Wednesday, May 25, 2011

தரமற்ற புத்தகங்களை வழங்குவதாக தனியார் பள்ளிகள் மீது குற்றச்சாட்டு.

கடலூரில் ஆர்ப்பாட்டம்

கட்டாய இலவசக் கல்வித் சட்டத்தை மீறிச் செயல்படும் கடலூர் மாவட்டத் தனியார் பள்ளிகளை கண்டித்தும், மெட்ரிக் பள்ளிகள் தனியாரிடம் இருந்து தரமற்ற பாடப் புத்தகங்களை வாங்கி மாணவர்களுக்கும் பெற்றோருக்கும் சுமைகளை ஏற்றுகின்றன என்றும் கடலூரில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தமிழ்நாடு நுகர்வோர் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் எம்.நிஜாமுதீன் தலைமையில் இந்த ஆர்ப்பாட்டத்தில், நகரில் உள்ள பல்வேறு பொதுநல அமைப்புகளின் பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் பேசியதாவது,

குழந்தைகள் இலவசக் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் 2009 என்ற மத்திய அரசின் சட்டம் 6 முதல் 14 வயது வரையிலான அனைத்து குழந்தைகளுக்கும் இலவசக் கல்வி உரிமையை வழங்குகிறது.

இச்சட்டத்துக்கு முரணாக கடலூரில் கட்டாய நன்கொடை, மறைமுகக் கட்டணங்கள் வசூலிக்கப்படுகிறது. கட்டணங்களுக்கு ரசீது வழங்கப்படுவதில்லை, ஒடுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட மற்றும் வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ள மாணவர் களுக்கு 25 சதவீதம் ஒதுக்கீட்டை கடலூர் பள்ளிகளில் அளிக்கவில்லை.

சட்டவிரோதமாக நுழைவுத் தேர்வுகள், பெற்றோருக்கு அறிவுச்சோதனை போன்ற வடிகட்டும் தேர்வுகளை நடத்திக் கொண்டிருக்கின்றன. மெட்ரிக் பள்ளிகள் தனியாரிடம் இருந்து தரமற்ற பாடப் புத்தகங்களை வாங்கி மாணவர்களுக்கும் பெற்றோருக்கும் சுமைகளை ஏற்றுகின்றன. எனவே இத்தகைய விதிமீறல்களை செய்துவரும் கடலூர் மாவட்ட தனியார் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

No comments: