Saturday, July 9, 2011

தி.மு.க.புதிய மந்திரி யார்? மத்திய மந்திரி சபை 11-ந் தேதி மாற்றம் ; கருணாநிதியுடன் பிரணாப்முகர்ஜி ஆலோசனை.

தி.மு.க.புதிய மந்திரி யார்? மத்திய மந்திரி சபை 11-ந் தேதி  மாற்றம்;கருணாநிதியுடன் பிரணாப்முகர்ஜி ஆலோசனை

பிரதமர் மன்மோகன்சிங் தலைமையிலான மத்திய மந்திரி சபையில் தற்போது 33 காபினெட், 45 ராஜாங்க மந்திரிகள் உள்ளனர். காபினெட் அந்தஸ்து மந்திரிகளாக இருந்த மம்தா பானர்ஜி, ஆ.ராசா, தயாநிதிமாறன் உள்பட சிலர் பதவியை ராஜினாமா செய்து விட்டதால், அந்த இலாகாக்கள் நிரப்பப்படாமல் உள்ளன.

காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மந்திரிகள் சிலர் இலாகா தரும்படி கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். சில மந்திரிகளின் செயல்பாடுகள் மீது பிரதமர் மன் மோகன்சிங்குக்கு திருப்தி இல்லை. எனவே மத்திய மந்திரி சபையை முழுமையாக மாற்றி அமைக்க அவர் தீர்மானித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் காங்கிரஸ் தலைவர் சோனியாவுடன் பல சுற்று ஆலோசனை நடத்தி முடிவுகள் எடுத்துள்ளார். அதன்படி நிதி (பிரணாப்முகர்ஜி), உள்துறை (ப.சிதம்பரம்), பாதுகாப்பு (ஏ.கே.அந்தோணி), வெளியுறவுத் துறை (எஸ்.எம்.கிருஷ்ணா) ஆகிய 4 துறைகளை மட்டும் மாற்றாமல் மற்ற இலாகாக்களுக்கு மந்திரிகளை மாற்ற தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.

மத்திய மந்திரி சபையில் முக்கிய அங்கம் வகிக்கும் தி.மு.க. 3 காபினெட், 4 ராஜாங்க மந்திரிகளை பெற்றிருந்தது. ஸ்பெக்ட்ரம் ஊழல் விவகாரத்தில் சிக்கியதால் 2 மந்திரிகள் (ஆ.ராசா, தயாநிதி மாறன்) பதவியை ராஜினாமா செய்தனர். அந்த 2 காபினெட் அந்தஸ்து மந்திரி பதவி தி.மு.க.வுக்கு மீண்டும் கிடைக்குமா? என்று அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

டி.ஆர்.பாலு, ஏ.கே.எஸ். விஜயன் இருவரும் காபினெட் மந்திரிகளாக்கப்படலாம் என்று தகவல் வெளியானது. ராஜாங்க மந்திரிகளில் பழனிமாணிக்கத்துக்கு பதில் டி.கே.எஸ்.இளங்கோவனை தனிப்பொறுப்புடன் கூடிய மந்திரியாக்க தி.மு.க. தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டது.

இந்த நிலையில் தி.மு.க. தலைவர் கருணாநிதியை சந்திப்பதற்காக மத்திய மந்திரி பிரணாப்முகர்ஜியும், தங்கபாலும் இன்று பகல் 10 மணிக்கு கோபாலபுரம் இல்லத்திற்கு சென்றனர். அவர்களை டி.ஆர்.பாலு, துரைமுருகன், பொன்முடி, தயாநிதிமாறன் ஆகியோர் வாசலில் நின்று வரவேற்றனர்.

பிரணாப்முகர்ஜிக்கு கருணாநிதி பொன்னாடை அணிவித்து வரவேற்றார். பின்னர் பேச்சுவார்த்தை நடந்தது. அப்போது மந்திரிசபை மாற்றம் தொடர்பாக சோனியாவின் கருத்துக்களை கருணாநிதியிடம் பிரணாப்முகர்ஜி விளக்கிக் கூறினார்.

தி.மு.க.வுடன் கூட்டணியை தொடர விரும்புவதாக பிரணாப்முகர்ஜி கூறியதாக தெரிகிறது. தி.மு.க. தரப்பில் ஸ்பெக்ட்ரம் விவகாரம் உள்பட தற்போதைய அரசியல் சூழ்நிலைகள் எடுத்துரைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. மந்திரி பதவி வேண்டாம் ஆ.ராசா, தயாநிதி மாறனுக்கு பதில் புதிய மந்திரி பதவி எதையும் கேட்கப் போவதில்லை என்று தி.மு.க. நேற்று அறிவித்தது.

பிரணாப் முகர்ஜியிடமும் இன்று அதே கருத்து தெரிவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. எனவே மத்திய மந்திரி சபை மாற்றத்தின் போது, தி.மு.க. சார்பில் யார், யாருக்கு வாய்ப்பு கிடைக்கும் என்பதில் கேள்விக்குறி நீடிக்கிறது. தி.மு.க. எடுக்கும் முடிவு, மத்தியில் ஆளும் காங்கிரஸ் தலைவர்களுக்கு, தி.மு.க.வின் நிலையையும், மன உணர்வையும் தெளிவு படுத்தும் வகையில் இருக்கும் என்று கூறப்படுகிறது.

இதற்கிடையே மத்திய மந்திரி சபை மாற்றத்துக்கான ஏற்பாடுகள் டெல்லியில் ஓசையின்றி தொடங்கி விட்டன. நாளை மறுநாள் (11-ந்தேதி) மந்திரிசபை மாற்றம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. லல்லு பிரசாத் யாதவின் ராஷ்டீரிய ஜனதா தளம், அஜித்சிங்கின் ராஷ்டீரிய லோக் தளம் ஆகிய 2 கட்சிகள் மந்திரி சபையில் சேர்க்கப்பட உள்ளது.

லல்லு பிரசாத் மீண்டும் காபினெட் மந்திரி ஆகிறார். அவருக்கு இரும்பு எக்கு துறை ஒதுக்கப்படும் என்று தெரிகிறது. கவர்னர்களாக இருக்கும் சிவராஜ்பாட்டீல், பரத்வாஜ் இருவரும் மீண்டும் மத்திய மந்திரி ஆக வாய்ப்புள்ளது.

சமீபத்தில் மேல்-சபை எம்.பி. ஆகி உள்ள அசோக் கங் குலிக்கு அறிவியல் தொழில் நுட்ப துறையை கொடுக்க பிரதமர் மன்மோகன்சிங் தீர்மானித்துள்ளார். அனைத்து மாநிலங்களுக்கும் உரிய பிரதிநிதித்துவம் கிடைக்கும் வகையிலும், இளம் எம்.பி.க்களுக்கு வாய்ப்பு கொடுக்கும் வகையிலும் மந்திரி சபை மாற்றம் இருக்கும்.

No comments: