Saturday, July 9, 2011

செய்தியாளர்கள் சந்திப்பை தவிர்த்த தயாநிதி .



2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் சிக்கி பதவியை ராஜினாமா செய்த தயாநிதி மாறன் நேற்று சென்னை திரும்பினார். விமான நிலையத்தில் அவர் செய்தியாளர் களைச் சந்திக்கவில்லை. அதேபோல திமுக தலைவர் கருணாநிதி வீட்டுக்கு வந்தபோதும் அவர் செய்தியாளர்களை சந்திக்கவில்லை. மாறாக கருணாநிதி வீட்டின் பின்வாசல் வழியாக உள்ளே சென்றார்.

2ஜி ஊழலில் சிக்கிய தயாநிதி மாறன் தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து நேற்று அவர் சென்னை திரும்பினார். நேற்று இரவு அவர் சென்னை வந்து சேர்ந்தார். இதையடுத்து விமான நிலையத்தில் பெரும் திரளான பத்திரிக்கையாளர்கள், டிவி கேமராமேன்கள் உள்ளிட்டோர் குழுமியிருந்தனர்.

ஆனால் அந்த வழியாக தயாநிதி மாறன் வரவில்லை. மாறாக விமானம் ஏற வருவோர் நுழையும் பகுதி வழியாக வெளியேறினார். இதைப் பார்த்த செய்தியாளர்கள் அங்கு ஓடினர். ஆனால் தயாநிதி மாறனுடன் திரளாக வந்திருந்த தனியார் பாதுகாப்புப் படையினர், செய்தியாளர்களையும், கேமராமேன்களையும் பிடித்துத் தள்ளி விட்டு தயாநிதி மாறனை பத்திரமாக அழைத்துச் சென்றனர்.

இதனால் செய்தியாளர்கள் கடும் கோபமடைந்தனர். அந்த இடத்தில் இருந்த விமான நிலைய காவல் நிலைய இன்ஸ்பெக்டரை அணுகி, விமான நிலையத்திற்குள் எப்படி தனியார் பாதுகாவலர்களை அனுமதிக்கலாம் என்று முறையிட்டனர். ஆனால் அவராலோ பதில் சொல்ல முடியவில்லை.

இந்த நிலையில், இரவு எட்டரை மணியளவில் கோபாலபுரம் வந்தார் தயாநிதி மாறன். அங்கும் செய்தியாளர்கள் பெருமளவில் கூடியிருந்தனர். இதைப் பார்த்த தயாநிதி மாறன், முன் வாசல் வழியாக செல்லாமல் புற வாசல் வழியாக கருணாநிதி வீட்டுக்குள் நுழைந்தார். அதேபோல கிளம்பும்போதும் அதே போலவே சென்றார்.

மொத்தத்தில் செய்தியாளர்களை சந்திப்பதை முற்றிலும் தவிர்த்தார் தயாநிதி மாறன்.

No comments: