கேரள அரசை கண்டித்து இன்று மதுரையில் வக்கீல்கள் ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். 100 வக்கீல் களை போலீசார் கைது செய்தனர். முல்லை பெரியாறு அணை விவகாரத்தில் கேரள அரசின் போக்கை கண்டித்து மதுரை மாவட்ட வக்கீல்கள் சங்கம் சார்பில் கடந்த சில நாட்களாக பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது.
இன்று மதுரை ரெயில் நிலையத்தில் வக்கீல்கள் சங்கம் சார்பில் ரெயில் மறியல் போராட்டம் நடைபெறுவதாக அறிவிக்கப் பட்டிருந்தது. இதையடுத்து ரெயில் நிலையத்தில் ஏராளமான போலீசார் குவிக்கப் பட்டிருந்தனர். இன்று காலை மதுரை மாவட்ட வக்கீல்கள் சங்க தலைவர் தர்மராஜ், செயலாளர் ஏ.கே.ராமசாமி ஆகியோர் தலைமையில் 100 வக்கீல்கள் மாவட்ட கோர்ட்டில் இருந்து ஊர்வலமாக மதுரை ரெயில் நிலையம் நோக்கி வந்தனர்.
பின்னர் வக்கீல்கள் ரெயில் நிலையத்துக்குள் நுழைந்து 11.35 மணிக்கு குருவாயூரில் இருந்து சென்னை நோக்கி செல்லும் குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரெயிலை மறித்து ரெயிலில் கறுப்பு கொடி ஏற்றி மறியல் போராட்டம் நடத்தினர்.
அங்கு பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டிருந்த போலீசார் ரெயில் மறியலில் ஈடுபட்ட 100 வக்கீல்களையும் கைது செய்து வேனில் அழைத்து சென்றனர். இந்த ரெயில் மறியல் போராட்டத்தால் மதுரை ரெயில் நிலையத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
No comments:
Post a Comment