Wednesday, July 6, 2011

வரி விலக்கு ரத்தாகிறது... இனி தமிழில் பெயர் வைத்தாலும் கேளிக்கை வரி !!முதல்வராக இருந்த போது கருணாநிதி கொண்டு வந்த திட்டங்களை ஒழிக்கும் பணியின் அடுத்த கட்டமாக, திரைப்படங்களுக்கு தமிழில் பெயர் சூட்டினால் அளிக்கப்பட்டு வந்த வரி விலக்கு சலுகை திரும்பப் பெறப்படுகிறது.

2001 முதல் 2006 வரை அ.தி.மு.க.ஆட்சியின் போது தியேட்டர்களுக்கு 25 சத வீதம் கேளிக்கை வரி விதிக்கப்பட்டது. தி.மு.க. ஆட்சியில் அது 15 சதவீதமாகக் குறைக்கப்பட்டது. அத்துடன் தமிழில் பெயர் சூட்டப்படும் படங்களுக்கும் முழு கேளிக்கை வரி விலக்கும் அளிக்கப்பட்டது.

அரசின் இந்த அறிவிப்பால் நிறைய படங்களுக்கு பெயர்கள் நல்ல தமிழில் சூட்டப்பட்டன. ஜெயம் ரவி நடித்த சம்திங் சம்திங் என்ற பெயரில் தயாரான படம் உனக்கும் எனக்கும் என மாறியது. ரஜினி நடித்த ரோபோ படம் எந்திரன் என மாற்றப்பட்டது.

கேளிக்கை வரி விலக்கு பெற தயாரிப்பாளர்கள் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்துக்கு தங்களின் பட தலைப்பு தமிழில் உள்ளது என்பதை குறிப்பிட்டு கடிதம் அனுப்ப வேண்டும். அக் கடிதத்தை தயாரிப்பாளர் சங்கம் ஆய்வு செய்து பரிந்துரை கடித்தத்தோடு வணிக வரித்துறைக்கு அனுப்பும். அங்குள்ள குழு தலைப்பை ஆராய்ந்து தமிழ் தலைப்பு என்று உறுதி செய்த பின் வரி விலக்கு அளிப்பதற்கான உத்தரவை வழங்கும்.

ஆனால் கடந்த 45 நாட்களாக வணிக வரித்துறை வரிச்சலுகை கடிதம் எதுவும் வழங்கவில்லை. கடைசியாக பாசக்கார நண்பர்கள் படம் மட்டும் வரிச்சலுகை பெற்றது. அதன் பிறகு வெளியான எத்தன் உள்பட பல படங்களுக்கு வரி விலக்கு கிடைக்கவில்லை. வரிச் சலுகையை பெரிய பட்ஜெட் படங்கள் அனுமதிப்பதைத் தவிர்க்கவே இது நிறுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

அதேநேரம் அரசின் இந்த முடிவுக்கு சினிமா உலகிலிருந்து சிறு முணுமுணுப்பு கூட கிளம்பவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அரசு தரும் புள்ளி விவரங்கள்.... சந்தேகம் கிளப்பும் ரிசர்வ் வங்கி !!பணவீக்கம், நாட்டின் வளர்ச்சி போன்றவை குறித்து அரசு தரும் புள்ளி விவரங்கள் சரியானதுதானா என்ற கேள்வி எழுகிறது, என ரிசர்வ் வங்கி ஆளுநர் சுப்பாராவ் கூறியுள்ளார்.

இது பொருளாதார அறிஞர்களைப் புருவம் உயர வைத்துள்ளது.

பணவீக்கம், விலை நிலை, நாட்டின் பொருளாதார வளர்ச்சி, வட்டி வீதம் என பல்வேறு விஷயங்களையும் சம்பந்தப்பட்ட அரசு அமைப்புகள் தரும் புள்ளி விவரங்களின் அடிப்படையிலேயே அரசு தீர்மானிக்கிறது. அறிவிப்புகளிலும் குறிப்பிடுகிறது.

இந்த புள்ளி விவரங்களில் பிழை இருந்தாலோ, தவறான எண்களைக் கொடுத்துவிட்டாலோ, பொருளாதாரமே ஆடிப்போய்விடும் அபாயம் உள்ளது.

ரிசர்வ் வங்கியின் 5வது புள்ளியியல் நாள் விழாவில் பங்கேற்ற சுப்பாராவ், இந்த புள்ளி விவரக் குழப்படிகளைப் பற்றி வெளிப்படையாகவே பேசியுள்ளார்.

அவர் கூறுகையில், "ரிசர்வ் வங்கி கொள்கை ரீதியான முடிவுகளை மேற்கொள்ள பல்வேறு புள்ளி விவரங்களைத்தான் நம்பியுள்ளது. ஆனால் இந்த புள்ளி விவரங்கள் பெரும்பாலும் சரியாக இருக்கிறதா என்ற சந்தேகம் உள்ளது.

குறிப்பாக வேலைவாய்ப்பு மற்றும் ஊதியம் தொடர்பான புள்ளி விவரங்களின் தரம் நம்பிக்கை தருவதாக இல்லை. ஒருவேளை இப்படி இருக்குமோ என்ற இரண்டாவது சந்தேகத்துக்கே வழி செய்கின்றன.

பணவீக்கம் பற்றி ஒவ்வொரு முறை அறிவிக்கும் போதும், இது உண்மைதானா என்று கேட்டுக் கொள்ள வேண்டியுள்ளது. நாம் அறிவிக்கும் புள்ளி விவரத்துக்கும் நிஜத்துக்கும் வித்தியாசங்கள் வருகின்றன. உதாரணமாக பொதுப் பணவீக்கம் 5.5 சதவீதமாக இருக்கும் என கணிக்கப்பட்டது. ஆனால் 7 சதவீதத்தைத் தாண்டிப் போகிறது.

அதேபோல கடந்த 2010 பிப்ரவரியில் பொருளாதார வளர்ச்சி 6.8 சதவீதம் என புள்ளிவிவரம் சொன்னது. ஆனால் உண்மையில் அந்த காலகட்டத்தில் மிக அபரிமிதமான வளர்ச்சிப் போக்கு இருந்தது. எனவே புள்ளிவிவரங்கள் உண்மையைப் பிரதிபலிக்கவில்லையோ என்ற சந்தேகத்தை தவிர்க்க முடியவில்லை. அரசு அமைப்புகள் சரியான, துல்லியமான விவரங்களைத் தரவேண்டும்," என்றார்.

அவரது இந்தப் பேச்சு, பல பொருளியல் மேதைகள் மனதிலும் இருந்த நீண்ட நாள் சந்தேகம் என்பதால், பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. சுப்பாராவின் இந்தப் பேச்சு ரிசர்வ் வங்கி தரும் புள்ளி விவரங்களின் நம்பகத் தன்மையை அதிகப்படுத்தியுள்ளதாக பேராசிரியர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

இதற்கெல்லாம் சிகரம் வைத்தது போல, நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜியே, அரசு அமைப்புகள் நம்பகத்தன்மையுடன் கூடிய துல்லியமான புள்ளி விவரங்களைத் தரவேண்டும். இல்லாவிட்டால் நாட்டை தவறான பாதைக்கு இட்டுச் செல்வது போலாகிவிடும், என்று கூறியுள்ளார்.

தயாநிதி மாறன் வீட்டைச் சுற்றி செல்லும் ரகசிய கேபிள்கள்.முறைகேடான வகையில் மத்திய ஜவுளித்துறை அமைச்சர் தயாநிதி மாறன் வீட்டைச் சுற்றி ஆப்டிகல் பைபர் கேபிள்கள் போடப்பட்டிருப்பது குறித்து விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து டெல்லி வந்த ஜெயலலிதா இன்று செய்தியாளர்களிடம் பேசுகையில்,

தயாநிதி மாறன் வீட்டிலிருந்து ரகசிய கேபிள்கள் செல்வதாக டைம்ஸ் நௌ டிவியில் வெளியான செய்தியைப் பார்த்தேன். சென்னைக்கு திரும்பியவுடன் இந்த விவகாரம் குறித்து ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுப்பேன் என்றார்.

மாறன், தொலைத் தொடர்புத்துறை அமைச்சராக இருந்தபோது தனது வீட்டில் பி.எஸ்.என்.எல் இணைப்புகளை பெருமளவில் முறைகேடாக பயன்படுத்தி வந்ததாகவும், கிட்டத்தட்ட ஒரு ரகசிய எக்ஸ்சேஞ்ச் ஆக அது பயன்படுத்தப்பட்டு வந்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. நூற்றுக்கணக்கான இணைப்புகளை வாங்கி அதை தனது சகோதரர் கலாநிதி மாறனுக்குச் சொந்தமான சன் டிவி சானல்களுக்கு முறைகேடாக பயன்படுத்தினார் தயாநிதி மாறன் என்பது குற்றச்சாட்டாகும். இதுகுறித்து மத்திய அரசிடம் ஏற்கனவே சிபிஐ தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் தற்போது தயாநிதி மாறன் வீட்டிலிருந்து சன் டிவி அலுவலகம் வரை ரகசிய கேபிள்கள் புதைக்கப்பட்டது தற்போது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

தயாநிதி மாறன் வீட்டிலிருந்து சன் டிவி அலுவலகம் வரை கிட்டத்தட்ட6.4 கிமீ அளவுக்கு இந்த கேபிள் கட்டமைப்பு செய்யப்பட்டுள்ளது. இதை தனது சகோதரர் கலாநிதி மாறனின் சன் டிவியின் சேனல்களுக்காக தயாநிதி மாறன் பயன்படுத்தியுள்ளார் என்று டைம்ஸ் நெளவ் செய்தி கூறுகிறது.

தயாநிதி மாறனின் வீட்டிலிருந்து சன் டி்வியின் அலுவலகம் வரை இந்த கேபிள்கள் செல்வது தெள்ளத் தெளிவாக தெரிகிறது. கேபிள் பதிக்கும் பணிக்கான அனுமதியை கடந்த 2008ம் ஆண்டு மே மாதம் சென்னை மாநகராட்சி சன் டிவிக்குக் கொடுத்துள்ளது. தனது வீட்டில் ரகசிய எக்ஸ்சேஞ்ச் செயல்படவில்லை என்று தயாநிதி மாறன் கூறி வருகிறார். ஆனால், இந்த கேபிள் கட்டமைப்பு ஏன் என்பதை அவர் இதுவரை விளக்கவில்லை என்றும் அந்த செய்தி தெரிவிக்கிறது.

முதல் கட்ட கலந்தாய்வு இன்று முடிந்தது : அரசு மருத்துவ கல்லூரிகள் 22-ந்தேதி திறப்பு.

முதல் கட்ட கலந்தாய்வு இன்று முடிகிறது: அரசு மருத்துவ கல்லூரிகள் 22-ந்தேதி திறப்பு; மாற்றுத் திறனாளிகளுக்கு நாளை என்ஜினீயரிங் கவுன்சிலிங்

தமிழ்நாட்டில் உள்ள 17 அரசு மருத்துவக் கல்லூரிகளில் உள்ள 1653 எம்.பி.பி. எஸ். இடங்களுக்கும், முதல் கட்ட கலந்தாய்வு 1-ந்தேதி தொடங்கி இன்று வரை நடந்தது.

9 தனியார் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள 670 இடங்களுக்கும், அரசு பல் மருத்துவக் கல்லூரியில் உள்ள 85 இடங்களுக்கும், இந்த மாத இறுதியில் கலந்தாய்வு நடைபெறும்.

ஏற்கனவே ஓ.சி., பி.சி., எம்.பி.சி., பி.சி. முஸ்லிம் ஆகிய பிரிவினருக்கான கவுன்சிலிங் முடிந்து விட்டது. இன்று எஸ்.சி., எஸ்.டி., எஸ்.டி - அருந்ததி பிரிவினருக்கான கவுன்சிலிங்கும் முடிந்து விட்டது. மொத்தமுள்ள 1653 இடங்களும் நிரம்பி விட்டன.

இதைத் தொடர்ந்து அரசு மருத்துவக்கல்லூரிகள் வருகிற 22-ந்தேதி திறக்கப்படுகிறது. கலந்தாய்வில் ஒதுக்கீட்டு கடிதங்கள் பெற்ற மாணவ - மாணவிகள் அந்தந்த கல்லூரிகளில் சேருவார்கள்.

சிலர் சேராமல் போவதால் ஏற்படும் காலி இடங்கள், சுயநிதி மருத்துவக் கல்லூரி எம்.பி.பி.எஸ்., இடங்கள், பல் மருத்துவக் கல்லூரிக்கான இடங்கள், 2-வது கட்ட கலந்தாய்வு இந்த மாத இறுதியில் நடைபெறும்.

வீட்டுப்பாடம் முடிக்காததால் மாணவியை நிர்வாணமாக்கி ஊர்வலமாக வரச்செய்த ஆசிரியை.

வீட்டுப்பாடம் முடிக்காததால் மாணவியை நிர்வாணமாக்கி ஊர்வலமாக வரச்செய்த ஆசிரியை: பெற்றோர்கள் முற்றுகைப் போராட்டம்

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள ஷாயூர் பகுதியில் தனியார் மகளிர் பள்ளி உள்ளது. இப்பள்ளியில் 1-ம் வகுப்பு படித்து வருபவள் சுவேதா (6) (பெயர் மாற்றம்) இவர் வீட்டுப் பாடம் முடிக்காததால் ஆசிரியை விஜயா (பெயர் மாற்றம்) கடும் ஆத்திரம் அடைந்தார்.

சுவேதாவை நிர்வாணமாக்கி பள்ளியில் ஊர்வலமாக வரச்செய்தார். பின்னர் அவளை அங்குள்ள கழிவறைக்குள் அடைத்து வைத்து சுத்தம் செய்யுமாறு கூறினார். இதனால் சுவேதா கதறி அழுதார்.

பின்னர் விஜயா அவளிடம் இங்கு நடந்ததை பெற்றோரிடம் கூறினால் பள்ளியை விட்டு நீக்கி விடுவேன் என்று மிரட்டினார். இதனால் அவர் பெற்றோரிடம் கூறவில்லை. ஆனால் அவளது தோழிகள் அவளது பெற்றோரிடம் ஆசிரியை நிர்வாண ஊர்வலம் நடத்தியது பற்றி கூறி விட்டனர்.

இதையறிந்ததும் சுவேதாவின் பெற்றோர் பள்ளியில் வந்து தட்டி கேட்டனர். இதையறிந்த மற்ற பெற்றோர்களும் பள்ளிக்கு எதிராக போராட்டம் நடத்தினர். இதையடுத்து பெற்றோர் அளித்த புகாரின் பேரில் ஆசிரியை விஜயா கைது செய்யப்பட்டார்.

மாவட்ட கல்வி அதிகாரி நடத்திய விசாரணையில் அப்பள்ளி அரசு அங்கீகாரம் பெறாமல் 19 ஆண்டுகள் இயங்கி வந்தது தெரியவந்தது. இதையடுத்து அப்பள்ளியின் அறங்காவலர்களிடம் கல்வி அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

'தமிழே தெரியாத, ஆட்டோமொபைல் தொழிலில் ஈடுபட்ட ஜெயதேவ், எப்படி சமச்சீர் கல்வி நூல்களைப் படித்தார்?'டிஏவி பள்ளிகளின் தலைவரான ஜெயதேவ் தமிழே படிக்கத் தெரியாதவர். 82 வயதான இவர் 78 வயது வரை ஆட்டோமொபைல் தொழிலில் ஈடுபட்டிருந்தவர். இப்படிப்பட்டவர் எப்படி சமச்சீர் கல்விகளைப் படித்தார் என்பது பெரும் வியப்பாக உள்ளது. சமச்சீர் கல்வி தொடர்பான ஆய்வுக் குழுவின் முடிவுகளை முற்றிலும் நிராகரிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று வாதிடப்பட்டது.

சமச்சீர் கல்வித் திட்டம் தொடர்பாக உச்சநீதிமன்ற உத்தரவுப்படி அமைக்கப்பட்ட ஆய்வுக் குழு தனது முடிவை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. அதில் சமச்சீர் கல்வி நூல்கள் தரமற்றவையாக உள்ளன, மாணவர்களின் சிந்தனையைத் தூண்டுவதாக அவை இல்லை, இவற்றைப் பயன்படுத்த முடியாது என்று அதில் கூறப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் நாளை முதல் தினசரி விசாரணை நடைபெறவுள்ளது. இந்த நிலையில், இன்று சமச்சீர் கல்வி திட்டத்தைக் கோரி மனு தாக்கல் செய்துள்ள மனோன்மணி சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

அதில், 10,000 பக்கங்களைக் கொண்டதாக சமச்சீர் கல்வித் திட்ட பாட நூல்கள் உள்ளன. இதை 4 முறை மட்டுமே கூடிய ஆய்வுக் குழுவினர் படித்து முடித்தது எப்படி?

இந்தக் குழுவில் இடம் பெற்றுள்ள திருமதி ஒய்ஜிபி, ஜெயதேவ் ஆகியோர் கல்வியாளர்களே அல்ல.

அதிலும் 82 வயதான ஜெயதேவ், 78 வயது வரை ஆட்டோமொபைல் தொழிலில் ஈடுபட்டிருந்தவர். அவருக்குத் தமிழே படிக்கத் தெரியாது. அப்படிப்பட்டவர் எப்படி சமச்சீர் கல்வித் திட்ட பாட நூல்களைப் படித்தார் என்பது பெரும் வியப்பாக உள்ளது.

சமச்சீர் கல்வித் திட்டம் குறித்து கருத்துக் கூற மட்டுமே இந்தக் குழுவுக்கு அதிகாரம் தரப்பட்டிருந்தது. மாறாக தீர்ப்பு கூற இவர்களுக்கு அதிகாரம் இல்லை.

இந்தக் குழு தெரிவித்துள்ள கருத்துக்களை அப்படியே நிராகரிக்க வேண்டும். இவற்றை நடைமுறைப்படுத்தக் கூடாது என்று மனோன்மணி தெரிவித்துள்ளார்.