Wednesday, May 25, 2011

புதுச்சேரி : சமச்சீர் கல்விமுறை ரத்தாகிறது.


தமிழக கல்வி வாரியத்தின் பாடத்திட்டமே புதுவையில் பின்பற்றப்படுகிறது. தமிழகத்தில் இந்த கல்வியாண்டில் அமல்படுத்தப்படுவதாக இருந்த சமச்சீர் கல்வி முறை ரத்து செய்யப்பட்டுள்ளது.

இதன் காரணமாக பழைய முறைப்படியே புத்தகங்கள் தயார் செய்யும் பணி தொடங்கியுள்ளது. இதற்கு அவகாசம் கொடுக்கும்பொருட்டு தமிழகத்தில் பள்ளிகள் ஜுன் 15 ந்தேதி திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில் தமிழக கல்வி திட்டத்தையே புதுவை அரசும் பின்பற்றுவதால் புதுவை காரைக்காலில் உள்ள பள்ளிக்கூடங்களுக்கும் பாடப்புத்தகங்கள் கிடைப்பது காலதாமதமாகும் என்று தெரிகிறது. இதனால் ஏற்கனவே அறிவித்தபடி ஜுன் 1ந் தேதிக்கு பதிலாக பள்ளிகள் ஜுன் 15 ந்தேதி திறக்கப்படும் என்று முதல் அமைச்சர் ரங்கசாமி அறிவித்துள்ளார்.

இதுகுறித்து முதல் அமைச்சர் ரங்கசாமியின் அலுவலக செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

பள்ளிக்கு தேவையான பாடப்புத்தகங்கள் தமிழக அரசால் திருத்தி அமைக்கப் படுவதால் புதுவை மற்றும் காரைக்கால் பகுதியில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகள் வரும் ஜுன் மாதம் 1 ந்தேதிக்கு பதிலாக ஜுன் 15ந் தேதி புதன்கிழமை திறக்கப்படும் என்று அறிவிக்கப்படுகிறது.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

முதல் அமைச்சர் ரங்கசாமியின் இந்த அறிவிப்பினை தொடர்ந்து புதுவையிலும் இந்த கல்வி ஆண்டில் சமச்சீர் கல்விமுறை அமல்படுத்தப்படாமல் பழைய கல்வி முறையே அமல்படுத்தப்பட உள்ளது தெளிவாகியுள்ளது.

No comments: