Wednesday, May 25, 2011

சட்டமேலவை கிடையாது : முதல்வர் ஜெயலலிதா.


தமிழகத்தில் சட்டமேலவை வருவதற்கு அதிமுக அரசு அனுமதிக்காது என்று முதல்வர் ஜெயலலிதா கூறினார்.

கேபிள் டி.வி. அரசுடைமை ஆக்கப்பட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

முதலமைச்சராகப் பதவி ஏற்ற பிறகு நிருபர்களை தலைமைச் செயலகத்தில் முதல் முறையாகச் சந்தித்த அவர், அவர்களின் கேள்விகளுக்குப் பதில் அளித்தார். வாரந்தோறும் செய்தியாளர்களைச் சந்திக்கப்போவதாகவும் அவர் தெரிவித்தார்.

"திமுக ஆட்சிக்கு வரும்போதெல்லாம், மேலவை அமைப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்கும். அதிமுக ஆட்சிக்கு வந்ததும் அதுகுறித்த தீர்மானங்களை ரத்து செய்யும்.

மேலவை தேவையில்லை என்கிற முடிவை அதிமுக நிறுவனர் எம்.ஜி.ஆர். எடுத்தார். அந்த முடிவில் எந்த மாற்றமும் இல்லை. தமிழகத்தில் மேலவை வராமல் இருக்க என்ன செய்ய வேண்டுமோ அதைச் செய்வோம்.

கேபிள் டி.வி. அரசுடமையாக்கப்படும் என அதிமுக தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, அரசுடமையாக்கப்படும். எப்போது எனக் கேட்டால், அதை நடைமுறைக்குக் கொண்டு வரும்போது உங்களுக்குத் தெரியும். அதிமுக அரசு பொறுப்பேற்று எட்டு நாட்கள்தான் ஆகிறது. அதற்குள்ளாக மிகவும் சீக்கிரமாக இந்தக் கேள்வியைக் கேட்கிறீர்கள்.

மாணவ - மாணவிகளுக்கு மடிக்கணினி (லேப்-டாப்) வழங்குவது உள்ளிட்ட திட்டங்கள் பற்றி ஆளுநர் உரையில் அறிவிப்புகள் வெளியாகும்.

அச்சுறுத்திப் பறித்த சொத்துகள் : திமுகவினர் ஆட்சி அதிகாரத்தைப் பயன்படுத்தி மக்களை அச்சுறுத்திப் பறித்துள்ள சொத்துகள் மீட்கப்படும் என அதிமுக தேர்தல் அறிக்கையிலே தெரிவிக்கப்பட்டுள்ளது. அது நிறைவேற்றப்படும்.

அலைக்கற்றை விவகாரம் : 2ஜி அலைக்கற்றை விவகார வழக்கு இப்போது சரியான திசையில் சென்று கொண்டிருக்கிறது. இப்போது எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை மூலம் நீதித் துறையின் மீது மக்களுக்கு நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.

பெண் என்பதால் ஒரு வழக்கில் இருந்து சலுகை காட்ட வேண்டும் என்கிற வாதமே தவறானது. பெண் என்பதற்காக கிரிமினல் வழக்குகளில் அவருக்கு சலுகை கோர உரிமையில்லை.

தலைமைச் செயலகம் : தலைமைச் செயலகத்தைக் கட்டுவதற்கு திமுக அரசு அதிக ஆண்டுகளை எடுத்துக் கொண்டது. ஆனால், அந்தக் கட்டடத்தை என்ன செய்வது என்பது குறித்து எங்களை சீக்கிரம் முடிவெடுக்கச் சொல்கிறீர்கள்.

பெட்ரோல் விலை உயர்வு : விலைவாசி உயர்வால் மக்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர். அனைத்துப் பொருள்களின் விலை உயர்வுக்கும் பெட்ரோல், டீசல் விலை உயர்வுதான் மூல காரணமாகும். எனவே அவற்றின் விலையை உயர்த்தும் முடிவை மத்திய அரசு கைவிட வேண்டும்.

தமிழகத்தில் புதிய அரசு பொறுப்பேற்று ஒருவாரம்தான் ஆகிறது. எனவே பெட்ரோல், டீசல் மீதான மாநில அரசின் விற்பனை வரியைக் குறைப்பது பற்றி இன்னும் ஆராயவில்லை. அதுகுறித்து ஆராய்ந்து முடிவெடுக்கப்படும்.

கட்டுமானப் பொருள்கள் மட்டுமின்றி ஒட்டுமொத்த விலைவாசியையும் குறைக்க அரசு நடவடிக்கைகள எடுக்கும்.

பள்ளிக் கட்டணம் : தனியார் பள்ளிக்கூடங்களில் வசூலிக்கப்படும் கல்விக் கட்டணத்தை நிர்ணயிக்கும் விஷயத்தில் அரசு நேரடியாகச் சம்பந்தப்படவில்லை. இதற்கென கட்டண நிர்ணயக் குழு அமைக்கப்பட்டுள்ளது.

அந்தக் குழு கட்டணத்தை நிர்ணயிக்கிறது. அதை பள்ளிகள் அமல்படுத்துகின்றன. பள்ளிகளுக்கும், அந்தக் குழுவுக்கும் இடையே பிரச்னை ஏற்பட்டு இந்த விஷயத்தில் தலையிட வேண்டும் என பள்ளிகள் விரும்பினால் அரசு தலையிடும்.

சமச்சீர் கல்வி : சமச்சீர் கல்வி இந்த ஆண்டு அமல் செய்யப்படாது. இந்த கல்வித் திட்டத்தை ஆய்வு செய்வதற்காக குழு அமைக்கப்படும். கல்வித் திட்டத்தை ஆராய்ந்து குழுவின் சார்பில் பரிந்துரைகள் அளிக்கப்படும். இதற்கென கால நிர்ணயம் ஏதும் வகுக்கப்படவில்லை.

மெட்ரோ ரயில் : மெட்ரோ ரயில் உள்பட திமுக அரசு தொடங்கியுள்ள திட்டங்களின் நிலை குறித்து ஆய்வு செய்யப்பட்டு முடிவெடுக்கும்போது உங்களுக்குத் தெரிவிப்போம் என்று கூறினார் ஜெயலலிதா.

No comments: