Wednesday, July 6, 2011

வரி விலக்கு ரத்தாகிறது... இனி தமிழில் பெயர் வைத்தாலும் கேளிக்கை வரி !!



முதல்வராக இருந்த போது கருணாநிதி கொண்டு வந்த திட்டங்களை ஒழிக்கும் பணியின் அடுத்த கட்டமாக, திரைப்படங்களுக்கு தமிழில் பெயர் சூட்டினால் அளிக்கப்பட்டு வந்த வரி விலக்கு சலுகை திரும்பப் பெறப்படுகிறது.

2001 முதல் 2006 வரை அ.தி.மு.க.ஆட்சியின் போது தியேட்டர்களுக்கு 25 சத வீதம் கேளிக்கை வரி விதிக்கப்பட்டது. தி.மு.க. ஆட்சியில் அது 15 சதவீதமாகக் குறைக்கப்பட்டது. அத்துடன் தமிழில் பெயர் சூட்டப்படும் படங்களுக்கும் முழு கேளிக்கை வரி விலக்கும் அளிக்கப்பட்டது.

அரசின் இந்த அறிவிப்பால் நிறைய படங்களுக்கு பெயர்கள் நல்ல தமிழில் சூட்டப்பட்டன. ஜெயம் ரவி நடித்த சம்திங் சம்திங் என்ற பெயரில் தயாரான படம் உனக்கும் எனக்கும் என மாறியது. ரஜினி நடித்த ரோபோ படம் எந்திரன் என மாற்றப்பட்டது.

கேளிக்கை வரி விலக்கு பெற தயாரிப்பாளர்கள் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்துக்கு தங்களின் பட தலைப்பு தமிழில் உள்ளது என்பதை குறிப்பிட்டு கடிதம் அனுப்ப வேண்டும். அக் கடிதத்தை தயாரிப்பாளர் சங்கம் ஆய்வு செய்து பரிந்துரை கடித்தத்தோடு வணிக வரித்துறைக்கு அனுப்பும். அங்குள்ள குழு தலைப்பை ஆராய்ந்து தமிழ் தலைப்பு என்று உறுதி செய்த பின் வரி விலக்கு அளிப்பதற்கான உத்தரவை வழங்கும்.

ஆனால் கடந்த 45 நாட்களாக வணிக வரித்துறை வரிச்சலுகை கடிதம் எதுவும் வழங்கவில்லை. கடைசியாக பாசக்கார நண்பர்கள் படம் மட்டும் வரிச்சலுகை பெற்றது. அதன் பிறகு வெளியான எத்தன் உள்பட பல படங்களுக்கு வரி விலக்கு கிடைக்கவில்லை. வரிச் சலுகையை பெரிய பட்ஜெட் படங்கள் அனுமதிப்பதைத் தவிர்க்கவே இது நிறுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

அதேநேரம் அரசின் இந்த முடிவுக்கு சினிமா உலகிலிருந்து சிறு முணுமுணுப்பு கூட கிளம்பவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

1 comment:

கோவி.கண்ணன் said...

//வரி விலக்கு ரத்தாகிறது... //

இதில் 'ரத்து' என்பது உருதுச் சொல்.

'நீக்கப்படுகிறது' என்பதே அதற்கு மாற்றான அதே பொருளில் ஆன சரியானச் சொல்