Thursday, July 7, 2011

தலைகுனிந்த தயாநிதியின், ராஜினாமா !

இன்று மாலை முதல், புதுடில்லி அரசியல் வட்டாரங்களில் இதனால் மிகவும் பரபரப்பாகக் காணப்படுகின்றது.

இன்று மாலைதான் தயாநிதி தனது ராஜினாமாவைக் கொடுத்திருந்தாலும், ராஜினாமா எபிசோட் இன்று காலையிலேயே தொடங்கிவிட்டது. காங்கிரஸ் வட்டாரங்களுடன் நெருங்கிய தொடர்புடைய பத்திரிகையாளர்கள் சிலர் இன்று காலை முதலே ராஜினாமா செய்திக்காகக் காத்திருந்தனர்.

இதற்குகூட, தலைகுனியாவிட்டால் எப்படி?

“இருந்து பாருங்கள், இன்று மாலைக்குள் உங்களுக்கு ராஜினாமா செய்தி வந்துவிடும்” என்று எம்முடன் தொடர்பில் இருக்கும் ஹிந்தி மாலைப்பத்திரிகை ஒன்றின் நாடாளுமன்றச் செய்தியாளர் ஒருவர் கிசுகிசுத்திருந்தார்.

பிரதமரின் அலுவலகத்தில் ஆட்களை வைத்திருக்கும் சில பத்திரிகையாளர்கள், காலையிலிருந்தே உள்ளங்கையில் செல்போனை வைத்துப் பார்த்தபடி இருந்தனர்.

இன்று காலை 7 மணியிலிருந்து, ராஜினாமா செய்யப்போகும் செய்தி கிட்டத்தட்ட கன்பர்ம்ட் ஆன நிலையிலேயே, குறிப்பிட்ட சில பத்திரிகையாளரிடையே இருந்தது.

ஆனால், எல்லோரையும் தலைகீழாகக் குழப்பத்தில் தள்ளிவிட்ட சம்பவம் ஒன்று, காலையிலேயே நடந்தது!

அமைச்சரவைக் கூட்டத்தில் கலந்துகொள்ள ஜாம்ஜாம் என்று வந்திறங்கியவர், சாட்சாத் தயாநிதி மாறனேதான்!

இதைத் தொடர்ந்து, பத்திரிகையாளரிடையே குழப்பம். இன்று ராஜினாமா செய்யவுள்ளதாக கிசுகிசுக்கப்படும் ஒருவரை, அமைச்சரவைக் கூட்டம் நடைபெறும் இடத்தில் யாரும் எதிர்பார்க்காததால் ஏற்பட்ட மகா குழப்பமான நிமிடங்கள் அவை.

தயாநிதியின் ராஜினாமா பற்றிக் கொடுத்த தகவல்கள் பொய் என்று சில பத்திரிகையாளர்கள் தங்களுக்கிடையே திட்டிக் கொண்ட சம்பவங்களும் நடந்தன.

“இருங்கள்.. இருங்கள்.. பொறுமையாக இருங்கள்.. நடப்பதைப் பாருங்கள்” என்றார் நமது தொடர்பாளர்.

திடீரென மீண்டும் பரபரப்பு. அமைச்சரவைக் கூட்டத்தில் கலந்துகொண்ட தயாநிதி மாறன், பாதியிலேயே அவசர அவசரமாக வெளியேறினார் என்ற செய்தி வந்தபோது ஏற்பட்ட பரபரப்பு அது.

அந்த நிமிடத்தில், மீண்டும் உயிர்பெற்றது ராஜினாமா செய்தி.

அமைச்சராக உள்ளே சென்றவர், வெளியே வரும்போது...

மதியம், பிரதமர் அலுவலகத்திலிருந்து வந்தது அடுத்த தகவல். தயாநிதி மாறன் வந்திறங்கி உள்ளே சென்றிருக்கிறார் என்றது அந்தச் செய்தி. இன்று தயாநிதி பிரதமரைச் சந்திக்கும் அப்பாயின்ட்மென்ட் ஏதும் இருக்கவில்லை. ஆனாலும், வந்திறங்கிய சிறிது நேரத்திலேயே பிரதமரின் அறைக்குள் அவர் அனுமதிக்கப்பட்டார்.

பிரதமரின் அறைக்குள் தயாநிதி 5 நிமிடங்கள்கூடத் தாமதிக்கவில்லை. போன வேகத்திலேயே வெளியே வந்தார்.

காலையிலிருந்து இந்த விஷயங்களையெல்லாம் ஃபாலோ பண்ணிக்கொண்டிருந்த பத்திரிகையாளர்கள் சிலர், தயாநிதி மாறன் பிரதமரின் அலுவலகக் கட்டடத்துக்கு வெளியே ஆஜர்!

வெளியே வந்த தயாநிதி, தலைகுனிந்த நிலையில் இறுகிய முகத்துடன் காணப்பட்டார். பத்திரிகையாளர்கள் கேட்ட கேள்விகள் எதற்கும் அவரிடமிருந்து பதில் வரவில்லை. வேகமாக அந்த இடத்தைவிட்டு அகன்றார். அவரைப் பின்தொடர்ந்து வந்த அதிகாரி ஒருவர் மாத்திரம், பத்திரிகையாளர்களுக்கு கண்களால் ஜாடை காட்டிவிட்டுச் சென்றார்.

அடுத்த நிமிடமே, ஒற்றை வார்த்தையாக, “தயாநிதி ராஜினாமா” என்ற செய்தி, பத்திரிகை, டீ.வி. அலுவலகங்களுக்குப் பறந்தது.

இதில் பெரிய வேடிக்கை என்னவென்றால், பிரதமரின் அலுவலகத்தில் செய்தி உறுதிப் படுத்தப்படும் முன்னரே, “தயாநிதி ராஜினாமா” என்று ஹெட்லைன் நியூஸ்கள் அலறத் தொடங்கிவிட்டன. அந்தளவுக்கு எல்லோரும் தெளிவாக இருந்தார்கள்!

டில்லியிலிருந்து சம்பத் குமாரின் குறிப்புகளுடன், ரிஷி.

நன்றி - விறுவிறுப்பு.காம்.

No comments: