Wednesday, May 25, 2011

சென்னையிலிருந்து சேவையை தொடங்கும் இந்தியாவின் முதல் சொகுசு சுற்றுலா கப்பல்.


இந்தியாவின் முதல் சொகுசு சுற்றுலா கப்பல் அமீத் மெஜஸ்ட்டி வரும் ஜூன் மாதம் 9ந் தேதி தனது முதல் பயணத்தை சென்னையிலிருந்து தொடங்குகிறது.

ஐந்து நட்சத்திர வசதிகள் கொண்ட சொகுசு சுற்றுலா கப்பல்கள் மேலை நாடுகளில் வெகு பிரசித்தம். ஆனால், இதுபோன்ற சொகுசு கப்பல்கள் இந்தியாவில் இதுவரை இல்லை. அதேவேளை, வெளிநாடுகளிலிருந்து அவ்வப்போது ஒரு சில கப்பல்கள் மட்டும் இந்தியா வந்து செல்கின்றன.

மேலும், இந்தியர்கள் சுற்றுலா கப்பல்களில் செல்ல வேண்டும் என்றால் சிங்கப்பூர் உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு சென்றுதான் செல்ல முடிகிறது. இந்த குறையை போக்கும் வகையில், நாட்டின் முதல் சுற்றுலா சொகுசு கப்பலை சென்னையை சேர்ந்த அமீத் ஷிப்பிங் இந்தியா நிறுவனம் வாங்கியுள்ளது.

கிரிஸ் நாட்டை சேர்ந்த நிறுவனத்திடமிருந்து வாங்கப்பட்டுள்ள இந்த கப்பல் வரும் ஜூன் 8ந் தேதி சென்னை துறைமுகத்திற்கு வருகிறது. அன்று மறுநாள் முதல் தனது சுற்றுலா சேவையை துவங்க உள்ளது.

அமீத் ஷிப்பிங் நிறுவனத்தின் தலைவர் ராமச்சந்திரன் கூறியதாவது:

"இந்தியாவிலிருந்து ஆண்டுதோறும் 80,000 பேர் சொகுசு கப்பலில் சுற்றுலா செல்கின்றனர். ஆனால், அவர்கள் வெளிநாடுகளுக்கு சென்றுதான் சொகுசு கப்பலில் செல்ல முடியும். இந்த குறையை போக்கும் வகையில், சொகுசு கப்பல் சேவையை துவங்க இருக்கிறோம்.

ரூ.100 கோடி மதிப்புடைய இந்த சுற்றுலா கப்பல் கிரிஸ் நாட்டிலிருந்து வாங்கப் பட்டுள்ளது. இந்த கப்பல் கட்டப்பட்டு 35 ஆண்டுகள் ஆகிறது. இதற்கு 'அமீத் மெஜஸ்ட்டி' என்று பெயரிட்டுள்ளோம்.

சென்னையிலிருந்து மும்பை, கொச்சி, கோவா, அந்தமான், புக்கட், மாலத்தீவு, கொழும்பு ஆகிய இடங்களுக்கு சுற்றுலா சேவை துவங்கப்பட உள்ளது.

சென்னை துறைமுகத்தில் சுற்றுலா கப்பல் நிறுத்துவதற்கான டெர்மினல் வசதி ஏற்கனவே உள்ளது. தவிர, கோவா, மும்பை, கொச்சி ஆகிய துறைமுகங்களில் ரூ.480 கோடியில் இந்த கப்பலை நிறுத்துவதற்கான டெர்மினல் அமைக்கும் பணிகள் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த கப்பலில் 1,000 பயணிகள் செல்வதற்கு மத்திய அரசு அனுமதி வழங்கி உள்ளது. இந்த கப்பல் சுற்றுலா விரும்பிகளுக்கு நிச்சயம் புதிய அனுபவத்தை கொடுக்கும்," என்று கூறினார்.

No comments: