Wednesday, July 6, 2011

அரசு தரும் புள்ளி விவரங்கள்.... சந்தேகம் கிளப்பும் ரிசர்வ் வங்கி !!



பணவீக்கம், நாட்டின் வளர்ச்சி போன்றவை குறித்து அரசு தரும் புள்ளி விவரங்கள் சரியானதுதானா என்ற கேள்வி எழுகிறது, என ரிசர்வ் வங்கி ஆளுநர் சுப்பாராவ் கூறியுள்ளார்.

இது பொருளாதார அறிஞர்களைப் புருவம் உயர வைத்துள்ளது.

பணவீக்கம், விலை நிலை, நாட்டின் பொருளாதார வளர்ச்சி, வட்டி வீதம் என பல்வேறு விஷயங்களையும் சம்பந்தப்பட்ட அரசு அமைப்புகள் தரும் புள்ளி விவரங்களின் அடிப்படையிலேயே அரசு தீர்மானிக்கிறது. அறிவிப்புகளிலும் குறிப்பிடுகிறது.

இந்த புள்ளி விவரங்களில் பிழை இருந்தாலோ, தவறான எண்களைக் கொடுத்துவிட்டாலோ, பொருளாதாரமே ஆடிப்போய்விடும் அபாயம் உள்ளது.

ரிசர்வ் வங்கியின் 5வது புள்ளியியல் நாள் விழாவில் பங்கேற்ற சுப்பாராவ், இந்த புள்ளி விவரக் குழப்படிகளைப் பற்றி வெளிப்படையாகவே பேசியுள்ளார்.

அவர் கூறுகையில், "ரிசர்வ் வங்கி கொள்கை ரீதியான முடிவுகளை மேற்கொள்ள பல்வேறு புள்ளி விவரங்களைத்தான் நம்பியுள்ளது. ஆனால் இந்த புள்ளி விவரங்கள் பெரும்பாலும் சரியாக இருக்கிறதா என்ற சந்தேகம் உள்ளது.

குறிப்பாக வேலைவாய்ப்பு மற்றும் ஊதியம் தொடர்பான புள்ளி விவரங்களின் தரம் நம்பிக்கை தருவதாக இல்லை. ஒருவேளை இப்படி இருக்குமோ என்ற இரண்டாவது சந்தேகத்துக்கே வழி செய்கின்றன.

பணவீக்கம் பற்றி ஒவ்வொரு முறை அறிவிக்கும் போதும், இது உண்மைதானா என்று கேட்டுக் கொள்ள வேண்டியுள்ளது. நாம் அறிவிக்கும் புள்ளி விவரத்துக்கும் நிஜத்துக்கும் வித்தியாசங்கள் வருகின்றன. உதாரணமாக பொதுப் பணவீக்கம் 5.5 சதவீதமாக இருக்கும் என கணிக்கப்பட்டது. ஆனால் 7 சதவீதத்தைத் தாண்டிப் போகிறது.

அதேபோல கடந்த 2010 பிப்ரவரியில் பொருளாதார வளர்ச்சி 6.8 சதவீதம் என புள்ளிவிவரம் சொன்னது. ஆனால் உண்மையில் அந்த காலகட்டத்தில் மிக அபரிமிதமான வளர்ச்சிப் போக்கு இருந்தது. எனவே புள்ளிவிவரங்கள் உண்மையைப் பிரதிபலிக்கவில்லையோ என்ற சந்தேகத்தை தவிர்க்க முடியவில்லை. அரசு அமைப்புகள் சரியான, துல்லியமான விவரங்களைத் தரவேண்டும்," என்றார்.

அவரது இந்தப் பேச்சு, பல பொருளியல் மேதைகள் மனதிலும் இருந்த நீண்ட நாள் சந்தேகம் என்பதால், பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. சுப்பாராவின் இந்தப் பேச்சு ரிசர்வ் வங்கி தரும் புள்ளி விவரங்களின் நம்பகத் தன்மையை அதிகப்படுத்தியுள்ளதாக பேராசிரியர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

இதற்கெல்லாம் சிகரம் வைத்தது போல, நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜியே, அரசு அமைப்புகள் நம்பகத்தன்மையுடன் கூடிய துல்லியமான புள்ளி விவரங்களைத் தரவேண்டும். இல்லாவிட்டால் நாட்டை தவறான பாதைக்கு இட்டுச் செல்வது போலாகிவிடும், என்று கூறியுள்ளார்.

No comments: