Wednesday, May 25, 2011

கனிமொழி கைதும் அரசியல் வெளிச்சமும்.

குட்டி ரேவதி.


கனிமொழி கைது செய்யப்பட்டது, அவர் இழைத்த குற்றத்திற்கானதாக ஒரு புறம் இருந்தாலும், எனக்கு அதனுடன் பிணைந்த வேறு பல விஷய முடிச்சுகளையும் உடன் இழுத்து வருகிறது.

அரசியல் நோக்கிய நகர்வைப் பெண்கள் எளிதாக எடுத்து வைக்கமுடிவதில்லை. குடும்பம், தான் சார்ந்துள்ள சமூகம் போன்ற வெளிகளைத் தாண்டி, அல்லது அந்த வெளிகளைத் தனக்கான அளவில் சமாதானப்படுத்திவிட்டு, நிறைவு பெறச் செய்து விட்டுத்தான் அரசியல் என்ற ஆண்களுக்கு மட்டுமே என இருந்த வெளியை எட்டிப் பிடிக்க முடிந்தது. இன்று அது, தன் தந்தை, சகோதரர், கணவர் என்று யார் மூலமாகத் தனக்குச் சாத்தியப்பட்டாலும், அது இன்னும் ஆண்களின் வெளியாகவே இருப்பதைத்தான் உணர்த்துகிறது.

அந்த இடத்தின் மையம் வரை செல்ல முடிந்த பெண்கள், தங்கள் அணுகு முறைகளிலும் செயல்பாடுகளிலும் ஆண்களைப் போலவே நடந்து கொள்வது சமூகத்தில் தன்னிருப்பு அல்லது தன்னையொத்த பெண்களின் நிலைமை குறித்த அவர்களின் அறியாமையையும் மடமையையும் தான் உணர்த்துகிறது.

சமூகத்தில், அரசியல் என்னும் மனித உரிமைகளைச் சட்டப்பூர்வமாகச் சாத்தியப்படுத்துவதற்கான வாய்ப்பை வழங்கக் கூடிய இடத்திற்கு சென்று சேரும் வாய்ப்புக் கிட்டிய பெண்கள் இப்படி தங்களின் செயல்களுக்கே இரையாகிப்போவது மற்ற பெண்களுக்குச் சோர்வையும், அவர்களின் நடத்தைகளில் இடர்ப்பாட்டையும் தரும். தன் தலையில் தானே மண்ணை வாரித் தூற்றிக் கொண்டது போல.

ஒரு பெண்ணியலாளர் இவ்வாறு கூறினார். “அரசியலுக்குச் செல்ல முடிந்த பெண்கள், இரு மடங்கு பொறுப்புகளையும் கடமைகளையும் நிறைவேற்ற வேண்டியிருக்கிறது. ஒன்று, தனக்கான ஆளுமையைக் கட்டியெழுப்பிப் பேணுவதன் வழியாக, தன் சுயமரியாதையை நிலைநாட்டிக் கொள்வது. இன்னொன்று, தன்னையொத்த பெண்களின் உரிமைகளுக்கான பிரதிநிதியாகி நின்று போராடுவது”.

கனிமொழி, மற்ற பெண்களுக்கான பிரதிநிதியாகத் தன்னை நியாயப்படுத்தவும் இல்லை. தன் சுயமரியாதையையும் திடப்படுத்திக் கொள்ளவும் இல்லை. இது, பிற ஆணாதிக்க அரசியல்வாதிகள் விரித்த வலையாகவும் இருக்கலாம். அதில், கனிமொழி இரையாக மாட்டிக்கொண்டார் என்றும் சொல்லலாம். என்றாலும் அத்தகையதோர் அறியாமையைத் தனக்குள்ளே ஊட்டமளித்து வளர்த்து வந்தது யார் குற்றம்?

கனிமொழி, பெண்களின் வரலாற்றில் ஒரு தவறான அரசியல் குறியீடு ஆகிறார். அவர் ஏற்படுத்திய அலை, அரசியலை நோக்கி நகர முயற்சிக்கும் ஒவ்வொரு பெண்ணையும் தாக்கும், வீழ்த்தும். ஆதிக்க சாதியல்லாத ஒரு சமூகத்திலிருந்து அரசியல் பிரதிநிதியாக விரும்பும் ஒவ்வொரு பெண்ணும் இனி முதல் அடியிலிருந்து தான் தன் பயணத்தைத் தொடங்கவேண்டியிருக்கும் நிர்ப்பந்தத்தை அளிக்கும். இது பொது மனித உளவியலை ஒரு நோயைப்போல தொடர்ந்து ஆட்கொள்ளும்.

அரசியலின் நீதி மன்றத்தில், “அவர் பெண்!” என்றாலும், “அவர் ஒரு குழந்தைக்குத் தாய்!” என்றாலும் அச்சொற்கள் அர்த்தம் பெறாது. எதிரொலிக்காது. ஏனெனில், ஏற்கெனவே, தன் குடும்பம், சமூகம் இரண்டையும் கடந்து தான், அதன் ஆழிகளைக் கடக்க முடிந்ததால் தான் அரசியலுக்கு வந்திருக்கிறார். இனி, அவர் எல்லா வகையிலும் ஒரு தனி மனுஷி!

“படித்தவன் சூதும் வாதும் பண்ணினால் போவான் போவான்! ஐயோவென்று போவான்”. கவிஞன் பாரதி சொன்னது. கனிமொழியின் இந்நிலைமை வேதனையை அளிக்கிறது!

அதிமுகவை வெற்றி பெறச் செய்தவர்கள் வருத்தப்பட வேண்டும் : கருணாநிதி.


சமச்சீர் கல்வி திட்டம் நிறுத்தப்பட்டிருப்பதால் தமிழகத்தின் எதிர்கால மாணவர் சமுதாயம் பாதிப்புக்குள்ளாகும் என்று திமுக தலைவர் கருணாநிதி கூறினார்.

சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்துக்குப் பின் அவர் அளித்த பேட்டி:

கேள்வி: சமச்சீர் கல்வியை அரசு நிறுத்தி வைத்திருக்கிறதே?

பதில்: சமச்சீர் கல்விக்கு தடை விதித்துள்ளது அதிமுக அரசு. சமச்சீர் கல்வித் திட்டம் மாணவர்கள், பெற்றோர்கள் என எல்லா தரப்பினரிடமும் ஆராய்ந்து, பல்வேறு குழுவினரிடம் கருத்து கேட்கப்பட்டு அமல்படுத்தப்பட்டது. இந்தத் திட்டத்தை ரத்து செய்வதால் மாணவர்கள் எதிர்காலம் பாதிக்கப்படும்.

கேள்வி: டெல்லி சென்ற நீங்கள் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை சந்திக்கவில்லையே?

பதில்: டெல்லியில் என்னை மத்திய மந்திரிகள் குலாம் நபி ஆசாத், ப.சிதம்பரம் ஆகியோர் சந்தித்தனர். காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியே அழைப்பு விடுத்தாலும் நான் அவரை சந்திக்க மாட்டேன். கனிமொழி சிறையில் உள்ள நிலையில், சோனியாவை சந்திப்பது முறையாக இருக்காது என்பதால் சந்திக்கவில்லை.

கேள்வி: சட்ட மேலவை வராது என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்திருக்கிறாரே?

பதில்: தலைமை செயலகத்தை புனித ஜார்ஜ் கோட்டைக்கு மாற்றியதும், மேலவை வராது என்பதும் எதிர்பார்த்ததுதான்.

கேள்வி: திமுக ஆட்சியின் போது சொத்துக்கள் அபகரிக்கப்பட்டதாகவும், அவை பறிமுதல் செய்யப்படும் என்றும் ஜெயலலிதா கூறி இருக்கிறாரே?

பதில்: அதில் ஆட்சேபனை எதுவும் இல்லை. அப்படி சொத்து அபகரிக்கப் பட்டிருந்தால், அதை உரியவர்களிடம் ஒப்படைப்பதில் எந்த ஒரு தவறும் இல்லை.

கேள்வி: திமுக சார்பில் போராட்டம் நடத்தப்படுமா?

பதில்: இப்போது என்ன அவசரம்.

கேள்வி: திமுக தொண்டர்கள் விரக்தியில் இருக்கிறார்களா?

பதில்: தொண்டர்கள் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்று ஏற்கனவே முரசொலியில் நானும் அன்பழகனும் வேண்டுகோள் விடுத்திருக்கிறோம்.

கேள்வி: பள்ளிக் கட்டண விவகாரத்தில் அரசு நேரடியாக தலையிடாது என்று ஜெயலலிதா கூறியுள்ளாரே?

பதில்: பத்திரிகையாளர்களாகிய நீங்கள் தலையிடுங்கள்.

கேள்வி: திமுக ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட பல்வேறு நலத்திட்டங்களை அதிமுக ஆட்சி ரத்து செய்துள்ளதே?

பதில்: தேர்தலில் அதிமுகவுக்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்தவர்கள் இதற்காக வருத்தப்பட வேண்டும் என்றார்.

மேலும் அவர் கூறுகையில், ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, சட்டரீதியாக நீதி நிலைநாட்டப்படும் என்ற உறுதியுடனும், துணிவுடனும் இருக்கிறார்.

சபாநாயகர் என்று தேதியை முடிவு செய்கிறாரோ அன்று நான் சட்டமன்ற உறுப்பினராக பதவியேற்றுக் கொள்வேன்.

அரசின் நல்ல திட்டங்களுக்கு திமுக நிச்சயம் ஒத்துழைப்பு நல்கும். புதிதாக பதவியேற்ற அமைச்சர் மரியம் பிச்‌சை விபத்தில் இறந்தததற்கு திமுக தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறது என்றார்.

அரசியல் காழ்ப்புணர்ச்சிக்காக சமச்சீர் கல்வியை நிறுத்தக் கூடாது : கல்வியாளர்கள் வேண்டுகோள்.

விருத்தாசலத்தில் இலவச கல்வி உரிமை மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் கட்டண கொள்ளையில் ஈடுபடும் தனியார் பள்ளிகளுக்கு கண்டனம் தெரிவிக்கப் பட்டது. சமச்சீர் கல்வியை தடை செய்யாமல் உடனடியாக அமல்படுத்தக் கோரியும் இந்த மாநாட்டில் வலியுறுத்தப்பட்டது.

இந்த மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய கல்வியாளர் ராஜகோபாலன், நல்ல கல்வியை அரசினால் தரமுடியும். சமச்சீர் கல்வி திட்டம் பல வல்லுநர்களால் ஆய்வு செய்யப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டது. இந்த சமச்சீர் கல்வித் திட்டம் அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக நிறுத்தி வைக்கக் கூடாது.

8ஆம் வகுப்பு பாடத்தில் குடும்ப பட்ஜெட் என்ற பாடம் உள்ளது. அதில் ஒரு குடும்ப தலைவனின் வருமானம் எவ்வளவு, செலவு எவ்வளவு என்ற விபரங்கள் இருக்கின்றன. ஒரு குடுத்துக்கு ஆகும் செலவுகளை 8ஆம் வகுப்பிலேயே ஒரு மாணவன் தெரிந்துகொண்டால், அவன் தன்னுடைய எதிர்காலத்தை எப்படி அமைத்துக்கொள்ள வேண்டும் என்ற முடிவுக்கு வந்துவிடுவான்.

சமச்சீர் கல்வி மாணவர்களின் முன்னேற்றத்திற்கு பயன்படும் என்பதால் அதனை அரசியல் காழ்ப்புணர்ச்சிக்காக நிறுத்தி வைக்கக் கூடாது என மீண்டும் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன் என்று பேசினார்.

இதேபோல் இந்த மாநாட்டை ஏற்பாடு செய்திருந்த செந்தாமரைக் கண்ணன், வெங்கடேசன், ராஜு ஆகியோரும், மாணவர்களின் முன்னேற்றத்திற்கு சமச்சீர் கல்வியை அமல்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தி பேசினர்.

தரமற்ற புத்தகங்களை வழங்குவதாக தனியார் பள்ளிகள் மீது குற்றச்சாட்டு.

கடலூரில் ஆர்ப்பாட்டம்

கட்டாய இலவசக் கல்வித் சட்டத்தை மீறிச் செயல்படும் கடலூர் மாவட்டத் தனியார் பள்ளிகளை கண்டித்தும், மெட்ரிக் பள்ளிகள் தனியாரிடம் இருந்து தரமற்ற பாடப் புத்தகங்களை வாங்கி மாணவர்களுக்கும் பெற்றோருக்கும் சுமைகளை ஏற்றுகின்றன என்றும் கடலூரில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தமிழ்நாடு நுகர்வோர் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் எம்.நிஜாமுதீன் தலைமையில் இந்த ஆர்ப்பாட்டத்தில், நகரில் உள்ள பல்வேறு பொதுநல அமைப்புகளின் பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் பேசியதாவது,

குழந்தைகள் இலவசக் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் 2009 என்ற மத்திய அரசின் சட்டம் 6 முதல் 14 வயது வரையிலான அனைத்து குழந்தைகளுக்கும் இலவசக் கல்வி உரிமையை வழங்குகிறது.

இச்சட்டத்துக்கு முரணாக கடலூரில் கட்டாய நன்கொடை, மறைமுகக் கட்டணங்கள் வசூலிக்கப்படுகிறது. கட்டணங்களுக்கு ரசீது வழங்கப்படுவதில்லை, ஒடுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட மற்றும் வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ள மாணவர் களுக்கு 25 சதவீதம் ஒதுக்கீட்டை கடலூர் பள்ளிகளில் அளிக்கவில்லை.

சட்டவிரோதமாக நுழைவுத் தேர்வுகள், பெற்றோருக்கு அறிவுச்சோதனை போன்ற வடிகட்டும் தேர்வுகளை நடத்திக் கொண்டிருக்கின்றன. மெட்ரிக் பள்ளிகள் தனியாரிடம் இருந்து தரமற்ற பாடப் புத்தகங்களை வாங்கி மாணவர்களுக்கும் பெற்றோருக்கும் சுமைகளை ஏற்றுகின்றன. எனவே இத்தகைய விதிமீறல்களை செய்துவரும் கடலூர் மாவட்ட தனியார் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

சோனியா காந்தியே அழைத்தாலும் சந்திக்க மாட்டேன் - கருணாநிதி.


சட்டமேலவை ரத்து, சட்டசபை மாற்றம், சமச்சீர் கல்வி நிறுத்தம்
எதிர்பார்த்ததுதான் : கலைஞர்.

சமச்சீர் கல்வி திட்டம் நிறுத்தப்பட்டிருப்பதால் தமிழகத்தின் எதிர்கால மாணவர் சமுதாயம் பாதிப்புக்குள்ளாகும் என்று திமுக தலைவர் கலைஞர் கூறியுள்ளார்.

சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய திமுக தலைவர் கலைஞர்,

சமச்சீர்கல்வி தலைசிறந்த கல்வியாளர்களால் அனைத்து தரப்பினரின் ஒத்துழைப்போடு அமல்படுத்தப்பட்டது. தற்போது அதிமுக அரசு சமச்சீர் கல்வியை ரத்து செய்திருப்பதால், எதிர்கால மாணவர் சமுதாயம் பாதிப்புக்குள்ளாகும் என்றார்.

டெல்லி பயணம் குறித்த கேள்விக்கு பதில் அளித்த கலைஞர், நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, சட்ட ரீதியாக நீதி நிலைநாட்டப்படும் என்ற உறுதியுடனும், துணிவுடனும் இருக்கிறார் என்றார்.

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியே அழைப்பு விடுத்தாலும் நான் அவரை சந்திக்க மாட்டேன். கனிமொழி சிறையில் உள்ள நிலையில், சோனியாவை சந்திப்பது சரியாக இருக்காது.

தலைமைச் செயலகத்தை அதிமுக அரசு மீண்டும் புனித ஜார்ஜ் கோட்டைக்கு மாற்றியது, சட்ட மேலவையை ரத்து செய்தது உள்ளிட்ட நடவடிக்கைகள் ஏற்கனவே எதிர்பார்த்ததுதான் என்றார்.

டெல்லி உயர்நீதிமன்ற வளாகத்தில் குண்டுவெடிப்பு?


டெல்லி உயர்நீதிமன்ற வளாகத்தில் குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளது. வாயில் எண் 7 அருகே குண்டு வெடித்துள்ளது. உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை. குண்டு வெடிப்புக்கான காரணமும் தெரியவில்லை.

சம்பவ இடத்துக்கு 4 தீயணைப்பு வண்டிகள் வந்தன. பார்க்கிங் ஏரியா அருகே குண்டு வெடித்தது. பார்க்கிங் ஏரியாவில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த போர்டு பிகோ காரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த பிளாஸ்டிக் பையில் குண்டு இருந்தது.

குண்டு வெடிப்பு நடந்த இடத்தில் பயங்கரவாத தடுப்பு பிரிவு போலீஸ் மற்றும் டெல்லி போலீசார் சோதனை மேற்கொண்டுள்ளனர்.

சிறிய ரக குண்டு வெடித்ததை தொடர்ந்து டெல்லி ஐகோர்ட் வளாகத்தில் பாதுகாப்பு மேலும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

தங்கபாலு ராஜினாமாவை காங். மேலிடம் ஏற்கவில்லை .

தங்கபாலு ராஜினாமாவை    காங். மேலிடம் ஏற்கவில்லை

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் தங்கபாலுவுக்கு கட்சியில் பெரும் எதிர்ப்பு கிளம்பியது. தமிழக சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் 63 இடங்களில் போட்டியிட்டது. ஆனால் 5 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது. தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் தங்கபாலுவின் நடவடிக்கையால்தான் காங்கிரஸ் கட்சிக்கு பெரும் தோல்வி ஏற்பட்டது என்று குற்றச்சாட்டு கூறப்பட்டது.

இந்த நிலையில் தோல்விக்கு பொறுப்பு ஏற்று தனது தலைவர் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார். ராஜினாமா கடிதத்தையும் கடந்த 13-ந் தேதி டெல்லி மேலிடத்துக்கு அனுப்பி வைத்தார். இது போல் கேரள மாநில காங்கிரஸ் தலைவர் ரமேஷ் சென்னிதாலாவும், எதிர்பார்த்த வெற்றி கிடைக்காததால் தனது பதவியை ராஜினாமா செய்வதாக கடிதம் அனுப்பி உள்ளார். தமிழ்நாட்டில் காங்கிரஸ் தோல்விக்கு காரணம் என்ன என்பது குறித்து மேலிடம் ஆலோசனை நடத்தி வருகிறது.

கேரளாவில் எதிர்பார்த்த அளவு காங்கிரஸ் வெற்றி பெறாதது ஏன் என்பது குறித்தும் மேலிட தலைவர்கள் ஆலோசித்து வருகிறார்கள். தமிழ்நாட்டில் காங்கிரஸ் தோல்விக்கும், கேரளாவில் அதிக வெற்றி கிடைக்காததற்கும் தனிப்பட்ட முறையில் மாநில தலைவர்களை குறை சொல்ல முடியாது. எனவே 2 ராஜினாமா கடிதங்களையும் தற்போது ஏற்பது இல்லை என்று கட்சி மேலிடம் முடிவு செய்துள்ளதாக டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. என்றாலும், தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சியை வளர்க்க பல்வேறு அதிரடி நடவடிக்கைகள் தேவை. அதற்கு புதிய தலைவர் அவசியம். ஆகவே தமிழ்நாடு காங்கிரஸ் தலைவரை மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை பல தரப்பில் இருந்தும் டெல்லி மேலிடத்துக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே நிச்சயம் தமிழ்நாட்டில் காங்கிரஸ் தலைவர் மாற்றப்படுவார். தாமதம் ஆனாலும் மாற்றம் உறுதி என்று தமிழக காங்கிரஸ் மூத்த பிரமுகர் ஒருவர் கூறினார். இந்த நிலையில் தமிழக காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களின் கூட்டம் நேற்று தங்கபாலு தலைமையில் சத்தியமூர்த்தி பவனில் நடந்தது. எனவே மாற்றம் வராது. தங்கபாலு தலைவராக நீடிப்பார் என்று அவரது ஆதரவாளர்கள் கூறினார்கள்.

சென்னையிலிருந்து சேவையை தொடங்கும் இந்தியாவின் முதல் சொகுசு சுற்றுலா கப்பல்.


இந்தியாவின் முதல் சொகுசு சுற்றுலா கப்பல் அமீத் மெஜஸ்ட்டி வரும் ஜூன் மாதம் 9ந் தேதி தனது முதல் பயணத்தை சென்னையிலிருந்து தொடங்குகிறது.

ஐந்து நட்சத்திர வசதிகள் கொண்ட சொகுசு சுற்றுலா கப்பல்கள் மேலை நாடுகளில் வெகு பிரசித்தம். ஆனால், இதுபோன்ற சொகுசு கப்பல்கள் இந்தியாவில் இதுவரை இல்லை. அதேவேளை, வெளிநாடுகளிலிருந்து அவ்வப்போது ஒரு சில கப்பல்கள் மட்டும் இந்தியா வந்து செல்கின்றன.

மேலும், இந்தியர்கள் சுற்றுலா கப்பல்களில் செல்ல வேண்டும் என்றால் சிங்கப்பூர் உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு சென்றுதான் செல்ல முடிகிறது. இந்த குறையை போக்கும் வகையில், நாட்டின் முதல் சுற்றுலா சொகுசு கப்பலை சென்னையை சேர்ந்த அமீத் ஷிப்பிங் இந்தியா நிறுவனம் வாங்கியுள்ளது.

கிரிஸ் நாட்டை சேர்ந்த நிறுவனத்திடமிருந்து வாங்கப்பட்டுள்ள இந்த கப்பல் வரும் ஜூன் 8ந் தேதி சென்னை துறைமுகத்திற்கு வருகிறது. அன்று மறுநாள் முதல் தனது சுற்றுலா சேவையை துவங்க உள்ளது.

அமீத் ஷிப்பிங் நிறுவனத்தின் தலைவர் ராமச்சந்திரன் கூறியதாவது:

"இந்தியாவிலிருந்து ஆண்டுதோறும் 80,000 பேர் சொகுசு கப்பலில் சுற்றுலா செல்கின்றனர். ஆனால், அவர்கள் வெளிநாடுகளுக்கு சென்றுதான் சொகுசு கப்பலில் செல்ல முடியும். இந்த குறையை போக்கும் வகையில், சொகுசு கப்பல் சேவையை துவங்க இருக்கிறோம்.

ரூ.100 கோடி மதிப்புடைய இந்த சுற்றுலா கப்பல் கிரிஸ் நாட்டிலிருந்து வாங்கப் பட்டுள்ளது. இந்த கப்பல் கட்டப்பட்டு 35 ஆண்டுகள் ஆகிறது. இதற்கு 'அமீத் மெஜஸ்ட்டி' என்று பெயரிட்டுள்ளோம்.

சென்னையிலிருந்து மும்பை, கொச்சி, கோவா, அந்தமான், புக்கட், மாலத்தீவு, கொழும்பு ஆகிய இடங்களுக்கு சுற்றுலா சேவை துவங்கப்பட உள்ளது.

சென்னை துறைமுகத்தில் சுற்றுலா கப்பல் நிறுத்துவதற்கான டெர்மினல் வசதி ஏற்கனவே உள்ளது. தவிர, கோவா, மும்பை, கொச்சி ஆகிய துறைமுகங்களில் ரூ.480 கோடியில் இந்த கப்பலை நிறுத்துவதற்கான டெர்மினல் அமைக்கும் பணிகள் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த கப்பலில் 1,000 பயணிகள் செல்வதற்கு மத்திய அரசு அனுமதி வழங்கி உள்ளது. இந்த கப்பல் சுற்றுலா விரும்பிகளுக்கு நிச்சயம் புதிய அனுபவத்தை கொடுக்கும்," என்று கூறினார்.

ஹெல்மெட் அணிந்து வருபவர்களுக்கு மட்டும் பெட்ரோல்.


இருசக்கர வாகனங்களில் ஹெல்மெட் அணியாமல் வருபவர்களுக்கு பெட்ரோல் போடக்கூடாது என போபால் மாநகராட்சி நூதன உத்தரவை பிறப்பித்துள்ளது.

போபாலில் உள்ள அனைத்து பெட்ரோல் பங்குகளுக்கும் இதுபற்றிய உத்தரவு நகல் அனுப்பப்பட்டுள்ளதாக போபால் மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும், ஹெல்மெட் இல்லாமல் பெட்ரோல் போட வந்து அதிகாரிகளிடம் பிடிபடுபவர்களுக்கு ரூ.50 அபராதமும் விதிக்கப்படுகிறது.

இந்த உத்தரவால் பெட்ரோல் பங்குகளில் ஊழியர்களுக்கும், வாடிக்கையாளர் களுக்கும் அடிக்கடி வாக்குவாதம் ஏற்படுவது வாடிக்கையாகிவிட்டது. இதை அடுத்து, பெட்ரோல் பங்குகளில் தகராறு செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என போபால் மாநகர நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

மேலும், பெட்ரோல் பங்குகளில் தகராறு செய்யும் எண்ணத்துடன் கூட்டம் கூடுவதை தடுக்கும் வகையில், 144 தடை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து போபால் மாவட்ட ஆட்சியர் மனோஜ் வத்சவா கூறுகையில்," கடந்த 10ந் தேதி முதல் இந்த உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும், உத்தரவை மீறிய 45,000 பேரிடம் இதுவரை ரூ.20 லட்சம் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது," என்றார்.

மோட்டார்சைக்கிளில் ஹெல்மெட் அணிந்து வராத மாணவர்களை கல்லூரிக்குள் அனுமதிக்க கூடாது என அம்மாநில உயர்கல்வி துறை இதற்கு முன் அனைத்து கல்லூரிகளுக்கும் உத்தரவிட்டுள்ளது.

இதேபோன்று, நொய்டா மற்றும் பருக்காபாத் நகரங்களிலும் ஹெல்மெட் அணியாமல் மோட்டார்சைக்கிளில் வருபவர்களுக்கு பெட்ரோல் கொடுக்கக் கூடாது என சம்பந்தப்பட்ட நிர்வாகங்கள் பெட்ரோல் பங்குகளுக்கு உத்தரவிட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.

சட்டமேலவை கிடையாது : முதல்வர் ஜெயலலிதா.


தமிழகத்தில் சட்டமேலவை வருவதற்கு அதிமுக அரசு அனுமதிக்காது என்று முதல்வர் ஜெயலலிதா கூறினார்.

கேபிள் டி.வி. அரசுடைமை ஆக்கப்பட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

முதலமைச்சராகப் பதவி ஏற்ற பிறகு நிருபர்களை தலைமைச் செயலகத்தில் முதல் முறையாகச் சந்தித்த அவர், அவர்களின் கேள்விகளுக்குப் பதில் அளித்தார். வாரந்தோறும் செய்தியாளர்களைச் சந்திக்கப்போவதாகவும் அவர் தெரிவித்தார்.

"திமுக ஆட்சிக்கு வரும்போதெல்லாம், மேலவை அமைப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்கும். அதிமுக ஆட்சிக்கு வந்ததும் அதுகுறித்த தீர்மானங்களை ரத்து செய்யும்.

மேலவை தேவையில்லை என்கிற முடிவை அதிமுக நிறுவனர் எம்.ஜி.ஆர். எடுத்தார். அந்த முடிவில் எந்த மாற்றமும் இல்லை. தமிழகத்தில் மேலவை வராமல் இருக்க என்ன செய்ய வேண்டுமோ அதைச் செய்வோம்.

கேபிள் டி.வி. அரசுடமையாக்கப்படும் என அதிமுக தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, அரசுடமையாக்கப்படும். எப்போது எனக் கேட்டால், அதை நடைமுறைக்குக் கொண்டு வரும்போது உங்களுக்குத் தெரியும். அதிமுக அரசு பொறுப்பேற்று எட்டு நாட்கள்தான் ஆகிறது. அதற்குள்ளாக மிகவும் சீக்கிரமாக இந்தக் கேள்வியைக் கேட்கிறீர்கள்.

மாணவ - மாணவிகளுக்கு மடிக்கணினி (லேப்-டாப்) வழங்குவது உள்ளிட்ட திட்டங்கள் பற்றி ஆளுநர் உரையில் அறிவிப்புகள் வெளியாகும்.

அச்சுறுத்திப் பறித்த சொத்துகள் : திமுகவினர் ஆட்சி அதிகாரத்தைப் பயன்படுத்தி மக்களை அச்சுறுத்திப் பறித்துள்ள சொத்துகள் மீட்கப்படும் என அதிமுக தேர்தல் அறிக்கையிலே தெரிவிக்கப்பட்டுள்ளது. அது நிறைவேற்றப்படும்.

அலைக்கற்றை விவகாரம் : 2ஜி அலைக்கற்றை விவகார வழக்கு இப்போது சரியான திசையில் சென்று கொண்டிருக்கிறது. இப்போது எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை மூலம் நீதித் துறையின் மீது மக்களுக்கு நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.

பெண் என்பதால் ஒரு வழக்கில் இருந்து சலுகை காட்ட வேண்டும் என்கிற வாதமே தவறானது. பெண் என்பதற்காக கிரிமினல் வழக்குகளில் அவருக்கு சலுகை கோர உரிமையில்லை.

தலைமைச் செயலகம் : தலைமைச் செயலகத்தைக் கட்டுவதற்கு திமுக அரசு அதிக ஆண்டுகளை எடுத்துக் கொண்டது. ஆனால், அந்தக் கட்டடத்தை என்ன செய்வது என்பது குறித்து எங்களை சீக்கிரம் முடிவெடுக்கச் சொல்கிறீர்கள்.

பெட்ரோல் விலை உயர்வு : விலைவாசி உயர்வால் மக்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர். அனைத்துப் பொருள்களின் விலை உயர்வுக்கும் பெட்ரோல், டீசல் விலை உயர்வுதான் மூல காரணமாகும். எனவே அவற்றின் விலையை உயர்த்தும் முடிவை மத்திய அரசு கைவிட வேண்டும்.

தமிழகத்தில் புதிய அரசு பொறுப்பேற்று ஒருவாரம்தான் ஆகிறது. எனவே பெட்ரோல், டீசல் மீதான மாநில அரசின் விற்பனை வரியைக் குறைப்பது பற்றி இன்னும் ஆராயவில்லை. அதுகுறித்து ஆராய்ந்து முடிவெடுக்கப்படும்.

கட்டுமானப் பொருள்கள் மட்டுமின்றி ஒட்டுமொத்த விலைவாசியையும் குறைக்க அரசு நடவடிக்கைகள எடுக்கும்.

பள்ளிக் கட்டணம் : தனியார் பள்ளிக்கூடங்களில் வசூலிக்கப்படும் கல்விக் கட்டணத்தை நிர்ணயிக்கும் விஷயத்தில் அரசு நேரடியாகச் சம்பந்தப்படவில்லை. இதற்கென கட்டண நிர்ணயக் குழு அமைக்கப்பட்டுள்ளது.

அந்தக் குழு கட்டணத்தை நிர்ணயிக்கிறது. அதை பள்ளிகள் அமல்படுத்துகின்றன. பள்ளிகளுக்கும், அந்தக் குழுவுக்கும் இடையே பிரச்னை ஏற்பட்டு இந்த விஷயத்தில் தலையிட வேண்டும் என பள்ளிகள் விரும்பினால் அரசு தலையிடும்.

சமச்சீர் கல்வி : சமச்சீர் கல்வி இந்த ஆண்டு அமல் செய்யப்படாது. இந்த கல்வித் திட்டத்தை ஆய்வு செய்வதற்காக குழு அமைக்கப்படும். கல்வித் திட்டத்தை ஆராய்ந்து குழுவின் சார்பில் பரிந்துரைகள் அளிக்கப்படும். இதற்கென கால நிர்ணயம் ஏதும் வகுக்கப்படவில்லை.

மெட்ரோ ரயில் : மெட்ரோ ரயில் உள்பட திமுக அரசு தொடங்கியுள்ள திட்டங்களின் நிலை குறித்து ஆய்வு செய்யப்பட்டு முடிவெடுக்கும்போது உங்களுக்குத் தெரிவிப்போம் என்று கூறினார் ஜெயலலிதா.

காலத்தால் அழியாத செஞ்சிக் கோட்டை!


தென் இந்தியாவில் கண் என்று அழைக்கப்படும் வரலாற்றுச் சிறப்பு மிக்க இடமாக இருக்கும் செஞ்சிக்கோட்டை, விழுப்புரம் மாவட்டத்தில் சிறந்த சுற்றுலா தலமாக விளங்கி வருகிறது.

பண்டையகால மனிதர்கள் எப்படி வாழ்ந்தார்கள்? என்பதை நாம் வரலாற்றில் படித்து தெரிந்து கொள்கிறோம்.÷கடந்தகால மன்னர்களின் வாழ்க்கை முறையைப் பற்றி அவர்கள் வாழ்ந்த, ஆட்சிபுரிந்த இடங்களை நேரில் கண்டு, தொட்டு பார்த்து, மகிழந்து தெரிந்து கொள்ள முடியுமா? முடியும் என்றால், அந்த இடம் செஞ்சிக்கோட்டைதான்.

செஞ்சிக் கோட்டையை ஆட்சி புரிந்த ராஜாதேசிங்கு உள்ளிட்ட வீரமிக்க மன்னர்களைப் போன்று கம்பீரமாக விண்ணை முட்டி காட்சி தருகிறது செஞ்சிக்கோட்டை.

காலத்தாலும், பல்வேறு படையெடுப்புகளை முறியடித்து காட்சி தருகிறது செஞ்சிக்கோட்டை. கடைசி மன்னராக செஞ்சிக்கோட்டையை ஆண்ட ராஜா தேசிங்கு வாழ்ந்த இடம், போரிட்ட இடம், மரணம் தழுவிய இடம், தேசிங்கின் மனைவி ராணிபாய் உடன்கட்டை ஏறிய இடம் என பார்த்து பரவசம் அடையும் வண்ணம் உள்ளது.

வியப்பில் ஆழ்த்தும் கட்டட கலைக்கு எடுத்தக்காட்டாக கலைநயத்துடன் கல்லில் கட்டப்பட்ட கம்பீரமான கட்டுமானத்தை கண்டு வியப்படையாதவர்களே இல்லை.

தேசிங்குராஜன் ஆட்சி செய்த 17-ம் நூற்றாண்டின் வரலாற்றின் காலத்திற்கே நம்மை அழைத்து செல்லும் இடமாக விளங்கி வருகிறது இந்த செஞ்சிக் கோட்டை.

கோட்டையைப் பார்த்து விட்டு வெளியே வரும்போது நாம் இந்த நூற்றாண்டை அடைந்து விட்டோம் என்ற உணர்வு அனைவருக்கும் ஏற்படும்.

இந்த விடுமுறையை பயனுள்ளதாக மாற்ற வரலாற்றுச் சிறப்பு மிக்க செஞ்சிக்கோட்டை கொத்தலங்களை பார்ப்பதன் மூலம் வரலாற்றை படிப்பதில் இருக்கும் ஆர்வத்தை விட வரலாற்றை நேரில் பார்த்த அனுபவம் ஏற்படும்.

இந்திய தொல்லியல்துறையின் முழு கட்டுப்பாட்டின்கீழ் உள்ள செஞ்சிக் கோட்டையில் சுற்றுலாப் பயணிகளுக்கு அடிப்படை வசதிகள் சிலவற்றை செய்து பராமரித்து வருகிறது.

ஆனால் அதிகாரபூர்வமாக செஞ்சிக் கோட்டையை தமிழ்நாடு அரசு சுற்றுலை மையமாக அறிவிக்காததும், தமிழ்நாடு அரசு சார்பில் செஞ்சிக்கோட்டையில் எந்த ஒரு இடத்திலும் சுற்றுலாப் பயணிகளுக்கு அடிப்படை வசதியை செய்து தரவில்லை என்பதும் வேதனைக்குரியது.

ராஜா கோட்டையின் கீழே பார்க்க வேண்டிய இடங்கள்

சிவன் கோயில், அம்மன் ஆலயம், வேலூர் வாயில், சாதத்துல்லாகான் மசூதி, பாண்டிச்சேரி வாயில், வெங்கடரமணர் ஆலயம், சுழலும் பீரங்கிமேடை, உளி வளிக்கும் கல் பட்டறை, கல்யாண மஹால், முகமதுகான் மசூதி, அரண்மணை வளாகம், பணியாளர்கள் தங்கும் அறை, கல்யாண மஹால், குதிரை லாயம், யானைக்குளம், ஆயுதக் கிடங்கு, உடற்பயிற்சி அரங்கம், வெடி மருந்துக் கிடங்கு, நெல் களஞ்சியம், வேணுகோபாலசுவாமி கோயில், ஜும்மா மசூதியின் கலை பாணி, தேசிங்குராஜன் உடல் எரியூட்டப்பட்ட இடம், ஏழு கன்னிமார் கோயில், சர்க்கரை குளம், செட்டிக்குளம், ஆஞ்சநேயர் கோயில், மரணக்கிணறு ஆகியவை பார்க்க வேண்டிய முக்கிய இடங்களாகும்.

ராஜகிரி மலை மீது பல அற்புதங்களை கொண்ட கலைநயத்துடன் விளங்கும் கட்டடங்கள் கலைநயம் மிக்க கோயில்கள், அரண்மனைகள் மற்றும் பாலரங்கநாதர் கோயில், கமலக்கண்ணி அம்மன் கோயில், சுனை நீர், இழுவை பாலம், மணிக்கூண்டு, பீரங்கி என அற்புதமான இடங்களை கோட்டையின் மீது ஏறிச் சென்று பார்த்து பரவசம் அடையலாம்.

ராணிக்கோட்டை என அழைக்கப்படும் கிருஷ்ணகிரி கோட்டை

திருவண்ணாமலை சாலையில் அமைந்துள்ள ராணிக்கோட்டையை அந்த பக்கம் பயணம் செய்வோர் பார்க்காமல் செல்ல முடியாது. அற்புதமான அழகுடன் காட்சி அளிக்கும் ராணிக்கோட்டையைப் பார்க்க பார்க்க அழகுதான்.

இயற்கை எழிலுடன் கட்டப்பட்ட மலைக்கோட்டைதான் ராணிக்கோட்டை. கோட்டை மீது சுழலும் பீரங்கிமேடை, நெற்களஞ்சியம், அரங்கநாதர் ஆலயம், எண்ணெய்க் கிணறு, அழகிய கட்டட கலைநயத்துடன் கூடிய தர்பார் மண்டபம், கிருஷ்ணர் கோயில், மலையடிவாரத்தில் உள்ள பூவாத்தமன் கோயில் ஆகியன உள்ளது.

வரலாற்றின் முந்தைய காலத்தையும் அவர்கள் வாழ்ந்த விதம் மற்றும் கடைசியாக மன்னர்கள் மற்றும் குறுநில மன்னர்கள், ஆங்கிலேயர்கள் வரை ஆண்ட செஞ்சிக்கோட்டையை அவசியம் பார்க்க இந்த விடுமுறையை பயனுள்ளதாக்குவோம்.

எவ்வளவு தூரம்?

சென்னையில் இருந்து 150 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது செஞ்சிக்கோட்டை. விழுப்புரத்தில் இருந்து 37 கிலோ மீட்டரும், திண்டிவனத்தில் இருந்து 27 கிலோ மீட்டர் தூரமும், திருவண்ணாமலையில் இருந்து 38 கிலோ மீட்டர் தூரம் உள்ளது. செஞ்சிக் கோட்டையை பார்க்க வருவதற்கு பஸ்úஸ சிறந்த வசதியாகும்.

சமச்சீர் கல்வியை நிறுத்திவைக்கும் முடிவை திரும்பப் பெற வேண்டும் : அரசுக்கு கல்வியாளர்கள் கோரிக்கை.

சமச்சீர் கல்வியை நிறுத்திவைக்கும் முடிவை தமிழக அரசு திரும்பப் பெற வேண்டும் என்று கல்வியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த பேராசிரியர்கள் அ.மார்க்ஸ், கல்யாணி, கே.ராஜு, த.பச்சையப்பன், பொதுப்பள்ளிக்கான மாநில மேடையின் பொதுச்செயலாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு, வழக்கறிஞர் ரஜினி ஆகியோர் கூறியதாவது,

பல்வேறு பாடத்திட்டங்கள் போய் பொதுப்பாடத்திட்டம் என்கிற அளவில் கடந்த ஆட்சியில் சமச்சீர் கல்வி அறிமுகப்படுத்தப்பட்டது. 1 முதல் 10 ம் வகுப்பு வரை பொதுப்பாடத்திட்டம், பாடநூல்கள் உருவாக்க குழுக்கள் அமைக்கப்பட்டன.

குழுக்களின் அறிக்கை அடிப்படையில் பொது விவாதத்துக்குப் பிறகே பாடத்திட்டங்களை இறுதி செய்து பாடநூல்கள் அச்சடிக்கப்பட்டன. இந்த நிலையில், பாடத்திட்டம் தரமாக இல்லை என்று ஒரு தரப்பு கருத்தை ஏற்று சமச்சீர் கல்வியை நடைமுறைப்படுத்துவதை அரசு நிறுத்திவைத்துள்ளது. இது பெரும் பொருள் இழப்பு மட்டுமல்ல, மாணவர்கள் மத்தியில் பெரும் குழப்பத்தையும் ஏற்படுத்தும்.

பொதுக்கல்வி வாரியத்தில் 7 கல்வித் துறை அதிகாரிகள், 3 கல்வியாளர்கள், மெட்ரிக், ஆங்கிலோ, ஓரியண்டல் ஆசிரியப் பிரதிநிதிகள் ஆகியோர் உள்ளனர். பொதுக்கல்வி வாரியத்தின் ஏற்புடன் பாடத்திட்டமும், பாடநூலும் அச்சிடப்பட்டன.

அப்படியிருக்கும்போது, சமச்சீர் கல்வி பாடத்திட்டம் தரமற்றதாக உள்ளது என்று அமைச்சரவை எப்படி முடிவுக்கு வர முடியும்?

இந்தப் பாடத்திட்டத்தைப் பற்றி அரசுக்கு யாராவது எழுத்துப்பூர்வமாக குறை தெரிவித்தார்களா? அல்லது ஏதேனும் வல்லுநர் குழு இந்தப் பாடத்திட்டம் சரியில்லை என்று அறிக்கைச் சமர்ப்பித்ததா?

எந்த அடிப்படையில் இந்தப் பாடத்திட்டம் தரமற்றதாக உள்ளது என்ற முடிவுக்கு அரசு வந்தது என்பதை விளக்க வேண்டும்.

முன்னாள் முதல்வர் கருணாநிதி எழுதிய கவிதை மற்றும் அவரது சில எழுத்துகள் பாடநூல்களில் இடம்பெற்றுள்ளதாலேயே புதிய அரசு இந்த முடிவை மேற்கொண்டுள்ளதாக பத்திரிகைகளில் செய்திகள் வந்துள்ளன. தேவையானால் அத்தகைய பகுதிகளை நீக்கி நூல்களை விநியோகிக்கலாம்.

பழைய பாடத்திட்டத்தின் படி, ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரையுள்ள பாடநூல்கள் 10 ஆண்டுகளுக்கு முன் உருவாக்கப்பட்டவை. அதே பாடநூல்களை மீண்டும் பயன்படுத்துவது என்.சி.ஈ.ஆர்.டி நெறிமுறைக்கு எதிரானது என்பதை அரசுக்கு சுட்டிக்காட்டுகிறோம்.

எல்லா ஏற்பாடுகளையும் செய்து முடித்துள்ள நிலையில், சமச்சீர் கல்வியை நிறுத்தி வைப்பதை ஏற்க முடியாது. இது உண்மையான சமச்சீர்க் கல்வியை நோக்கிய பயணத்தை முடக்கும் செயல். நீண்ட விவாதங்களுக்குப் பிறகு பலரும் இணைந்து ரூ.216 கோடி செலவில் உருவாக்கிய பாடநூல்களை ஒரு சில தவறுகளுக்காகவும், அரசியல் நோக்கங்களுக்காகவும் புறக்கணிப்பது எந்த வகையிலும் நியாயமானதல்ல. சமச்சீர் கல்வி முறையை நிறுத்தி வைத்துள்ளதை திரும்பப் பெற வேண்டும் என்று தமிழக அரசை வற்புறுத்தி கேட்டுக்கொள்கிறோம் என அவர்கள் தெரிவித்தனர்.

சிறுநீரகங்கள் பாதிப்பு - லண்டன் கொண்டு செல்லப்படும் ரஜினி.


சிறுநீரகங்கள் பாதிக்கப்பட்டுள்ளதால் மேல்சிகிச்சைக்காக நடிகர் ரஜினி அடுத்த சில நாட்களில் லண்டன் கொண்டு செல்லப்படவுள்ளார்.

முன்னதாக அவரை அமெரிக்கா அழைத்துச் செல்ல திட்டமிட்டனர். பின்னர் அமெரிக்க டாக்டர் குழுவை சென்னைக்கு வரவழைக்கப்பட்டது. இந்நிலையில் அவரை லண்டனுக்கு கொண்டு செல்ல முடிவு செய்யப்பட்டுள்ளது.

கடந்த மாதம் 29ம்தேதி ராணா படப்பிடிப்பில் அவருக்கு உடல்நிலை பாதிக்கப் பட்டது. இதையடுத்து முதலில் இசபெல்லா மருத்துவமனையிலும் இப்போது ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவமனையிலும் ரஜினி சிகிச்சை பெற்று வருகிறார். கிட்டத்தட்ட 1 மாத காலமாகவே ரஜினி உடல்நலக் குறைவுடன் உள்ளார்.

உயர் ரத்த அழுத்தம், மூச்சுத் திணறல், நீரிழிவு ஆகிய பிரச்சனைகளோடு சிறுநீரகங்களிலும் அவருக்கு பிரச்சனை உள்ளது. சிறுநீரக பாதிப்பால் தான் அவருக்கு மூச்சு விடுவதிலும் சிரமம் நிலவுகிறது.

சிறுநீரகச் செயல்பாடு பாதிப்பு காரணமாக அவருக்கு ஹீமோ-டயாலிஸிஸ் சிகிச்சை அளிக்கப்பட்டது. இதுவரை அவருக்கு 5 முறை ஹீமோ-டயாலிஸிஸ் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.

இந் நிலையில் சிறுநீரக பாதிப்புக்கு உயர் சிகிச்சை அளிக்க அவரை லண்டன் அழைத்துச் செல்ல திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.

ஆந்திராவில் ஒரே நாளில் வெயிலுக்கு 13 பேர் பலி.

ஆந்திராவில் ஒரே நாளில்    வெயிலுக்கு 13 பேர் பலி

ஆந்திராவில் உள்ள கம்மம், வாரங்கல், நல்கொண்டா உள்ளிட்ட மாவட்டங்களில் தற்போது வரலாறு காணாத அளவுக்கு அக்னி வெயில் கொளுத்துகிறது. அங்கு தற்போது 114.8 டிகிரி வெயில் சுட்டெரிக்கிறது. கம்மம் மாவட்டத்தில் லஷ்மி, சுனாலி உள்பட 6 பேர் வெயிலில் சுருண்டு விழுந்து பலியானார்கள்.

இதே போல் வாரங்கல் மாவட்டத்தில் 2 பேர், நல் கொண்டா மாவட்டத்தில் 3 பேர், கிருஷ்ணா மாவட்டத்தில் 2 பேர் வெயிலில் வேலை செய்த போது சுருண்டு விழுந்து பலியானார்கள். இதுவரை ஆந்திராவில் வெயிலுக்கு 150 பேர் வரை பலியாகி உள்ளனர்.

தொடர்ந்து அங்கு அக்னி வெயில் சுட்டெரிப்பதால் பகலில் ஆள் நடமாட்டம் இல்லாமல் வெறிச்சோடி காணப்படுகிறது.

திருத்தப்பட்ட புதிய ஒப்பந்தம் மூலம் கறுப்பு பண பிரச்சினைக்கு தீர்வு : பிரணாப் முகர்ஜி .

திருத்தப்பட்ட புதிய ஒப்பந்தம் மூலம் கறுப்பு பண பிரச்சினைக்கு தீர்வு: பிரணாப் முகர்ஜி

வெளிநாடுகளில் இந்தியர்கள் பதுக்கி வைத்து இருக்கும் பல லட்சம் கோடி கறுப்பு பணத்தை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, எதிர்க்கட்சிகள் வற்புறுத்தி வருகின்றன. இந்த பிரச்சினையில் மெத்தனமாக செயல்பட்டு வருவதாக சுப்ரீம் கோர்ட்டும் மத்திய அரசை குற்றம் சாட்டி வருகிறது.

அதைத் தொடர்ந்து, கறுப்பு பணத்தை மீட்டு இந்தியா கொண்டு வருவதற்கு மத்திய அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. நேற்று டெல்லியில் நடைபெற்ற வருமான வரி தொடர்பான மாநாடு ஒன்றில் நிதி மந்திரி பிரணாப் முகர்ஜி பங்கேற்றார்.

அப்போது நிருபர்களுக்கு பேட்டி அளித்த அவர், கறுப்பு பணத்தை வெளிக் கொண்டு வரும் நடவடிக்கைகளில் வருமான வரித்துறை ஈடுபட்டு வருவதாக தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது- "பல்வேறு நாடுகளுடன் உள்ள இரட்டை வரிவிதிப்பு தவிர்ப்பு ஒப்பந்தத்தில், வங்கி கணக்கு விவரம் மற்றும் வருமான வரி தொடர்பான தகவல்களை பகிர்ந்து கொள்ள வகை செய்யும் சட்டப்பிரிவு ஒன்றை இணைத்து திருத்தம் கொண்டு வரப்பட்டு உள்ளது.

இந்த நடவடிக்கையினால், வெளிநாடுகளில் பதுக்கி வைத்துள்ள கறுப்பு பண பிரச்சினைக்கு வருமான வரித்துறை மூலம் தீர்வு காண முடியும். 40 நாடுகளுடன் இந்த ஒப்பந்தத்தில் திருத்தம் செய்யப்பட்டு உள்ளது. வரி ஏய்ப்பாளர்களின் சொர்க்கம் என்று வர்ணிக்கப்படும் மான் தீவு பெர்முடா மற்றும் பகாமாஸ் நாடுகளில் உள்ள வங்கிகளிடம் இருந்து கறுப்பு பணம் பற்றிய தகவல் பரிமாற்றத்துக்கும் வகை செய்யப்பட்டு உள்ளது.

ஜி-20 நாடுகளின் உச்சி மாநாட்டுக்குப்பிறகு, மேலும் 20 நாடுகள் இந்த ஒப்பந்தத்தில் திருத்தம் செய்து கொள்ள சம்மதம் தெரிவித்து உள்ளன. அத்துடன் மாற்று விலை நிர்ணய திட்டத்தை வலுப்படுத்தியதன் மூலம் 33 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு தவறான வழிமுறைகளில் வெளி நாடுகளுக்குச் செல்வது தடுக்கப்பட்டு உள்ளது''.

இவ்வாறு பிரணாப் முகர்ஜி கூறினார்.

புதுச்சேரி : சமச்சீர் கல்விமுறை ரத்தாகிறது.


தமிழக கல்வி வாரியத்தின் பாடத்திட்டமே புதுவையில் பின்பற்றப்படுகிறது. தமிழகத்தில் இந்த கல்வியாண்டில் அமல்படுத்தப்படுவதாக இருந்த சமச்சீர் கல்வி முறை ரத்து செய்யப்பட்டுள்ளது.

இதன் காரணமாக பழைய முறைப்படியே புத்தகங்கள் தயார் செய்யும் பணி தொடங்கியுள்ளது. இதற்கு அவகாசம் கொடுக்கும்பொருட்டு தமிழகத்தில் பள்ளிகள் ஜுன் 15 ந்தேதி திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில் தமிழக கல்வி திட்டத்தையே புதுவை அரசும் பின்பற்றுவதால் புதுவை காரைக்காலில் உள்ள பள்ளிக்கூடங்களுக்கும் பாடப்புத்தகங்கள் கிடைப்பது காலதாமதமாகும் என்று தெரிகிறது. இதனால் ஏற்கனவே அறிவித்தபடி ஜுன் 1ந் தேதிக்கு பதிலாக பள்ளிகள் ஜுன் 15 ந்தேதி திறக்கப்படும் என்று முதல் அமைச்சர் ரங்கசாமி அறிவித்துள்ளார்.

இதுகுறித்து முதல் அமைச்சர் ரங்கசாமியின் அலுவலக செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

பள்ளிக்கு தேவையான பாடப்புத்தகங்கள் தமிழக அரசால் திருத்தி அமைக்கப் படுவதால் புதுவை மற்றும் காரைக்கால் பகுதியில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகள் வரும் ஜுன் மாதம் 1 ந்தேதிக்கு பதிலாக ஜுன் 15ந் தேதி புதன்கிழமை திறக்கப்படும் என்று அறிவிக்கப்படுகிறது.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

முதல் அமைச்சர் ரங்கசாமியின் இந்த அறிவிப்பினை தொடர்ந்து புதுவையிலும் இந்த கல்வி ஆண்டில் சமச்சீர் கல்விமுறை அமல்படுத்தப்படாமல் பழைய கல்வி முறையே அமல்படுத்தப்பட உள்ளது தெளிவாகியுள்ளது.

நிர்வாணமாக நடிப்பதாக வதந்தி பரப்புவதா? சினிமாவை விட்டே விலகுவேன் ; ஐஸ்வர்யாராய் ஆவேசம்.

நிர்வாணமாக நடிப்பதாக வதந்தி பரப்புவதா?: சினிமாவை விட்டே விலகுவேன்; -ஐஸ்வர்யாராய் ஆவேசம்

நடிகை ஐஸ்வர்யாராய் இந்திப் படமொன்றில் நிர்வாணமாக நடிக்கப் போவதாக மும்பை டி.வி.சேனல் ஒன்று செய்தி வெளியிட்டது. கதை பிடித்ததால் நடிக்க சம்மதித்துள்ளார் என்றும் அச்செய்தியில் கூறப்பட்டது.

இதுபற்றி ஐஸ்வர்யா ராயிடம் கேட்டபோது ஆவேசப்பட்டார். அவர் கூறியதாவது:-

நான் நிர்வாணமாக நடிக்கப் போவதாக வெளியான செய்தி பார்த்து மனம் உடைந்து போனேன். நான் குடும்ப பெண். ஒருவரின் மனைவியாகவும், ஒரு குடும்பத்தின் மருமகளாகவும் இருக்கிறேன்.

என் மாமியார் வீட்டுக்கென சில கவுரவம் இருக்கிறது. என் மாமனார் அமிதாப்பச்சன் புகழ்பெற்ற நடிகர். அவர்களுக்குகெல்லாம் பங்கம் ஏற்படுத்தும்படி எந்த காரியத்தையும் செய்ய மாட்டேன். மாமனார் குடும்பத்தினர் என்னை நன்றாக கவனித்துக் கொள்கின்றனர். எனக்குள்ள கலை ஆர்வத்தை புரிந்து கொண்டு திருமணத்துக்கு பிறகும் என்னை நடிக்க அனுமதித்து உள்ளனர். இது பெரிய விஷயம்.

இந்த நிலையில் நான் நிர்வாணமாக நடிக்கப் போகிறேன் என்று வெளியாகும் செய்திகள் அவர்களை எவ்வளவு சங்கடப்படுத்தும் என்பதை வதந்தி பரப்புவோர் உணர்ந்து கொள்ள வேண்டும். நிர்வாணமாக நடிக்க வேண்டிய நிலை ஏற்பட்டால் சினிமாவை விட்டே நான் விலகி விடுவேன். என் உயிரே போனாலும் அது போன்று நடிக்க மாட்டேன்.