Wednesday, July 6, 2011

'தமிழே தெரியாத, ஆட்டோமொபைல் தொழிலில் ஈடுபட்ட ஜெயதேவ், எப்படி சமச்சீர் கல்வி நூல்களைப் படித்தார்?'



டிஏவி பள்ளிகளின் தலைவரான ஜெயதேவ் தமிழே படிக்கத் தெரியாதவர். 82 வயதான இவர் 78 வயது வரை ஆட்டோமொபைல் தொழிலில் ஈடுபட்டிருந்தவர். இப்படிப்பட்டவர் எப்படி சமச்சீர் கல்விகளைப் படித்தார் என்பது பெரும் வியப்பாக உள்ளது. சமச்சீர் கல்வி தொடர்பான ஆய்வுக் குழுவின் முடிவுகளை முற்றிலும் நிராகரிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று வாதிடப்பட்டது.

சமச்சீர் கல்வித் திட்டம் தொடர்பாக உச்சநீதிமன்ற உத்தரவுப்படி அமைக்கப்பட்ட ஆய்வுக் குழு தனது முடிவை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. அதில் சமச்சீர் கல்வி நூல்கள் தரமற்றவையாக உள்ளன, மாணவர்களின் சிந்தனையைத் தூண்டுவதாக அவை இல்லை, இவற்றைப் பயன்படுத்த முடியாது என்று அதில் கூறப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் நாளை முதல் தினசரி விசாரணை நடைபெறவுள்ளது. இந்த நிலையில், இன்று சமச்சீர் கல்வி திட்டத்தைக் கோரி மனு தாக்கல் செய்துள்ள மனோன்மணி சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

அதில், 10,000 பக்கங்களைக் கொண்டதாக சமச்சீர் கல்வித் திட்ட பாட நூல்கள் உள்ளன. இதை 4 முறை மட்டுமே கூடிய ஆய்வுக் குழுவினர் படித்து முடித்தது எப்படி?

இந்தக் குழுவில் இடம் பெற்றுள்ள திருமதி ஒய்ஜிபி, ஜெயதேவ் ஆகியோர் கல்வியாளர்களே அல்ல.

அதிலும் 82 வயதான ஜெயதேவ், 78 வயது வரை ஆட்டோமொபைல் தொழிலில் ஈடுபட்டிருந்தவர். அவருக்குத் தமிழே படிக்கத் தெரியாது. அப்படிப்பட்டவர் எப்படி சமச்சீர் கல்வித் திட்ட பாட நூல்களைப் படித்தார் என்பது பெரும் வியப்பாக உள்ளது.

சமச்சீர் கல்வித் திட்டம் குறித்து கருத்துக் கூற மட்டுமே இந்தக் குழுவுக்கு அதிகாரம் தரப்பட்டிருந்தது. மாறாக தீர்ப்பு கூற இவர்களுக்கு அதிகாரம் இல்லை.

இந்தக் குழு தெரிவித்துள்ள கருத்துக்களை அப்படியே நிராகரிக்க வேண்டும். இவற்றை நடைமுறைப்படுத்தக் கூடாது என்று மனோன்மணி தெரிவித்துள்ளார்.

No comments: