Saturday, July 9, 2011

டெலிபோன் ஒட்டுக் கேட்பு ; 168 ஆண்டுகால பத்திரிகை மூடப்படுகிறது.

டெலிபோன் ஒட்டு கேட்பு இங்கிலாந்து பிரதமரின்    உதவியாளர் கைது;    168 ஆண்டு பத்திரிகை மூடப்படுகிறது

இங்கிலாந்தின் பிரபல பத்திரிகை நியூஸ் ஆப் த வேல்டு. இது 168 ஆண்டு காலம் பழமைவாய்ந்த புகழ் பெற்றப் பத்திரிகை. குற்றம் மற்றும் அரசியல் செய்திகளை வெளியிட்டு பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது. இப்பத்திரிகை இணைப்பு பகுதி டேப்லாஸ்டு வடிவில் ஞாயிற்றுக்கிழமை தோறும் வெளிவந்தது.

இதற்கிடையே அரசியல்வாதிகள், போலீசார் மற்றும் பிரபலங்களுக்கு லஞ்சமாக பணம் கொடுத்து, டெலிபோன் ஒட்டு கேட்பு மூலம் தகவல்களை பெற்று செய்தி களை வெளியிட்டதாக புகார் கூறப்பட்டது.

கடந்த 2005-ம் ஆண்டு லண்டனில் நடந்த குண்டு வெடிப்பு சம்பவம், ஆப்கானிஸ்தான் போரில் உயிரிழந்த இங்கிலாந்து வீரர்கள் மற்றும் விளையாட்டில் ஸ்பாட் பிக்சிங் சூதாட்டத்தில் பாகிஸ்தான் வீரர்கள் சிக்கியது போன்ற தகவல்களை வெளியிட்டது. மேலும் தனிப்பட்ட நபர்களின் செல்போன் களையும் வழி மறித்து தகவல்களை திரட்டி செய்தி வெளியிட்டது.

இது போன்று கடந்த 6 ஆண்டுகளாக இப்பத்திரிகை சர்ச்சையில் சிக்கி இருந்தது. இப்பத்திரிகையின் செயலுக்கு பொது மக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இந்த விவகாரம் இங்கிலாந்து பாராளுமன்றத்திலும் எதிரொலித்தது.

இதை தொடர்ந்து இது குறித்து விசாரணை நடத்த பிரதமர் டேவிட் கேமரூன் உத்தரவிட்டார். விசாரணையில் டெலிபோனில் ஒட்டு கேட்டு செய்தி வெளியிட்டது உண்மை என்றும், அதற்காக ரூ.7 ஆயிரம் கோடி லஞ்சமாக பணம் கொடுக்கப்பட்டிருப்பதும் தெரிய வந்தது.

இதை தொடர்ந்து அந்த பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் ஆண்டி கவ்ல்சன் கைது செய்யப்பட்டார். இவர் அப்பத்திரிகையில் 2003 முதல் 2007-ம் ஆண்டு வரை ஆசிரியராக பணிபுரிந்துள்ளார். மேலும் இவர் பிரதமர் டேவிட் கேமரூனின் முன்னாள் மீடியா உதவியாளராகவும் இருந்துள்ளார். தற்போது இவர் மீது 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஆனால் அவர் தன் மீது கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளார்.

நியூஸ் ஆப் தி வேல்டு பத்திரிகையின் உரிமையாளர் ரூபர்ட் முர்டோக்கால், தற்போது இவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. சர்ச்சையில் சிக்கியதை தொடர்ந்து 168 ஆண்டுகளாக நடத்தி வந்த இந்த பத்திரிகை நாளை 10-ந்தேதி முதல் மூடப்படுகிறது. இந்த அறிவிப்பை உரிமையாளர் ரூபர்ட்முர் டோக்கால் வெளியிட்டார்.

தில்ஷனை சுட்டுக் கொன்ற ராணுவ அதிகாரி லெப்டினெட் கர்னல் அஜித்சிங்.



சென்னை தீவுத்திடல் அருகே உள்ள காந்தி நகர் குடிசை பகுதியை சேர்ந்த சிறுவன் தில்ஷன் சில நாட்களுக்கு முன்பு ராணுவ அதிகாரி ஒருவரால் சுட்டுக் கொல்லப்பட்டான்.

இதுபற்றி சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு உத்தரவிட்ட முதல்-அமைச்சர் ஜெயலலிதா சிறுவன் தில்ஷனை சுட்டுக் கொன்ற ராணுவ அதிகாரியை போலீசாரிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார். கடந்த 7 நாட்களாக விசாரணை நடத்தியும் தில்ஷன் கொலையில் எந்த துப்பும் துலங்கவில்லை

சிறுவன் தில்ஷன் தலையில் பாய்ந்த துப்பாக்கி குண்டை வைத்து, துப்பு துலக்கி வரும் சி.பி.சி.ஐ.டி. போலீசார், ராணுவ அதிகாரிதான் குற்றவாளி என்கின்றனர்.

ராணுவத்தின் தரப்பிலோ சிறுவன் தில்ஷான் சுட்டுக் கொல்லப்பட்டதற்கும், எங்களுக்கும் எந்தவித தொடர்பும் இல்லை என்று மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது

சி.பி.சி.ஐ.டி அதிகாரிகளிடம், சம்பவத்தை நேரில் பார்த்த சாட்சிகளான சிறுவர்கள், தில்ஷனை சுட்டுக் கொன்ற ராணுவ அதிகாரியை அடையாளம் காட்டினர். அவர் லெப்டினெட் கர்னல் அஜித்சிங் என்னும் பஞ்சாபியர் ஆவார்.

அவர் சம்பவ நேரத்தில் தான் அங்கு இல்லை என்று மறுத்திருக்கிறார். ஆனால் செல்போன் டவர் ரிப்போட்படி அவர் அங்கிருந்தது நிரூபிக்கப்பட்டிருக்கிறது.

சிறுவனை சுட்டுக் கொன்றது எவ்வளவு பெரிய அதிகாரியாக இருந்தாலும் அவர் சட்டத்தின் முன்பு உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என்பதே ஒட்டு மொத்த தமிழகத்தின் குரலாகும்.

இந்த நிலையில் டி.ஜி.பி. ராமானுஜம் சம்பவ இடத்தை நேற்று பார்வையிட்டார். துப்பாக்கி சூடு நடந்த ராணுவ பகுதியில் நேரில் சென்று விவரங்களை கேட்டறிந்தார். பின்னர் ராணுவ கமாண்டிஸ் மேஜர் ஜெனரலுடன் ஆலோசனை நடத்தினார்.

இதைத் தொடர்ந்து இன்று அல்லது நாளைக்குள் சிறுவனை சுட்டுக் கொன்ற ராணுவ அதிகாரியை போலீசார் கைது செய்ய திட்டமிட்டுள்ளனர். அதன் பின்னர் அவரிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்தப்படுகிறது. சம்பவம் நடந்து ஒரு வாரத்துக்கு பிறகு இந்த வழக்கில் குற்றவாளி கைது செய்யப்படுகிறார்.

தி.மு.க.புதிய மந்திரி யார்? மத்திய மந்திரி சபை 11-ந் தேதி மாற்றம் ; கருணாநிதியுடன் பிரணாப்முகர்ஜி ஆலோசனை.

தி.மு.க.புதிய மந்திரி யார்? மத்திய மந்திரி சபை 11-ந் தேதி  மாற்றம்;கருணாநிதியுடன் பிரணாப்முகர்ஜி ஆலோசனை

பிரதமர் மன்மோகன்சிங் தலைமையிலான மத்திய மந்திரி சபையில் தற்போது 33 காபினெட், 45 ராஜாங்க மந்திரிகள் உள்ளனர். காபினெட் அந்தஸ்து மந்திரிகளாக இருந்த மம்தா பானர்ஜி, ஆ.ராசா, தயாநிதிமாறன் உள்பட சிலர் பதவியை ராஜினாமா செய்து விட்டதால், அந்த இலாகாக்கள் நிரப்பப்படாமல் உள்ளன.

காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மந்திரிகள் சிலர் இலாகா தரும்படி கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். சில மந்திரிகளின் செயல்பாடுகள் மீது பிரதமர் மன் மோகன்சிங்குக்கு திருப்தி இல்லை. எனவே மத்திய மந்திரி சபையை முழுமையாக மாற்றி அமைக்க அவர் தீர்மானித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் காங்கிரஸ் தலைவர் சோனியாவுடன் பல சுற்று ஆலோசனை நடத்தி முடிவுகள் எடுத்துள்ளார். அதன்படி நிதி (பிரணாப்முகர்ஜி), உள்துறை (ப.சிதம்பரம்), பாதுகாப்பு (ஏ.கே.அந்தோணி), வெளியுறவுத் துறை (எஸ்.எம்.கிருஷ்ணா) ஆகிய 4 துறைகளை மட்டும் மாற்றாமல் மற்ற இலாகாக்களுக்கு மந்திரிகளை மாற்ற தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.

மத்திய மந்திரி சபையில் முக்கிய அங்கம் வகிக்கும் தி.மு.க. 3 காபினெட், 4 ராஜாங்க மந்திரிகளை பெற்றிருந்தது. ஸ்பெக்ட்ரம் ஊழல் விவகாரத்தில் சிக்கியதால் 2 மந்திரிகள் (ஆ.ராசா, தயாநிதி மாறன்) பதவியை ராஜினாமா செய்தனர். அந்த 2 காபினெட் அந்தஸ்து மந்திரி பதவி தி.மு.க.வுக்கு மீண்டும் கிடைக்குமா? என்று அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

டி.ஆர்.பாலு, ஏ.கே.எஸ். விஜயன் இருவரும் காபினெட் மந்திரிகளாக்கப்படலாம் என்று தகவல் வெளியானது. ராஜாங்க மந்திரிகளில் பழனிமாணிக்கத்துக்கு பதில் டி.கே.எஸ்.இளங்கோவனை தனிப்பொறுப்புடன் கூடிய மந்திரியாக்க தி.மு.க. தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டது.

இந்த நிலையில் தி.மு.க. தலைவர் கருணாநிதியை சந்திப்பதற்காக மத்திய மந்திரி பிரணாப்முகர்ஜியும், தங்கபாலும் இன்று பகல் 10 மணிக்கு கோபாலபுரம் இல்லத்திற்கு சென்றனர். அவர்களை டி.ஆர்.பாலு, துரைமுருகன், பொன்முடி, தயாநிதிமாறன் ஆகியோர் வாசலில் நின்று வரவேற்றனர்.

பிரணாப்முகர்ஜிக்கு கருணாநிதி பொன்னாடை அணிவித்து வரவேற்றார். பின்னர் பேச்சுவார்த்தை நடந்தது. அப்போது மந்திரிசபை மாற்றம் தொடர்பாக சோனியாவின் கருத்துக்களை கருணாநிதியிடம் பிரணாப்முகர்ஜி விளக்கிக் கூறினார்.

தி.மு.க.வுடன் கூட்டணியை தொடர விரும்புவதாக பிரணாப்முகர்ஜி கூறியதாக தெரிகிறது. தி.மு.க. தரப்பில் ஸ்பெக்ட்ரம் விவகாரம் உள்பட தற்போதைய அரசியல் சூழ்நிலைகள் எடுத்துரைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. மந்திரி பதவி வேண்டாம் ஆ.ராசா, தயாநிதி மாறனுக்கு பதில் புதிய மந்திரி பதவி எதையும் கேட்கப் போவதில்லை என்று தி.மு.க. நேற்று அறிவித்தது.

பிரணாப் முகர்ஜியிடமும் இன்று அதே கருத்து தெரிவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. எனவே மத்திய மந்திரி சபை மாற்றத்தின் போது, தி.மு.க. சார்பில் யார், யாருக்கு வாய்ப்பு கிடைக்கும் என்பதில் கேள்விக்குறி நீடிக்கிறது. தி.மு.க. எடுக்கும் முடிவு, மத்தியில் ஆளும் காங்கிரஸ் தலைவர்களுக்கு, தி.மு.க.வின் நிலையையும், மன உணர்வையும் தெளிவு படுத்தும் வகையில் இருக்கும் என்று கூறப்படுகிறது.

இதற்கிடையே மத்திய மந்திரி சபை மாற்றத்துக்கான ஏற்பாடுகள் டெல்லியில் ஓசையின்றி தொடங்கி விட்டன. நாளை மறுநாள் (11-ந்தேதி) மந்திரிசபை மாற்றம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. லல்லு பிரசாத் யாதவின் ராஷ்டீரிய ஜனதா தளம், அஜித்சிங்கின் ராஷ்டீரிய லோக் தளம் ஆகிய 2 கட்சிகள் மந்திரி சபையில் சேர்க்கப்பட உள்ளது.

லல்லு பிரசாத் மீண்டும் காபினெட் மந்திரி ஆகிறார். அவருக்கு இரும்பு எக்கு துறை ஒதுக்கப்படும் என்று தெரிகிறது. கவர்னர்களாக இருக்கும் சிவராஜ்பாட்டீல், பரத்வாஜ் இருவரும் மீண்டும் மத்திய மந்திரி ஆக வாய்ப்புள்ளது.

சமீபத்தில் மேல்-சபை எம்.பி. ஆகி உள்ள அசோக் கங் குலிக்கு அறிவியல் தொழில் நுட்ப துறையை கொடுக்க பிரதமர் மன்மோகன்சிங் தீர்மானித்துள்ளார். அனைத்து மாநிலங்களுக்கும் உரிய பிரதிநிதித்துவம் கிடைக்கும் வகையிலும், இளம் எம்.பி.க்களுக்கு வாய்ப்பு கொடுக்கும் வகையிலும் மந்திரி சபை மாற்றம் இருக்கும்.

செய்தியாளர்கள் சந்திப்பை தவிர்த்த தயாநிதி .



2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் சிக்கி பதவியை ராஜினாமா செய்த தயாநிதி மாறன் நேற்று சென்னை திரும்பினார். விமான நிலையத்தில் அவர் செய்தியாளர் களைச் சந்திக்கவில்லை. அதேபோல திமுக தலைவர் கருணாநிதி வீட்டுக்கு வந்தபோதும் அவர் செய்தியாளர்களை சந்திக்கவில்லை. மாறாக கருணாநிதி வீட்டின் பின்வாசல் வழியாக உள்ளே சென்றார்.

2ஜி ஊழலில் சிக்கிய தயாநிதி மாறன் தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து நேற்று அவர் சென்னை திரும்பினார். நேற்று இரவு அவர் சென்னை வந்து சேர்ந்தார். இதையடுத்து விமான நிலையத்தில் பெரும் திரளான பத்திரிக்கையாளர்கள், டிவி கேமராமேன்கள் உள்ளிட்டோர் குழுமியிருந்தனர்.

ஆனால் அந்த வழியாக தயாநிதி மாறன் வரவில்லை. மாறாக விமானம் ஏற வருவோர் நுழையும் பகுதி வழியாக வெளியேறினார். இதைப் பார்த்த செய்தியாளர்கள் அங்கு ஓடினர். ஆனால் தயாநிதி மாறனுடன் திரளாக வந்திருந்த தனியார் பாதுகாப்புப் படையினர், செய்தியாளர்களையும், கேமராமேன்களையும் பிடித்துத் தள்ளி விட்டு தயாநிதி மாறனை பத்திரமாக அழைத்துச் சென்றனர்.

இதனால் செய்தியாளர்கள் கடும் கோபமடைந்தனர். அந்த இடத்தில் இருந்த விமான நிலைய காவல் நிலைய இன்ஸ்பெக்டரை அணுகி, விமான நிலையத்திற்குள் எப்படி தனியார் பாதுகாவலர்களை அனுமதிக்கலாம் என்று முறையிட்டனர். ஆனால் அவராலோ பதில் சொல்ல முடியவில்லை.

இந்த நிலையில், இரவு எட்டரை மணியளவில் கோபாலபுரம் வந்தார் தயாநிதி மாறன். அங்கும் செய்தியாளர்கள் பெருமளவில் கூடியிருந்தனர். இதைப் பார்த்த தயாநிதி மாறன், முன் வாசல் வழியாக செல்லாமல் புற வாசல் வழியாக கருணாநிதி வீட்டுக்குள் நுழைந்தார். அதேபோல கிளம்பும்போதும் அதே போலவே சென்றார்.

மொத்தத்தில் செய்தியாளர்களை சந்திப்பதை முற்றிலும் தவிர்த்தார் தயாநிதி மாறன்.