Wednesday, May 25, 2011

ஹெல்மெட் அணிந்து வருபவர்களுக்கு மட்டும் பெட்ரோல்.


இருசக்கர வாகனங்களில் ஹெல்மெட் அணியாமல் வருபவர்களுக்கு பெட்ரோல் போடக்கூடாது என போபால் மாநகராட்சி நூதன உத்தரவை பிறப்பித்துள்ளது.

போபாலில் உள்ள அனைத்து பெட்ரோல் பங்குகளுக்கும் இதுபற்றிய உத்தரவு நகல் அனுப்பப்பட்டுள்ளதாக போபால் மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும், ஹெல்மெட் இல்லாமல் பெட்ரோல் போட வந்து அதிகாரிகளிடம் பிடிபடுபவர்களுக்கு ரூ.50 அபராதமும் விதிக்கப்படுகிறது.

இந்த உத்தரவால் பெட்ரோல் பங்குகளில் ஊழியர்களுக்கும், வாடிக்கையாளர் களுக்கும் அடிக்கடி வாக்குவாதம் ஏற்படுவது வாடிக்கையாகிவிட்டது. இதை அடுத்து, பெட்ரோல் பங்குகளில் தகராறு செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என போபால் மாநகர நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

மேலும், பெட்ரோல் பங்குகளில் தகராறு செய்யும் எண்ணத்துடன் கூட்டம் கூடுவதை தடுக்கும் வகையில், 144 தடை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து போபால் மாவட்ட ஆட்சியர் மனோஜ் வத்சவா கூறுகையில்," கடந்த 10ந் தேதி முதல் இந்த உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும், உத்தரவை மீறிய 45,000 பேரிடம் இதுவரை ரூ.20 லட்சம் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது," என்றார்.

மோட்டார்சைக்கிளில் ஹெல்மெட் அணிந்து வராத மாணவர்களை கல்லூரிக்குள் அனுமதிக்க கூடாது என அம்மாநில உயர்கல்வி துறை இதற்கு முன் அனைத்து கல்லூரிகளுக்கும் உத்தரவிட்டுள்ளது.

இதேபோன்று, நொய்டா மற்றும் பருக்காபாத் நகரங்களிலும் ஹெல்மெட் அணியாமல் மோட்டார்சைக்கிளில் வருபவர்களுக்கு பெட்ரோல் கொடுக்கக் கூடாது என சம்பந்தப்பட்ட நிர்வாகங்கள் பெட்ரோல் பங்குகளுக்கு உத்தரவிட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.

No comments: