Wednesday, December 21, 2011

மலையாளிக்கும் தமிழனுக்கும் உள்ள வித்தியாசம் : நெஞ்சை தொடும் சம்பவம்.



முல்லைப் பெரியாறு அணைப் பிரச்சனையால் கேரள வாழ் தமிழ் மக்கள் தாக்கப்பட்டு உயிரை கையில் பிடித்துக் கொண்டு பெரும் காட்டு வழிகளில் இருட்டு நேரங்களில் நடையாய் நடந்து தமிழகத்திற்குள் வருவதைப் பார்த்து கொந்தளித்துப் போயிருக்கின்றனர் தமிழக மக்கள்.

இந்த முல்லைப் பெரியாறு அணையில் தமிழகத்திற்கு உள்ள உரிமையையும், தமிழகத்தை நம்பியே கேரளா இருப்பதை கேரள மக்களுக்கு உணர்த்தவும் வேண்டி கேரளா செல்லும் 13 வழித் தடங்களை மறிக்கும் போராட்டத்தை முன்னின்று நடத்தியது ம.தி.மு.க.

வாளையாறு வழித் தடத்தில் க.க சாவடியில் நடந்த உணர்ச்சி மிகப் பெருங்கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது... கேரள ரெஜிஸ்ட்ரேஷன் கொண்ட ஆம்புலன்ஸ் வேன் சைரன் எழுப்பிக் கொண்டு வர…உயிர் காக்க போகும் அந்த வாகனத்திற்கு வழி விடுங்கள் என்று மைக்கில் குரலொலிக்க..

சாலையை மறித்து நின்ற மொத்தக் கூட்டமும் வழி விட்டு நிற்க அந்த ஆம்புலன்ஸ் வாகனத்திற்கு பின்னாலயே கேரளா ரெஜிஸ்ட்ரேசன் கொண்ட ஒரு டூ வீலரில் ஒரு மலையாளி வேகமெடுப்பதை பார்த்து டூ வீலரை தடுத்து விட்டனர் போராட்டக்காரர்கள். ஒரு கும்பல் வண்டி சாவியைப் பிடுங்கப் போக.

அடிடா அந்த மலையாளத்துக்காரன என இன்னொரு கும்பல் பாய வெல வெலத்துப் போன அந்த மலையாளிக்கு போலீஸ்காரர்கள் உதவப் போனாலும் யாரும் கேட்பதாயில்லை.

ஆனால் அந்த மலையளியோ..என்ட அச்சன் மரிச்சுப் போயி. ஆம்புலன்ஸ்ல ஏற்றிக் கொண்டு போகுனுண்டு..என உயிருக்குப் பயந்து பதறுவதைப் பார்த்தவர்கள்…விட்ருங்கப்பா அந்த ஆளை... இறுதிக் காரியத்துக்காக போற ஒரு மனுஷன நிறுத்துனதே தப்பு.

கேரளாக்காரனுகளுக்கு தான் உணர்ச்சி இல்லாம நம்ம மக்கள அடிச்சு துரத்துறனுகன்னா நாமளும் அதையே செய்யறதுல என்ன உணர்வு இருக்கு.? மலையாளிக்கும் தமிழனுக்கும் வித்தியாசமிருக்கு. அதை அவுங்க உணர்றதுக்கான சம்பவமா கூட இது இருக்கலாம்.

அந்தாள விட்ருங்க..என கூட்டத்தை விலக்கி ஒருவர் அனுப்பி வைக்க... அந்த மலையாளி கண்ணீர் விட்டபடியே அங்கிருந்து நகர்ந்து போனார்.

கோவை அருள்குமார்

கேரள அரசை கண்டித்து இன்று மதுரையில் வக்கீல்கள் ரெயில் மறியல் : 100 பேர் கைது.

கேரள அரசை கண்டித்து இன்று மதுரையில் வக்கீல்கள் ரெயில் மறியல்: 100 பேர் கைது

கேரள அரசை கண்டித்து இன்று மதுரையில் வக்கீல்கள் ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். 100 வக்கீல் களை போலீசார் கைது செய்தனர். முல்லை பெரியாறு அணை விவகாரத்தில் கேரள அரசின் போக்கை கண்டித்து மதுரை மாவட்ட வக்கீல்கள் சங்கம் சார்பில் கடந்த சில நாட்களாக பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது.

இன்று மதுரை ரெயில் நிலையத்தில் வக்கீல்கள் சங்கம் சார்பில் ரெயில் மறியல் போராட்டம் நடைபெறுவதாக அறிவிக்கப் பட்டிருந்தது. இதையடுத்து ரெயில் நிலையத்தில் ஏராளமான போலீசார் குவிக்கப் பட்டிருந்தனர். இன்று காலை மதுரை மாவட்ட வக்கீல்கள் சங்க தலைவர் தர்மராஜ், செயலாளர் ஏ.கே.ராமசாமி ஆகியோர் தலைமையில் 100 வக்கீல்கள் மாவட்ட கோர்ட்டில் இருந்து ஊர்வலமாக மதுரை ரெயில் நிலையம் நோக்கி வந்தனர்.

பின்னர் வக்கீல்கள் ரெயில் நிலையத்துக்குள் நுழைந்து 11.35 மணிக்கு குருவாயூரில் இருந்து சென்னை நோக்கி செல்லும் குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரெயிலை மறித்து ரெயிலில் கறுப்பு கொடி ஏற்றி மறியல் போராட்டம் நடத்தினர்.

அங்கு பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டிருந்த போலீசார் ரெயில் மறியலில் ஈடுபட்ட 100 வக்கீல்களையும் கைது செய்து வேனில் அழைத்து சென்றனர். இந்த ரெயில் மறியல் போராட்டத்தால் மதுரை ரெயில் நிலையத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

கேரளாவுக்கு செல்லும் சாலைகளை மறித்து முற்றுகை போராட்டம் ; வைகோ, பழ.நெடுமாறன் கைது.

தேனி மாவட்டத்தில் இருந்து கேரளாவுக்கு செல்லும் சாலைகளை மறித்து முற்றுகை போராட்டம்; வைகோ, பழ.நெடுமாறன் கைது

முல்லை பெரியாறு அணை பிரச்சினையில் கேரள அரசை கண்டித்து கேரளாவுக்கு செல்லும் 13 மலைச்சாலைகளை முற்றுகையிடும் போராட்டம் நடத்த ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ அழைப்பு விடுத்திருந்தார். தேனி மாவட்டத்தில் குமுளி சாலையில் லோயர் கேம்ப் பகுதியில் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, உலக தமிழர் பேரமைப்பு தலைவர் பழ.நெடுமாறன், முல்லை பெரியாறு பாசன 5 மாவட்ட விவசாய சங்க தலைவர் கம்பம் கே.எம்.அப்பாஸ் ஆகியோர் தலைமையில் கேரளாவுக்கு செல்லும் உணவு பொருட்களை தடுத்து நிறுத்தும் முற்றுகை போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இதேபோல கம்பம் மெட்டு பகுதியில் மல்லை சத்யா தலைமையிலும், போடி மெட்டுவில் பார்வர்டு பிளாக் எம்.எல்.ஏ. கதிவரன் தலைமையிலும் முற்றுகை போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த முற்றுகை போராட்டத்தில் கலந்து கொள்வதற்காக கார்- வேன்களில் ம.தி.மு.க. தொண்டர்கள் வந்து குவிய தொடங்கினர்.

இது தவிர கம்பம், உத்தமபாளையம், கூடலூர், தேனி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த விவசாயிகளும், பொதுமக்களும் அணி, அணியாக திரண்டு வர தொடங்கினர். உத்தமபாளையம் தாலுகா முழுவதும் ஏற்கனவே 144 போலீஸ் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஆனாலும் இந்த தடை உத்தரவை மீறி போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. போராட்டக்காரர்கள் குமுளி எல்லை வரை சென்றால் அசம்பாவித சம்பவங்கள் நடைபெறும் என கருதி போலீசார் அங்கு செல்லவிடாமல் தடுப்பதற்கான அனைத்து நடவடிக்கை களையும் மேற்கொண்டனர். எல்லைப் பகுதியில் ஏராளமான போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டுள்ளனர்.

கம்பம் - குமுளி ரோட்டில் உள்ள வ.உ.சி மைதானத்தில் வைகோ மற்றும் தலைவர்கள் பேசுவதற்காக மேடைகள் அமைக்கப்பட்டிருந்தது. இங்கு மறியல் நடத்தவதற்காக காலை முதலே தொண்டர்களும், விவசாயிகளும் வந்து குவிந்தனர். வைகோ தேனி சமதர்மபுரம் சிவராம் நகரில் உள்ள உறவினர் வீட்டில் தங்கி இருந்தார்.

அங்கிருந்து 10.30 மணியளவில் காரில் புறப்பட்டு வந்தார். உத்தமபாளையத்தை அடுத்துள்ள சீலையம்பட்டி அருகே வேனில் வைகோ, பழ.நெடுமாறன் மற்றும் அவர்களுடன் வந்தவர் களையும் போலீசார் தடுத்து நிறுத்தினர். பின்னர் போலீசார் வைகோவிடம் தமிழக எல்லை சாலையில் மறியல் நடத்த அனுமதி அளிக்கவில்லை என்று கூறினர். ஆனால் வைகோ தொடர்ந்து செல்ல முயன்றார்.

இதையடுத்து போலீசாரின் அனுமதியை மீறி சென்றதால் வைகோ, பழ.நெடுமாறன், கே.எம்.அப்பாஸ் உள்பட முக்கிய நிர்வாகிகளை கைது செய்து போலீஸ் வேனில் ஏற்றினர். அப்போது அங்கு கூடியிருந்த ஏராளமானோர் வேனை மறித்து போலீசாருக்கு எதிராக கோஷமிட்டனர். பின்னர் போலீசார் கேட்டுக்கொண்டதன் பேரில் வைகோ அங்கு கூடியிருந்தவர்களிடம் போலீசார் தங்கள் கடமையை செய்யவிடுங்கள் என்று கூறினார்.

இதனையடுத்து போலீசார் வைகோ, பழ. நெடுமாறன், அப்பாஸ் ஆகியோரை போலீசார் வேனில் அழைத்து சென்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இந்நிலையில் கம்பம்- குமுளி ரோட்டில் உள்ள வ.உ.சி. திடலில் ம.தி.மு.க. துணை பொது செயலாளர் மல்லை சத்யா தலைமையில் தலைமையில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் ம.தி.மு.க.வினர், விவசாயிகள், பொதுமக்கள் உள்பட 3 ஆயிரத்திற்கு மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

கம்பம் மெட்டு சாலையில் ம.தி.மு.க. துணை பொது செயலாளர் துரை. பாலகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கேரள அரசுக்கு எதிராக கோஷமிட்டனர். இதே போல் கேரளா செல்லும் எல்லைச்சாலையான போடி மெட்டில் அகில இந்திய பார்வர்டு பிளாக் எம்.எல்.ஏ. கதிரவன், பாரதீய பார்வர்டு பிளாக் தலைவர் முருகன்ஜி தலைமையில் முற்றுகை போராட்டம் நடந்தது.

இதில் சிவகங்கை மாவட்ட ம.தி.மு.க. செயலாளர் சிவந்தியப்பன், திருச்சி புறநகர் மாவட்ட செயலாளர் நடராஜன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். மறியலில் ஈடுபட்டவர்கள் கேரள நோக்கி செல்ல முயன்ற போது அனைவரையும் போலீசார் கைது செய்தனர்.

தனுராசனம், நாவாயாசனம், பூங்கொடி ஆசனம்.

தனுராசனம்.
தனுராசனம்

செய்முறை:

விரிப்பில் குப்புறபடுத்தநிலையில் இருகைகளையும் உடலோடு ஒட்டி தரையில் வையுங்கள். இரு முழங்கால்களையும் மடக்கி, ஒன்றுமாற்றி ஒன்றாக, பின்புற பாகத்தில் குதிகால் படுமாறு சில தடவை செய்யவும். அதற்கு பிறகு இரு கைகளால் பின்புறமாக அந்தந்த பக்கத்து கணுக்காலை பிடித்து முழங்காலை வெளிப்பக்கமாய் விரித்து தலையையும், நெஞ்சையும் தூக்கவும். இந்த நிலையில் இரு பாதங்களும் சேர்ந்தே இருக்கட்டும். முழங்கால்களை மட்டும் விரியுங்கள். வயிற்றுப்பகுதி, தரையில் இருக்கும் நிலையில், உடம்பு வில் போல அமையவேண்டும். இயல்பான சுவாசத்தில் 15 வினாடி இருந்து, பழைய நிலைக்கு வரவும்.

பயன்கள்:

முதுகு தண்டு வலி குணமாகும். பின்புற ஊளைசதை குறையும். தொந்தி காணாமல் போகும். வயிற்றிலுள்ள சிறுகுடல், பெருங்குடல், கிட்னிகள், மூத்திரப்பை, கைகள் ஆகியவை பின்னோக்கி இழுக்கப்படுவதால், தோளிலிருந்து மார்பு, நுரையீரல், இதயம், உதர விதானம், கல்லீரல், மண்ணீரல் போன்ற மிக முக்கியமான உறுப்புகளுக்கு புதிய ரத்தம் பாய்வதால், அவை நன்கு இயங்கும். நீரிழிவு, மஞ்சள்காமாலை, மலட்டுத் தன்மை, செரிமான கோளாறுகள் அகலும். இது பச்சமோத்தாசனத்துக்கு மாற்று ஆசனமும்கூட!


நாவாயாசனம்.
நாவாயாசனம்

செய்முறை:

விரிப்பில் வடக்கு நோக்கி தலைவைத்து மல்லாந்து படுத்து, இரு கால்களையும் மேலே தூக்கவும். அதற்கு பிறகு தலை, தோள்பட்டையையும் மேலே தூக்கி, உடம்பை பிருஷ்டபாகத்தில் நிறுத்தவேண்டும். இரு உள்ளங்கைகளையும் கீழே வைத்த நிலையில், தோள்பட்டைக்கு இணையாக முழங்காலுக்கு வெளியே நீட்ட வேண்டும். இந்த நிலையில் 15 விநாடிகள் இருந்து, மறுபடியும் பழைய நிலைக்கு திரும்பவும்.

பயன்கள்:

மல - ஜல பிரச்சினைகள் வராது. உடல் எடை குறையும். பரதநாட்டியம், சங்கீதம், உடற்பயிற்சியை விட, உடலில் பிராணசக்தியை அதிகரிக்கும் ஆற்றல், நாவாயாசனத்துக்கு உண்டு. தவிர, இது தனுராசனத்துக்கு மாற்று ஆசனமும்கூட!


பூங்கொடி ஆசனம்.
பூங்கொடி ஆசனம்

செய்முறை:

இயல்பான சுவாசத்தில், சிரசாசன நிலைக்கு வரவும். வலது காலை லேசாக மடக்கி, இடது காலால் வலதுகாலை மெல்ல சுற்றவும். அடுத்த படியாக இதையே மாற்றி செய்யவேண்டும்.

பயன்கள்:

பாத வலி, மூட்டுப்பிடிப்பு, கால் வீக்கம், காலில் நரம்புகள் புடைத்து சுருக்கிக்கொள்ளுதல் போன்ற நோய்கள் குணமாகும்.