜாடை காட்டிவிட்டுச் சென்றார்.

அடுத்த நிமிடமே, ஒற்றை வார்த்தையாக, “தயாநிதி ராஜினாமா” என்ற செய்தி, பத்திரிகை, டீ.வி. அலுவலகங்களுக்குப் பறந்தது.

இதில் பெரிய வேடிக்கை என்னவென்றால், பிரதமரின் அலுவலகத்தில் செய்தி உறுதிப் படுத்தப்படும் முன்னரே, “தயாநிதி ராஜினாமா” என்று ஹெட்லைன் நியூஸ்கள் அலறத் தொடங்கிவிட்டன. அந்தளவுக்கு எல்லோரும் தெளிவாக இருந்தார்கள்!

டில்லியிலிருந்து சம்பத் குமாரின் குறிப்புகளுடன், ரிஷி.

நன்றி - விறுவிறுப்பு.காம்.

தயாநிதி மாறன் : பூமாலை முதல் ஸ்பெக்ட்ரம் வரை !


"மகன்தந்தைக்கு ஆற்றும் உதவி இவன்தந்தை
என்னோற்றான் கொல்எனுஞ் சொல்"

இந்தத் திருக்குறளுக்கு முற்றிலும் நேர் மாறாகப் போய் விட்டது தயாநிதி மாறன் வாழ்க்கை. முரசொலி மாறனின் மகன் என்ற ஒரே தகுதியை மட்டுமே கொண்டு அரசியலில் நுழைக்கப்பட்டவர் தயாநிதி மாறன். மாறன் மறைவுக்குப் பின்னர் டெல்லியில் தனக்கு ஊன்றுகோல் தேவை என்று கருதிய திமுக தலைவர் கருணாநிதி, மாறனின் மகன், புத்திசாலி மகன், பல மொழிகள் அறிந்த திறமைசாலி என்று நினைத்துத்தான் தயாநிதியை அரசியலுக்குக் கூட்டி வந்தார்.

அப்போதே கட்சிக்குள் பெரும் அதிர்ச்சி, முனுமுனுப்புகள். மத்திய சென்னை தொகுதியின் எம்.பியாக மாறன் அறிவிக்கப்பட்டபோது புழுங்காத மனங்கள் இல்லை. இருந்தாலும் தலைவர் சொல்லி விட்டாரே என்பதற்காக தயாநிதி மாறனை வெற்றி பெறச் செய்தனர். ஆனால் அடுத்த அதிர்ச்சி தயாநிதி மாறனை மத்திய அமைச்சராக்க கருணாநிதி முடிவு செய்தது. இதையும் பொறுத்துக் கொண்டு அமைதியாகப் போக வேண்டிய கட்டாயம் திமுகவினருக்கு.

அன்று முரசொலி மாறனால் திமுக என்ற இயக்கம் சிறப்பாக வளர்ந்தது. கட்சியை வளர்க்க தன்னை உரம் போல பயன்படுத்தினார் மாறன். கட்சிக்காக தீவிரமாக தொண்டாற்றினார். கட்சியைக் கட்டுக் கோப்பாக மாற்றினார். அண்ணாவால் பாராட்டப்பட்டார். அண்ணாவின் மறைவுக்குப் பின்னர் கருணாநிதியின் நிழலாக, அவருடைய மனசாட்சியாக செயல்பட்டு திமுகவை மிகப் பெரிய இயக்கமாக வளர்க்க உதவியவர் மாறன். அதாவது திமுகவின் வளர்ச்சிக்கு மாபெரும் உதவியாக இருந்தவர் மாறன் என்பது எதிரிகளும் கூட ஒப்புக் கொள்ளும் ஒரு விஷயம்.

ஆனால் தயாநிதி மாறன் என்ன செய்தார்?. இத்தனை காலமாக கட்டி வைத்திருந்த கோட்டையை தம்மாத்தூண்டு ஊசி வெடியால் வெடித்து உடைத்து சிதறடிப்பது போல ஸ்பெக்ட்ரம் என்ற விவகாரத்தால் கட்சி சீர்குலைய காரணமாகி விட்டார். முதலில் கைதானது என்னமோ ராசா, கனிமொழி என்றாலும் கூட இந்த மிகப் பெரிய ஊழலின் முன்னோடி தயாநிதி மாறன் என்பது அனைவரின் கருத்தாகவும் உள்ளது.

தயாநிதி மாறன் அரசியலில் வளர்ந்த வேகம், டெல்லியில் அவருக்குக் கிடைத்த செல்வாக்கு, திமுகவுக்கும், கருணாநிதிக்குமே சவால் விடும் வகையில் விஸ்வரூபம் எடுத்த அவரது வளர்ச்சி ஆகியவற்றைப் பார்த்து திமுகவினர் தொடர்ந்து புழுக்கத்தில் இருந்து வந்தனர். இன்று அத்தனை பேருக்குமே ஒரு விதமான நிம்மதி கிடைத்துள்ளதாகவே தெரிகிறது.

44 வயதான தயாநிதி மாறன், ஆரம்பத்தில் அரசியல் நிழல் கூட படியாமல் கடுமையான ஊழைப்பாளியாக மட்டுமே வளர்ந்து வந்தவர். அவரும், அவரது சகோதரர் கலாநிதி மாறனும் சேர்ந்து உழைத்த உழைப்பு நிச்சயம் பாராட்டக் கூடியது. அதில் அரசியல் கலந்தபோதுதான் களங்கங்கள் கூடவே வளர ஆரம்பித்தன.

1990ம் ஆண்டு கலாநிதி மாறன் பூமாலை என்ற வீடியோ பத்திரிக்கையை ஆரம்பித்தபோது அவருக்கு உதவியாக இருந்தார் தயாநிதி மாறன். பின்னர் சன் டிவியை கலாநிதி மாறன் தொடங்கியபோதும் உதவியாக இருந்தார். கலாநிதியின் வளர்ச்சியை தயாநிதியை பிரித்து விட்டுப் பார்க்க முடியாது என்ற அளவுக்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் தனது அண்ணனுக்கு உதவியாக இருந்தவர், இருந்து வருபவர் தயாநிதி மாறன்.

முதன் முதலில் இவர் தொலைத் தொடர்புத் துறை அமைச்சராக நியமிக்கப் பட்டபோது அனைவரும் இவர் என்ன செய்து விடுவார் என்றுதான் பார்த்தனர். ஆனால் மிகவும் சுறுசுறுப்பாக செயல்பட்டு தனக்கென ஒரு வட்டத்தை ஏற்படுத்தும் அளவுக்கு ஆச்சரியமாக வளர்ந்தார் தயாநிதி. பெரும் சரிவைச் சந்தித்துக் கொண்டிருந்த பி.எஸ்.என்.எல்லின் சரிவைத் தடுத்து நிறுத்தியவரும் இவரே. கிராமங்களிலும் தொலைபேசியை சகஜமாக்கியதும் இவரது நடவடிக்கை கள்தான். அதை மறுப்பதற்கில்லை.

ஆனால் யாருக்கும் தெரியாமல் நடந்து போன பல மறைமுகமான விஷயங்கள் தயாநிதியின் சுயரூபத்தை கிழித்தெறிவது போல இன்று அம்பலமாகி அனைவரையும் அவர் மீது வெறுப்பலைகளை வீச வைத்து விட்டது.

எந்த வேகத்தில் வளர்ந்தாரோ அதே வேகத்தில் சரிந்து நிற்கிறார் தயாநிதி மாறன். ஆனால் தயாநிதி மாறன் மற்றும் மாறன் சகோதரர்களின் சரிவு, திமுகவையும், இந்தியத் தொலைக்காட்சி உலகையும் எந்த அளவுக்கு பாதிக்கும் என்பது போகப் போகத்தான் தெரியும்.

ஸ்பெக்ட்ரம் ஊழல்: தயாநிதி மாறன் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் .

ஸ்பெக்ட்ரம் ஊழல்: தயாநிதி மாறன்  அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார்

மத்திய மந்திரி தயாநிதி மாறன் 2004-ம் ஆண்டு முதல் 2007-ம் ஆண்டு வரை தொலைத் தொடர்புத்துறை மந்திரியாக இருந்தபோது 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் முறைகேடு செய்த தாக சி.பி.ஐ. குற்றம் சாட்டியுள்ளது.

சன் டி.வி. குழும நிறுவனங்கள் ஆதாயம் பெற வேண்டும் என்ற ஒரே நோக்கத்துடன் அவர் தனது பதவியை தவறாக பயன்படுத்தியதாக குற்றச்சாட்டுகளில் கூறப்பட்டுள்ளது.

ஏர்செல் நிறுவன உரிமையாளர் சிவசங்கரன் ஸ்பெக்ட்ரம் உரிமம் கேட்டு விண்ணப்பித்த போது தயாநிதிமாறன் சுமார் 2 ஆண்டுகளாக உரிமம் கொடுக்காமல் இழுத்தடித் தார். இதையடுத்து சிவசங்கரன் ஏர்செல் நிறுவன பங்குகளை மலேசியாவை சேர்ந்த மேக்சிஸ் குழுமத்துக்கு விற்றார். தயாநிதிமாறன் மிரட்டியதால் தனது நிறுவன பங்குகளை விற்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டதாக சமீபத்தில் சி.பி.ஐ.யிடம் சிவசங்கரன் வாக்குமூலம் அளித்தார்.

இந்த குற்றச்சாட்டுக்களை தயாநிதி மாறன் மறுத்தார். ஆனால் தயாநிதிமாறன் முறைகேடாக நடந்து கொண்டதற்கான ஆதாரங்கள் சிக்கியது. அந்த ஆதாரங்களை பொது நலன் வழக்குகளுக்கான பொது மையம் (சி.பி.ஐ.எல்.) என்ற அமைப்பு சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்தது.

ஏர்செல் நிறுவனத்தின் பங்குகள் மலேசியாவின் மேக்சிஸ் குழுமத்துக்கு கைமாறிய சில தினங்களில், அந்த நிறுவனத்துக்கு 14 ஸ்பெக்ட்ரம் உரிமங்களை தயாநிதிமாறன் ஒதுக்கீடு செய்து கொடுத்தார். அதற்கு பிரதிபலனாக ரூ.599.01 கோடியை சன் டி.வி. குழும நிறுவனங்களில் மேக்சிஸ் நிறுவனம் முதலீடு செய்தது. இந்த தகவல்களை ஏற்கனவே பொது நல வழக்குகளுக்கான பொது மையம் சுப்ரீம் கோர்ட்டில் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் நேற்று சி.பி.ஐ.யும் தனது 71 பக்க அறிக்கையில் இந்த தகவல்களை சுப்ரீம் கோர்ட்டில் சமர்ப்பித்தது. ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் தயாநிதிமாறன் செய்த முறைகேடுகளை சி.பி.ஐ. மிகத் தெளிவாக தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

இதையடுத்து 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு ஊழல் தொடர்பான விசாரணை வளையத்துக்குள் தயாநிதி மாறன் கொண்டு வரப்பட்டுள்ளார். அவரிடம் விசாரணை நடத்துவதற்கான எல்லா ஏற்பாடுகளையும் சி.பி.ஐ. மூத்த அதிகாரிகள் செய்து வருகிறார்கள். அடுத்தக் கட்டமாக 2004-ம் ஆண்டு முதல் 2007-ம் ஆண்டு வரை ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் எத்தனை ஆயிரம் கோடி ரூபாய் கைமாறி இருக்கலாம் என்ற கணக்கெடுப்பு நடந்து வருவதாக சி.பி.ஐ. வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. அதை அடிப்படை யாக வைத்து அடுத்த குற்றப்பத்திரிகையில் தயாநிதி மாறன் பெயர் சேர்க்கப்படும் என்று கூறப்படுகிறது.

சி.பி.ஐ.யின் இத்தகைய நடவடிக்கைகளால் தயாநிதி மாறனை மத்திய மந்திரி பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்தது. பா.ஜ.க., இடதுசாரி கட்சிகள் வற்புறுத்தி வருகின்ற போதிலும் தயாநிதி மாறன் பதவி விலகவில்லை.

சி.பி.ஐ. விசாரணை தீவிரமாகும் பட்சத்தில் தயாநிதி மாறன் மத்திய மந்திரியாக இருந்தால், நேர்மையான, முழுமையான விசாரணை நடைபெற முடியாமல் போகலாம். எனவே தயாநிதிமாறன் தார்மீக பொறுப்பு ஏற்று பதவியை விட்டு விலக முன்வரவேண்டும். அவர் பதவி விலகாவிட்டால் பிரதமர் அவரை மந்திரி சபையில் இருந்து நீக்கி ஜனநாயக மாண்பை காக்க வேண்டும் என்று எதிர்க் கட்சித் தலைவர்கள் கூறினார்கள்.

தயாநிதி மாறன் விஷயத்தில் தொடர்ந்து மவுனத்தை கடைபிடித்தால் பெரிய அளவில் நாடு தழுவிய அளவில் போராட்டம் நடத்துவோம் என்று எதிர்க்கட்சிகள் எச்சரித்துள்ளன. இது மத்திய அரசுக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது.

எந்த ஒரு பிரச்சினைக்கும் வாயைத் திறந்து பதில் சொல்லாத பிரதமர் மன்மோகன்சிங் சி.பி.ஐ.யின் சரமாரி குற்றச்சாட்டுக்களால் தவிப்புக்குள்ளாகி இருக்கிறார். நேற்று காங்கிரஸ் உயர்நிலைக் குழுவை கூட்டி விவாதித்தார். தயாநிதி மாறன் செய்துள்ள முறைகேடுகள் குறித்து ஆதாரங்களுடன் வரும் தகவல்கள் குறித்து சோனியாவுடன் அவர் ஆலோசனை நடத்தினார். இந்த விவகாரத்தில் விரைவில் உரிய முடிவு எடுக்குமாறு தி.மு.க.வை கேட்டுக் கொள்வது என காங்கிரஸ் தலைவர்கள் தீர்மானித்தனர். அதன்படி தி.மு.க.விடம் காங்கிரஸ் தலைவர்கள் தொடர்பு கொண்டு பேசியதாக தெரிகிறது.

இதற்கிடையே இன்று பகல் 11 மணிக்கு மத்திய மந்திரிசபை கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் தயாநிதிமாறனும் கலந்து கொண்டார். அப்போது அவர் தனது பதவியை ராஜினாமா செய்து பிரதமர் மன் மோகன்சிங்கிடம் கடிதம் கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தயாநிதிமாறன் ராஜினாமா கடிதம் எதுவும் கொடுக்கவில்லை. மந்திரிசபை கூட்டம் முடிந்ததும் அவர் ரேஸ் கோர்ஸ் இல்லத்தில் இருந்து காரில் ஏறி புறப்பட்டு சென்றார்.

இன்று மதியம் 1.30 மணி அளவில் தயாநிதி மாறன் திடீரென மீண்டும் பிரதமரை சந்திக்க ரேஸ் கோர்ஸ் இல்லத்துக்கு சென்றார். 1.45 மணிக்கு பிரதமர் மன்மோகன்சிங்கை சந்தித்தார். அவர்கள் இருவரும் சுமார் 5 நிமிடம் பேசிக் கொண்டிருந்தனர். அப்போது தயாநிதி மாறன் தனது மந்திரி பதவியை ராஜினாமா செய்து கடிதம் கொடுத்தார்.

அவரது ராஜினாமாவை பிரதமர் மன்மோகன்சிங் ஏற்றுக்கொண்டார். ஸ்பெக்ட்ரம் ஊழல் விவகாரத்தில் மத்திய மந்திரி பதவியை இழக்கும் 2-வது நபர் தயாநிதி மாறன் என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக மத்திய மந்திரி சபையில் இருந்து தயாநிதி மாறனை நீக்க சம்மதம் தெரிவித்து சோனியா காந்திக்கு தி.மு.க. தலைவர் கருணாநிதி கடிதம் எழுதி அனுப்பி உள்ளதாக டெல்லியில் இருந்து வெளியாகும் பயோனீர் என்ற ஆங்கிலப் பத்திரிகையில் தகவல் வெளியாகியுள்ளது.

அந்த கடிதத்தை டி.ஆர்.பாலு எம்.பி. இன்று (வியாழன்) சோனியாவிடம் ஒப்படைப்பார் என்று அதில் கூறப்பட்டுள்ளது. மேலும், ராஜாங்க நிதி மந்திரி பழனி மாணிக்கத்தையும் பதவியில் இருந்து நீக்கி விட்டு, டி.ஆர்.பாலு, டி.கே.எஸ்.இளங்கோவன், ஏ.கே.எஸ்.விஜயன் ஆகியோரை மந்திரிகள் ஆக்க கருணாநிதி அந்த கடிதத்தில் வேண்டுகோள் விடுத்துள்ளதாக அந்த தகவலில் குறிப்பிட்டுள்ளது.

மந்திரிகளுக்கு என்ன இலாகா வேண்டும் என்று கருணாநிதி குறிப்பிடவில்லை என்றும், ஆனால் டி.கே.எஸ். இளங்கோவனுக்கு தனிப் பொறுப்புடன் கூடிய இலாகா தருமாறு அவர் கேட்டுக் கொண்டுள்ளார் என்றும் அந்த பத்திரிகையில் தகவல் வெளியாகி உள்ளது. ஆனால் சோனியா காந்திக்கு, கருணாநிதி கடிதம் எழுதி அனுப்பி இருப்பதாக வெளியான தகவலை தி.மு.க. அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யவில்லை.

இந்த நிலையில் தயாநிதி மாறன் தனது வீட்டில் இருந்து சன் டி.வி. (பழைய அலுவலகம்), வரை அனுமதி பெறாமல் தரையைத் தோண்டி கண்ணாடி இழை கேபிள் போட்டதாக கூறப்பட்ட குற்றச்சாட்டும் விசுவரூபம் எடுத்துள்ளது. மத்திய மந்திரி பதவிக்காக கொடுக்கப்பட்ட அந்த வசதியை தயாநிதி மாறன் சன் டி.வி.க்கு பயன்படும் வகையில் தவறாக பயன்படுத்தியதாக அந்த குற்றச்சாட்டில் கூறப்பட்டுள்ளது.

இந்த விவகாரத்தில் தமிழக அரசு தகுந்த நடவடிக்கை எடுக்கும் என்று முதல்-அமைச்சர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.

மருத்துவப் படிப்பு : இன்னும் 599 எம்.பி.பி.எஸ்.,1000 பி.டி.எஸ். இடங்கள் உள்ளன.


தனியார் மருத்துவக் கல்லூரிகளில், அரசு ஒதுக்கீட்டில் 599 இடங்கள் காலியாக உள்ளன. தமிழகத்தில் மருத்துவப் படிப்புக்கு நடந்த முதல் கட்ட கவுன்சிலிங்கில் அரசு மருத்துவக் கல்லூரிகள் உள்ள 1724 இடங்கள் நிரம்பியுள்ளன.

தமிழ்நாட்டில் 17 அரசு மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. கடந்த ஆண்டு 8 தனியார் மருத்துவக் கல்லூரிகள் இருந்தன.

இந்த ஆண்டு கூடுதலாக பெரம்பலூர், சேலம் (அன்னபூர்ணா மருத்துவக் கல்லூரி) ஆகிய இடங்களில் 2 கல்லூரிகளுக்கு அங்கீகாரம் கிடைத்துள்ளது. இதன்மூலம் தனியார் மருத்துவக் கல்லூரிகளின் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்து உள்ளது. இது தவிர ஒரு அரசு பல் மருத்துவக் கல்லூரியில் 85 இடங்கள் உள்ளன.

தனியார் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டில் இது வரை 599 இடங்கள் இன்னும் நிரப்பப்படவில்லை. காலியாக உள்ள இடங்களை நிரப்புவதற்கு ஜூலை 22ம் தேதிக்கு பிறகு 2வது கட்ட கவுன்சிலிங் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

தமிழக அரசு பல் மருத்துவக் கல்லூரியில் உள்ள 85 இடங்களில் 12 இடங்கள் மட்டுமே நிரம்பியுள்ளன. எஞ்சிய அரசு மற்றும் தனியார் பல் மருத்துவக் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டில் காலியாக உள்ள சுமார் 900 இடங்களை நிரப்ப 2வது கவுன்சிலிங் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.