Wednesday, July 6, 2011

திருவட்டாறு அருகே ஒரு மாணவர் கூட வராத அரசு தொடக்க பள்ளி : 2 ஆசிரியர்கள் இருந்தும் பணியாற்ற முடியாத அவலம் .

திருவட்டாறு அருகே ஒரு மாணவர் கூட வராத அரசு தொடக்க பள்ளி: 2 ஆசிரியர்கள் இருந்தும் பணியாற்ற முடியாத அவலம்

குமரி மாவட்டத்தில் ஏராளமான தனியார் மெட்ரிகுலேசன் பள்ளிகள் உள்ளன. தனியார் பள்ளிகள் பெருகிய பின்பு அரசு தொடக்க பள்ளிகளில் மாணவர் சேர்க்கை ஆண்டுக்கு ஆண்டு குறைந்து வருகிறது.

தமிழகம் முழுவதும் இந்த நிலைதான் காணப்படுகிறது. குறிப்பாக குமரி மாவட்டத்தில் செயல்படும் பல அரசு தொடக்க பள்ளிகளில் மிகக்குறைந்த அளவே மாணவ- மாணவிகள் உள்ளனர். திருவட்டாறு கொல்வேல் பகுதியில் உள்ள ஒரு அரசு தொடக்க பள்ளியில் ஒன்று முதல் 5 வரையிலான வகுப்புகளில் கடந்த கல்வி ஆண்டில் 10 மாணவ- மாணவிகள் படித்தனர்.

இப்பள்ளியில் இங்கு ஒரு தலைமை ஆசிரியரும், ஒரு வகுப்பாசிரியரும் என 2 பேர் பணிபுரிந்து வருகிறார்கள். இந்த கல்வி ஆண்டு தொடங்கிய பின்பு ஒன்று முதல் 5-ம் வகுப்புக்கு இன்று வரை ஒரு மாணவர் கூட வரவில்லை. ஆசிரியர்கள் இருவர் மட்டும் தினமும் பள்ளிக்கு வந்து மாலை வரை சும்மாவே இருந்துவிட்டு செல்கிறார்கள்.

இதுபற்றி ஊர்மக்களும், பிரமுகர்களும் கல்வி அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் பள்ளியில் மாணவர் சேர்க்கை நடைபெறாததற்கான காரணம் குறித்து விசாரித்தனர். இதுபற்றி திருவட்டாறு பகுதி தொடக்க கல்வி அதிகாரி ஜெயராஜிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-

கொல்வேல் அரசு தொடக்கப்பள்ளி மாணவர் சேர்க்கை பட்டியலில் 12 மாணவர்கள் இருப்பதாக பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் அவர்கள் யாருமே இப்போது பள்ளிக்கு வருவதில்லை. இங்கிருந்து “மாற்று சான்றிதழும்” பெறவில்லை. இவர்கள் வேறு பள்ளியில் சேர்ந்து படித்து வருவதாக எங்களுக்கு தெரிய வந்துள்ளது.

தற்போது செயல்பாட்டில் இருக்கும் அரசு கட்டாய கல்வி சட்டத்தின்கீழ் தொடக்க நிலையில் வேறு பள்ளிகளில் சேருவதற்கு மாற்று சான்றிதழ் தேவை இல்லை. எனவேதான் இங்கு படித்து வந்த மாணவர்கள் மாற்று சான்றிதழ் வாங்காமலேயே வேறு பள்ளிகளில் சேர்ந்துவிட்டனர்.

கொல்வேல் பள்ளியை போல் புலிப்பனம், ஏற்றக்கோடு, முகிலன்விளை ஆகிய கிராமங்களில் உள்ள தொடக்கப்பள்ளிகளிலும் மாணவர் எண்ணிக்கை வெகுவாக குறைந்துவிட்டது. எனவே இப்பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களை இடமாற்றம் செய்யலாமா? பள்ளிகளை மூடிவிடலாமா? என்பது பற்றி மாவட்ட கல்வி அலுவலக அதிகாரிகள்தான் முடிவு செய்ய வேண்டும்.

இதுபற்றி தகவல்களை நாங்கள் அவர்களுக்கு தெரிவித்து உள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

No comments: