Wednesday, December 21, 2011

கேரளாவுக்கு செல்லும் சாலைகளை மறித்து முற்றுகை போராட்டம் ; வைகோ, பழ.நெடுமாறன் கைது.

தேனி மாவட்டத்தில் இருந்து கேரளாவுக்கு செல்லும் சாலைகளை மறித்து முற்றுகை போராட்டம்; வைகோ, பழ.நெடுமாறன் கைது

முல்லை பெரியாறு அணை பிரச்சினையில் கேரள அரசை கண்டித்து கேரளாவுக்கு செல்லும் 13 மலைச்சாலைகளை முற்றுகையிடும் போராட்டம் நடத்த ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ அழைப்பு விடுத்திருந்தார். தேனி மாவட்டத்தில் குமுளி சாலையில் லோயர் கேம்ப் பகுதியில் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, உலக தமிழர் பேரமைப்பு தலைவர் பழ.நெடுமாறன், முல்லை பெரியாறு பாசன 5 மாவட்ட விவசாய சங்க தலைவர் கம்பம் கே.எம்.அப்பாஸ் ஆகியோர் தலைமையில் கேரளாவுக்கு செல்லும் உணவு பொருட்களை தடுத்து நிறுத்தும் முற்றுகை போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இதேபோல கம்பம் மெட்டு பகுதியில் மல்லை சத்யா தலைமையிலும், போடி மெட்டுவில் பார்வர்டு பிளாக் எம்.எல்.ஏ. கதிவரன் தலைமையிலும் முற்றுகை போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த முற்றுகை போராட்டத்தில் கலந்து கொள்வதற்காக கார்- வேன்களில் ம.தி.மு.க. தொண்டர்கள் வந்து குவிய தொடங்கினர்.

இது தவிர கம்பம், உத்தமபாளையம், கூடலூர், தேனி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த விவசாயிகளும், பொதுமக்களும் அணி, அணியாக திரண்டு வர தொடங்கினர். உத்தமபாளையம் தாலுகா முழுவதும் ஏற்கனவே 144 போலீஸ் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஆனாலும் இந்த தடை உத்தரவை மீறி போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. போராட்டக்காரர்கள் குமுளி எல்லை வரை சென்றால் அசம்பாவித சம்பவங்கள் நடைபெறும் என கருதி போலீசார் அங்கு செல்லவிடாமல் தடுப்பதற்கான அனைத்து நடவடிக்கை களையும் மேற்கொண்டனர். எல்லைப் பகுதியில் ஏராளமான போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டுள்ளனர்.

கம்பம் - குமுளி ரோட்டில் உள்ள வ.உ.சி மைதானத்தில் வைகோ மற்றும் தலைவர்கள் பேசுவதற்காக மேடைகள் அமைக்கப்பட்டிருந்தது. இங்கு மறியல் நடத்தவதற்காக காலை முதலே தொண்டர்களும், விவசாயிகளும் வந்து குவிந்தனர். வைகோ தேனி சமதர்மபுரம் சிவராம் நகரில் உள்ள உறவினர் வீட்டில் தங்கி இருந்தார்.

அங்கிருந்து 10.30 மணியளவில் காரில் புறப்பட்டு வந்தார். உத்தமபாளையத்தை அடுத்துள்ள சீலையம்பட்டி அருகே வேனில் வைகோ, பழ.நெடுமாறன் மற்றும் அவர்களுடன் வந்தவர் களையும் போலீசார் தடுத்து நிறுத்தினர். பின்னர் போலீசார் வைகோவிடம் தமிழக எல்லை சாலையில் மறியல் நடத்த அனுமதி அளிக்கவில்லை என்று கூறினர். ஆனால் வைகோ தொடர்ந்து செல்ல முயன்றார்.

இதையடுத்து போலீசாரின் அனுமதியை மீறி சென்றதால் வைகோ, பழ.நெடுமாறன், கே.எம்.அப்பாஸ் உள்பட முக்கிய நிர்வாகிகளை கைது செய்து போலீஸ் வேனில் ஏற்றினர். அப்போது அங்கு கூடியிருந்த ஏராளமானோர் வேனை மறித்து போலீசாருக்கு எதிராக கோஷமிட்டனர். பின்னர் போலீசார் கேட்டுக்கொண்டதன் பேரில் வைகோ அங்கு கூடியிருந்தவர்களிடம் போலீசார் தங்கள் கடமையை செய்யவிடுங்கள் என்று கூறினார்.

இதனையடுத்து போலீசார் வைகோ, பழ. நெடுமாறன், அப்பாஸ் ஆகியோரை போலீசார் வேனில் அழைத்து சென்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இந்நிலையில் கம்பம்- குமுளி ரோட்டில் உள்ள வ.உ.சி. திடலில் ம.தி.மு.க. துணை பொது செயலாளர் மல்லை சத்யா தலைமையில் தலைமையில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் ம.தி.மு.க.வினர், விவசாயிகள், பொதுமக்கள் உள்பட 3 ஆயிரத்திற்கு மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

கம்பம் மெட்டு சாலையில் ம.தி.மு.க. துணை பொது செயலாளர் துரை. பாலகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கேரள அரசுக்கு எதிராக கோஷமிட்டனர். இதே போல் கேரளா செல்லும் எல்லைச்சாலையான போடி மெட்டில் அகில இந்திய பார்வர்டு பிளாக் எம்.எல்.ஏ. கதிரவன், பாரதீய பார்வர்டு பிளாக் தலைவர் முருகன்ஜி தலைமையில் முற்றுகை போராட்டம் நடந்தது.

இதில் சிவகங்கை மாவட்ட ம.தி.மு.க. செயலாளர் சிவந்தியப்பன், திருச்சி புறநகர் மாவட்ட செயலாளர் நடராஜன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். மறியலில் ஈடுபட்டவர்கள் கேரள நோக்கி செல்ல முயன்ற போது அனைவரையும் போலீசார் கைது செய்தனர்.

No comments: