Wednesday, July 6, 2011

தண்டவாளத்தின் நடுவில் படுத்து உயிர் தப்பிய பெண் என்ஜினீயர்.

கீழே விழுந்த பையை எடுத்தபோது தவறி விழுந்தார்: தண்டவாளத்தின் நடுவில் படுத்து உயிர் தப்பிய பெண் என்ஜினீயர்

சென்னை சூளைமேட்டைச் சேர்ந்தவர் மனிஷா பாண்டே செங்கல்பட்டு அருகே பரனூரில் உள்ள ஐ.டி. நிறுவனம் ஒன்றில் கம்ப்யூட்டர் என்ஜினீயராக பணிபுரிந்து வருகிறார்.

இவர் தினமும் மின்சார ரெயிலில் வேலைக்கு சென்று வருகிறார். நேற்று மதியம் 12.30 மணி அளவில் ரெயில் ஏறுவதற்காக சைதாப்பேட்டை ரெயில் நிலையத்துக்கு வந்தார். ரெயிலுக்காக பிளாட்பாரத்தில் காத்திருந்தபோது அவரது கைப்பை தரையில் விழுந்துவிட்டது. அதை எடுப்பதற்காக குனிந்தார். ஒரு கையில் செல்போனை வைத்து பேசியபடி, மறு கையால் கைப்பையை எடுக்க முயன்றார்.

அப்போது எதிர்பாராத விதமாக கால் தவறி தண்டவாளத்தில் விழுந்து விட்டார். அந்த நேரத்தில் தாம்பரம் செல்லும் மின்சார ரெயில் வந்தது. உடனே மனிஷா புத்திசாலித்தனமாக தண்டவாளத்தின் நடுவில் படுத்துக் கொண்டார்.

இதைப் பார்த்த டிரைவர் பிரேக் போட்டு ரெயிலை நிறுத்த முயன்றார். ஆனால் அதற்குள் மனிஷா படுத்திருந்த இடத்தை 6 பெட்டிகள் கடந்து விட்டன. ரெயில் நின்றதும், டிரைவரும், பிளாட்பாரத்தில் நின்றிருந்த பயணிகளும் தண்டவாளத்தின் நடுவில் கிடந்த மனிஷாவை காப்பாற்றி வெளியே கொண்டு வந்தனர்.

இதில் அதிசயம் என்னவென்றால், ஆறு பெட்டிகள் கடந்தும் அவரது உடலில் சிறு காயங்கள்கூட ஏற்படவில்லை. அங்கிருந்தவர்கள் அவரை ஆச்சரியத்துடன் பார்த்து ஆண்டவன்தான் காப்பாற்றி இருக்கிறான் என்று ஆறுதல் கூறினர்.

இதுபற்றி மனிஷாவிடம் கேட்டபோது, பதில் கூற மறுத்து விட்டார்.

No comments: