Wednesday, May 25, 2011

தங்கபாலு ராஜினாமாவை காங். மேலிடம் ஏற்கவில்லை .

தங்கபாலு ராஜினாமாவை    காங். மேலிடம் ஏற்கவில்லை

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் தங்கபாலுவுக்கு கட்சியில் பெரும் எதிர்ப்பு கிளம்பியது. தமிழக சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் 63 இடங்களில் போட்டியிட்டது. ஆனால் 5 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது. தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் தங்கபாலுவின் நடவடிக்கையால்தான் காங்கிரஸ் கட்சிக்கு பெரும் தோல்வி ஏற்பட்டது என்று குற்றச்சாட்டு கூறப்பட்டது.

இந்த நிலையில் தோல்விக்கு பொறுப்பு ஏற்று தனது தலைவர் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார். ராஜினாமா கடிதத்தையும் கடந்த 13-ந் தேதி டெல்லி மேலிடத்துக்கு அனுப்பி வைத்தார். இது போல் கேரள மாநில காங்கிரஸ் தலைவர் ரமேஷ் சென்னிதாலாவும், எதிர்பார்த்த வெற்றி கிடைக்காததால் தனது பதவியை ராஜினாமா செய்வதாக கடிதம் அனுப்பி உள்ளார். தமிழ்நாட்டில் காங்கிரஸ் தோல்விக்கு காரணம் என்ன என்பது குறித்து மேலிடம் ஆலோசனை நடத்தி வருகிறது.

கேரளாவில் எதிர்பார்த்த அளவு காங்கிரஸ் வெற்றி பெறாதது ஏன் என்பது குறித்தும் மேலிட தலைவர்கள் ஆலோசித்து வருகிறார்கள். தமிழ்நாட்டில் காங்கிரஸ் தோல்விக்கும், கேரளாவில் அதிக வெற்றி கிடைக்காததற்கும் தனிப்பட்ட முறையில் மாநில தலைவர்களை குறை சொல்ல முடியாது. எனவே 2 ராஜினாமா கடிதங்களையும் தற்போது ஏற்பது இல்லை என்று கட்சி மேலிடம் முடிவு செய்துள்ளதாக டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. என்றாலும், தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சியை வளர்க்க பல்வேறு அதிரடி நடவடிக்கைகள் தேவை. அதற்கு புதிய தலைவர் அவசியம். ஆகவே தமிழ்நாடு காங்கிரஸ் தலைவரை மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை பல தரப்பில் இருந்தும் டெல்லி மேலிடத்துக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே நிச்சயம் தமிழ்நாட்டில் காங்கிரஸ் தலைவர் மாற்றப்படுவார். தாமதம் ஆனாலும் மாற்றம் உறுதி என்று தமிழக காங்கிரஸ் மூத்த பிரமுகர் ஒருவர் கூறினார். இந்த நிலையில் தமிழக காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களின் கூட்டம் நேற்று தங்கபாலு தலைமையில் சத்தியமூர்த்தி பவனில் நடந்தது. எனவே மாற்றம் வராது. தங்கபாலு தலைவராக நீடிப்பார் என்று அவரது ஆதரவாளர்கள் கூறினார்கள்.

No comments: