Thursday, July 7, 2011

ஸ்பெக்ட்ரம் ஊழல்: தயாநிதி மாறன் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் .

ஸ்பெக்ட்ரம் ஊழல்: தயாநிதி மாறன்  அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார்

மத்திய மந்திரி தயாநிதி மாறன் 2004-ம் ஆண்டு முதல் 2007-ம் ஆண்டு வரை தொலைத் தொடர்புத்துறை மந்திரியாக இருந்தபோது 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் முறைகேடு செய்த தாக சி.பி.ஐ. குற்றம் சாட்டியுள்ளது.

சன் டி.வி. குழும நிறுவனங்கள் ஆதாயம் பெற வேண்டும் என்ற ஒரே நோக்கத்துடன் அவர் தனது பதவியை தவறாக பயன்படுத்தியதாக குற்றச்சாட்டுகளில் கூறப்பட்டுள்ளது.

ஏர்செல் நிறுவன உரிமையாளர் சிவசங்கரன் ஸ்பெக்ட்ரம் உரிமம் கேட்டு விண்ணப்பித்த போது தயாநிதிமாறன் சுமார் 2 ஆண்டுகளாக உரிமம் கொடுக்காமல் இழுத்தடித் தார். இதையடுத்து சிவசங்கரன் ஏர்செல் நிறுவன பங்குகளை மலேசியாவை சேர்ந்த மேக்சிஸ் குழுமத்துக்கு விற்றார். தயாநிதிமாறன் மிரட்டியதால் தனது நிறுவன பங்குகளை விற்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டதாக சமீபத்தில் சி.பி.ஐ.யிடம் சிவசங்கரன் வாக்குமூலம் அளித்தார்.

இந்த குற்றச்சாட்டுக்களை தயாநிதி மாறன் மறுத்தார். ஆனால் தயாநிதிமாறன் முறைகேடாக நடந்து கொண்டதற்கான ஆதாரங்கள் சிக்கியது. அந்த ஆதாரங்களை பொது நலன் வழக்குகளுக்கான பொது மையம் (சி.பி.ஐ.எல்.) என்ற அமைப்பு சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்தது.

ஏர்செல் நிறுவனத்தின் பங்குகள் மலேசியாவின் மேக்சிஸ் குழுமத்துக்கு கைமாறிய சில தினங்களில், அந்த நிறுவனத்துக்கு 14 ஸ்பெக்ட்ரம் உரிமங்களை தயாநிதிமாறன் ஒதுக்கீடு செய்து கொடுத்தார். அதற்கு பிரதிபலனாக ரூ.599.01 கோடியை சன் டி.வி. குழும நிறுவனங்களில் மேக்சிஸ் நிறுவனம் முதலீடு செய்தது. இந்த தகவல்களை ஏற்கனவே பொது நல வழக்குகளுக்கான பொது மையம் சுப்ரீம் கோர்ட்டில் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் நேற்று சி.பி.ஐ.யும் தனது 71 பக்க அறிக்கையில் இந்த தகவல்களை சுப்ரீம் கோர்ட்டில் சமர்ப்பித்தது. ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் தயாநிதிமாறன் செய்த முறைகேடுகளை சி.பி.ஐ. மிகத் தெளிவாக தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

இதையடுத்து 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு ஊழல் தொடர்பான விசாரணை வளையத்துக்குள் தயாநிதி மாறன் கொண்டு வரப்பட்டுள்ளார். அவரிடம் விசாரணை நடத்துவதற்கான எல்லா ஏற்பாடுகளையும் சி.பி.ஐ. மூத்த அதிகாரிகள் செய்து வருகிறார்கள். அடுத்தக் கட்டமாக 2004-ம் ஆண்டு முதல் 2007-ம் ஆண்டு வரை ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் எத்தனை ஆயிரம் கோடி ரூபாய் கைமாறி இருக்கலாம் என்ற கணக்கெடுப்பு நடந்து வருவதாக சி.பி.ஐ. வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. அதை அடிப்படை யாக வைத்து அடுத்த குற்றப்பத்திரிகையில் தயாநிதி மாறன் பெயர் சேர்க்கப்படும் என்று கூறப்படுகிறது.

சி.பி.ஐ.யின் இத்தகைய நடவடிக்கைகளால் தயாநிதி மாறனை மத்திய மந்திரி பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்தது. பா.ஜ.க., இடதுசாரி கட்சிகள் வற்புறுத்தி வருகின்ற போதிலும் தயாநிதி மாறன் பதவி விலகவில்லை.

சி.பி.ஐ. விசாரணை தீவிரமாகும் பட்சத்தில் தயாநிதி மாறன் மத்திய மந்திரியாக இருந்தால், நேர்மையான, முழுமையான விசாரணை நடைபெற முடியாமல் போகலாம். எனவே தயாநிதிமாறன் தார்மீக பொறுப்பு ஏற்று பதவியை விட்டு விலக முன்வரவேண்டும். அவர் பதவி விலகாவிட்டால் பிரதமர் அவரை மந்திரி சபையில் இருந்து நீக்கி ஜனநாயக மாண்பை காக்க வேண்டும் என்று எதிர்க் கட்சித் தலைவர்கள் கூறினார்கள்.

தயாநிதி மாறன் விஷயத்தில் தொடர்ந்து மவுனத்தை கடைபிடித்தால் பெரிய அளவில் நாடு தழுவிய அளவில் போராட்டம் நடத்துவோம் என்று எதிர்க்கட்சிகள் எச்சரித்துள்ளன. இது மத்திய அரசுக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது.

எந்த ஒரு பிரச்சினைக்கும் வாயைத் திறந்து பதில் சொல்லாத பிரதமர் மன்மோகன்சிங் சி.பி.ஐ.யின் சரமாரி குற்றச்சாட்டுக்களால் தவிப்புக்குள்ளாகி இருக்கிறார். நேற்று காங்கிரஸ் உயர்நிலைக் குழுவை கூட்டி விவாதித்தார். தயாநிதி மாறன் செய்துள்ள முறைகேடுகள் குறித்து ஆதாரங்களுடன் வரும் தகவல்கள் குறித்து சோனியாவுடன் அவர் ஆலோசனை நடத்தினார். இந்த விவகாரத்தில் விரைவில் உரிய முடிவு எடுக்குமாறு தி.மு.க.வை கேட்டுக் கொள்வது என காங்கிரஸ் தலைவர்கள் தீர்மானித்தனர். அதன்படி தி.மு.க.விடம் காங்கிரஸ் தலைவர்கள் தொடர்பு கொண்டு பேசியதாக தெரிகிறது.

இதற்கிடையே இன்று பகல் 11 மணிக்கு மத்திய மந்திரிசபை கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் தயாநிதிமாறனும் கலந்து கொண்டார். அப்போது அவர் தனது பதவியை ராஜினாமா செய்து பிரதமர் மன் மோகன்சிங்கிடம் கடிதம் கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தயாநிதிமாறன் ராஜினாமா கடிதம் எதுவும் கொடுக்கவில்லை. மந்திரிசபை கூட்டம் முடிந்ததும் அவர் ரேஸ் கோர்ஸ் இல்லத்தில் இருந்து காரில் ஏறி புறப்பட்டு சென்றார்.

இன்று மதியம் 1.30 மணி அளவில் தயாநிதி மாறன் திடீரென மீண்டும் பிரதமரை சந்திக்க ரேஸ் கோர்ஸ் இல்லத்துக்கு சென்றார். 1.45 மணிக்கு பிரதமர் மன்மோகன்சிங்கை சந்தித்தார். அவர்கள் இருவரும் சுமார் 5 நிமிடம் பேசிக் கொண்டிருந்தனர். அப்போது தயாநிதி மாறன் தனது மந்திரி பதவியை ராஜினாமா செய்து கடிதம் கொடுத்தார்.

அவரது ராஜினாமாவை பிரதமர் மன்மோகன்சிங் ஏற்றுக்கொண்டார். ஸ்பெக்ட்ரம் ஊழல் விவகாரத்தில் மத்திய மந்திரி பதவியை இழக்கும் 2-வது நபர் தயாநிதி மாறன் என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக மத்திய மந்திரி சபையில் இருந்து தயாநிதி மாறனை நீக்க சம்மதம் தெரிவித்து சோனியா காந்திக்கு தி.மு.க. தலைவர் கருணாநிதி கடிதம் எழுதி அனுப்பி உள்ளதாக டெல்லியில் இருந்து வெளியாகும் பயோனீர் என்ற ஆங்கிலப் பத்திரிகையில் தகவல் வெளியாகியுள்ளது.

அந்த கடிதத்தை டி.ஆர்.பாலு எம்.பி. இன்று (வியாழன்) சோனியாவிடம் ஒப்படைப்பார் என்று அதில் கூறப்பட்டுள்ளது. மேலும், ராஜாங்க நிதி மந்திரி பழனி மாணிக்கத்தையும் பதவியில் இருந்து நீக்கி விட்டு, டி.ஆர்.பாலு, டி.கே.எஸ்.இளங்கோவன், ஏ.கே.எஸ்.விஜயன் ஆகியோரை மந்திரிகள் ஆக்க கருணாநிதி அந்த கடிதத்தில் வேண்டுகோள் விடுத்துள்ளதாக அந்த தகவலில் குறிப்பிட்டுள்ளது.

மந்திரிகளுக்கு என்ன இலாகா வேண்டும் என்று கருணாநிதி குறிப்பிடவில்லை என்றும், ஆனால் டி.கே.எஸ். இளங்கோவனுக்கு தனிப் பொறுப்புடன் கூடிய இலாகா தருமாறு அவர் கேட்டுக் கொண்டுள்ளார் என்றும் அந்த பத்திரிகையில் தகவல் வெளியாகி உள்ளது. ஆனால் சோனியா காந்திக்கு, கருணாநிதி கடிதம் எழுதி அனுப்பி இருப்பதாக வெளியான தகவலை தி.மு.க. அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யவில்லை.

இந்த நிலையில் தயாநிதி மாறன் தனது வீட்டில் இருந்து சன் டி.வி. (பழைய அலுவலகம்), வரை அனுமதி பெறாமல் தரையைத் தோண்டி கண்ணாடி இழை கேபிள் போட்டதாக கூறப்பட்ட குற்றச்சாட்டும் விசுவரூபம் எடுத்துள்ளது. மத்திய மந்திரி பதவிக்காக கொடுக்கப்பட்ட அந்த வசதியை தயாநிதி மாறன் சன் டி.வி.க்கு பயன்படும் வகையில் தவறாக பயன்படுத்தியதாக அந்த குற்றச்சாட்டில் கூறப்பட்டுள்ளது.

இந்த விவகாரத்தில் தமிழக அரசு தகுந்த நடவடிக்கை எடுக்கும் என்று முதல்-அமைச்சர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.