Thursday, June 2, 2011

டாடா நிறுவனம் முறைகேடான வகையில் ஸ்பெக்ட்ரம் உரிமம் பெறவில்லை : சிபிஐ.


டாடா டெலிகாம் நிறுவனத்திற்கு முறைகேடான வகையில் ஸ்பெக்ட்ரம் உரிமம் வழங்கப்படவில்லை என்று சிபிஐ தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது. ராசா, கனிமொழி உள்ளிட்ட தொலை தொடர்ப்பு அதிகாரிகள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். விசாரணை தொடர்ந்து வருகிறது.

இந்த நிலையில் தர்மேந்திர பாண்டே என்ற வழக்கறிஞர் 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலில் ரத்தன் டாடா, அவரது நிறுவனத்திற்கு பிஆர் நீரா ராடியா ஆகியோரையும் சேர்க்க வேண்டும் என்று வழக்கறிஞர் தர்மேந்திர பாண்டே கோரியிருந்தார். மேலும் இதுதொடர்பாக நீரா ராடியா 2008-2009 ஆம் ஆண்டு தி மு க எம் பி கனிமொழி உடன் தொலைபேசியில் பேசியது பதிவு செய்யப்பட்டுள்ளது .இதற்க்கு ஆதாரமும் உள்ளது என தெரிவித்திருந்தார்

இதுதொடர்பாக சிபிஐ கூறுகையில்,

டாடா நிறுவனம் டிராய் விதிமுறைகளை பின்பற்றியுள்ளது. உரிமங்கள் வழங்குவதில் விதிமுறைகள் மீறப்படவில்லை 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலில் டாடா டெலிகாமுக்கு தொடர்பில்லை டாடா டெலிகாம் நிறுவனத்திற்கு இந்த ஊழலில் பங்கில்லை ரத்தன் டாடா உள்ளிட்டோரின் தொடர்புகள் குறித்து விரிவாக ஆராயப்பட்டது. அதில், டாடா டெலிகாம் நிறுவனத்திற்கு உரிமம் வழங்கியதில் எந்த முறைகேடும் நடந்ததாக தெரியவில்லை. எனவே இந்த ஊழலில் டாடா டெலிகாமுக்குத் தொடர்பு இல்லை என்று சிபிஐ தெரிவித்துள்ளது.

சன் டிவி நிறுவன ஷேர்களில் பெரும் சரிவு !


2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் தயாநிதி மாறன் பெயர் அடிபட ஆரம்பித்து இருப்பதால் சன் டிவி நிறுவனத்தின் பங்குகள் பெரும் சரிவை சந்தித்துள்ளன. இன்று ஒரே நாளில் 31 சதவீத சரிவை அவை சந்தித்துள்ளன.

ஸ்பெக்ட்ரம் ஊழல் விவகாரத்தில் தற்போது மத்திய ஜவுளித்துறை அமைச்சர் தயாநிதி மாறனின் பெயரும் அடிபட ஆரம்பித்துள்ளது. ஏர்செல் நிறுவனத்தின் பெருமளவிலான பங்குகளை வைத்துள்ள மலேசியாவின் மாக்ஸிஸ் நிறுவனத்திதற்கு சலுகை காட்டியதாக தயாநிதி மாறன் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த மாக்ஸிஸ் நிறுவனம் கலாநிதி மாறன் நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளதால், மாக்ஸிஸுக்கு தயாநிதி மாறன் சலுகை காட்டியதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து சிபிஐ பூர்வாங்க விசாரணையைத் தொடங்கி விட்டது. விரைவில் தயாநிதி மாறனையும் சிபிஐ விசாரிக்கவுள்ளது. இந்த நிலையில் சன் டிவி நிறுவன பங்குகள் பெரும் சரிவைச் சந்தித்துள்ளன. இன்று ஒரே நாளில் 31 சதவீத சரிவை சன் நிறுவன பங்குகள் சந்தித்துள்ளன.

சன் டிவி தவிர, கலாநிதி மாறனின் விமான நிறுவனமான ஸ்பைஸ் ஜெட் நிறுவனத்தின் பங்குகளும் சரிவைச் சந்தித்துள்ளன.

சன் நிறுவன பங்குகள் 31.1 சதவீதமும், ஸ்பைஸ்ஜெட் 13.5 சதவீத சரிவையும் சந்தித்துள்ளன.

சிபிஐ விசாரணை வரப் போகிறது என்ற செய்திகள் அதிகரித்து வருவதால் முதலீட்டாளர்கள் பெரும் கவலையில் மூழ்கியுள்ளனர். இதனால் அவர்கள் பங்குகளை விற்க குவிந்ததால் பங்கு விலையில் சரிவு ஏற்பட்டுள்ளதாக பங்கு வர்த்தக நிபுணர் சுரேஷ் பர்மார் கூறியுள்ளார்.

சீமான் மீது காதலித்து ஏமாற்றியதாக புகார் : நடிகை விஜயலட்சுமிக்கு மருத்துவ பரிசோதனை செய்ய முடிவு?

நாம் தமிழர் இயக்கத் தலைவர் இயக்குநர் சீமான் மீது நடிகை விஜயலட்சுமி பரபரப்பு புகாரை சுமத்தியுள்ளார்.

பெங்களூரைச் சேர்ந்தவர் நடிகை விஜயலட்சுமி. ஆரம்பத்தில் கன்னடப் படங்களில் நடித்து வந்த விஜயலட்சுமி பிரண்ட்ஸ் படம் மூலம் தமிழுக்கு வந்தவர். அப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடித்திருந்தார். தமிழ்ப் பெண்ணான விஜயலட்சுமி கடைசியாக பாஸ் என்கிற பாஸ்கரன் படத்தில் ஆர்யாவுக்கு அண்ணியாக நடித்திருந்தார்.

சென்னையில் தனது குடும்பத்தோடு வசித்து வரும் விஜயலட்சுமி நேற்று மாலை சென்னை மாநகர காவல்துறை ஆணையர் ஜே.கே.திரிபாதியை சந்தித்து ஒரு புகார் கொடுத்தார்.

அதில், இயக்குநர் சீமான் 3 ஆண்டுகளாக என்னைக் காதலித்தார். திருமணம் செய்து கொள்வதாக கூறி நெருங்கிப் பழகினார். இருப்பினும் தற்போது என்னைத் திருமணம் செய்து கொள்ள மறுக்கிறார். இதுகுறித்து சட்டப்படியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விஜயலட்சுமி கூறியுள்ளார்.

விஜயலட்சுமி இவ்வாறு பரபரப்புப் புகார் கூறுவது இது முதல் முறையல்ல. இதற்கு முன்பு சன் டிவியில் ஒளிபரப்பாகி வந்த நடிகை ராதிகா தயாரித்த ஒரு கேம் ஷோவில் தொகுப்பாளராக விஜயலட்சுமி பணியாற்றி வந்தார். அப்போது அந்த நிகழ்ச்சியின் இயக்குநர் மீதும் இதுபோல புகார் கூறினார் என்பது நினைவிருக்கலாம்.

இந்த நிலையில் நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் மீது அவர் புகார் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இயக்குனர் சீமான் மீது தெரிவித்துள்ள புகார் குறித்து, நடிகை விஜயலட்சுமி வீட்டிற்கு சென்று போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர்.

இந்த புகார் மனு பற்றி முதலில் போலீஸ் தரப்பில், உறுதி செய்ய மறுத்துவிட்டனர். 01.06.2011 அன்று இரவு புகார் கொடுத்தது உண்மைதான் என்று தென்சென்னை இணை கமிஷனர் சண்முக ராஜேஸ்வரன் கூறினார்.

சீமான் 3 ஆண்டுகளாக தன்னை காதலித்ததாகவும், திருமணம் செய்வதாக சொல்லி, நெருங்கி பழகியதாகவும், தற்போது தன்னை திருமணம் செய்ய மறுப்பதாகவும், இது தொடர்பாக சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும், இதுபற்றி வளசரவாக்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜீவானந்தத்தை விசாரணை நடத்தும்படி உத்தரவிட்டுள்ளதாகவும் இணை கமிஷனர் சண்முக ராஜேஸ்வரன் மேலும் கூறினார்.

இதையடுத்து வளசரவாக்கம் போலீசார் விஜயலட்சுமி வீட்டிற்கு நேரடியாக சென்று விசாரûணை மேற்கொண்டனர். தேவைப்பட்டால் விஜயலட்சுமியை மருத்துவ பரிசோதனை செய்யவும் போலீசார் முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.

விஜயலட்சுமி புகார் குறித்து இயக்குனர் சீமானிடமும் விசாரணை நடத்தப்படும் என்று போலீசார் கூறியுள்ளனர்.

விஜயலட்சுமி புகார் குறித்து சீமான் நேரடியாக பதில் எதுவும் கூறவில்லை. வழக்கறிஞர் ஒருவர் மூலம் விஜயலட்சுமியின் புகாரை மறுத்துள்ளார்.

ரூ.5 லட்சத்துக்குக் கீழ் சம்பளம் - வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய வேண்டாம்.

வருடத்துக்கு ரூ. 5 லட்சக்குக்குக் கீழ் வருமானம் ஈட்டுவோர் இனிமேல் வருமான வரிக்கணக்கு தாக்கல் செய்ய வேண்டியதில்லை என்று மத்திய அரசு அறிவித்து உள்ளது. இதன்மூலம் மாத வருமானம் வாங்கும் 85 பேர் பயனடைவார்கள்.

இந்தியாவில் மாத வருமானம் வாங்குவோர் கட்டும் வருமான வரி தான் மத்திய அரசுக்கு முக்கிய நிதி ஆதாரமாக உள்ளது. இதை சம்பளத்தைத் தரும்போதே பிடித்தம் செய்து விடுகிறார்கள் (tax deduction at source-TDS).

இந்த வரியையும் கட்டிவிட்டு, ஆண்டுதோறும் வருமான வரி அலுவகத்துக்குப் போய் மணிக்கணக்கில் வரிசையில் நின்று, 'நான் வரி கட்டிவிட்டேன்' என்று உறுதிப்படுத்த வருமான வரிக் கணக்கையும் (tax returns) தாக்கல் செய்ய வேண்டும்.

ஆனால், மாத ஊதியம் அல்லாமல், கணக்கிலும் காட்டாமல் லட்சக்கணக்காக வருமானம் ஈட்டுவோரை கேட்க ஆளில்லை. இவர்களாகப் போய் வருமான வரியைக் கட்டினால் தான் உண்டு.

இந் நிலையில் ஆண்டுக்கு ரூ. 5 லட்சத்துக்குள் வருமானம் ஈட்டுவோர் வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்ய வேண்டியதில்லை என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு அடுத்த சில நாட்களில் வெளியிடப்படும் என்று ம்திய நேரடி வரிகள் வாரியத்தின் தலைவர் சுதிர் சந்திரா கூறியுள்ளார்.

2011-12ம் நிதியாண்டு முதல் இது அமலுக்கு வரும். அதாவது 2010-11ம் நிதியாண்டில் ரூ. 5 லட்சத்துக்குக் குறைவாக வருமானம் ஈட்டுவோர் 2011-12 நிதியாண்டில் தங்களது வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்ய வேண்டியது இல்லை.

ஏற்கனவே கூடுதலாக வரி கட்டிவிட்டவர்கள், அதை ரீபண்ட் பெற வேண்டு மானால் மட்டும் கணக்கை தாக்கல் செய்ய வேண்டும்.

அதே நேரத்தில் ஆண்டு ஊதியம் ரூ. 5 லட்சத்துக்குக் குறைவாக இருந்தாலும், மற்ற வகையில் கூடுதல் வருமானம் ஏதாவது ஈட்டினால், அந்த விவரத்தை பணி செய்யும் இடத்தில் தெரிவித்து, வருமான வரி விலக்கை பெறலாம். அப்போது பணியாளர்களுக்கு தரப்படும் பார்ம்-16 ஆவணமே வருமான வரிக்கணக்காக எடுத்துக் கொள்ளப்படும் என்றார்.

மாணவியை கற்பழிக்க முயற்சி : வாலிபரை உயிருடன் எரித்த கிராம மக்கள்.


ஆந்திர மாநிலம் வாரங்கல் மாவட்டம் ரகுநாத பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் மவுனிகா (18) இவர் ஐதராபாத்தில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்-2 படித்தார். விடுமுறை என்பதால் வீட்டுக்கு வந்திருந்தார். அவளது பெற்றோர் விவசாய கூலி வேலைக்கு சென்றனர். அப்போது மவுனிகா மட்டும் வீட்டில் தனியாக இருந்தார்.

இந்நிலையில் பக்கத்து கிராமமான பெருமாள் கடாவை சேர்ந்த பாபு திடீரென மவுனிகா வீட்டுக்குள் புகுந்தான். கதவை உள்புறமாக பூட்டி விட்டு அவளை கற்பழிக்க முயன்றான். இதனால் அவர், காப்பாத்துங்க என்று கூச்சல் போட்டார். இதனால் ஆத்திரம் அடைந்த பாபு அங்கிருந்த சுத்தியலை எடுத்து மவுனிகாவின் தலையில் ஓங்கி அடித்தான். இதில் அவள் மயங்கி விழுந்தாள்.

அவளது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். அப்போது பாபு கதவை திறந்து கொண்டு ஓட்டம் பிடித்தான். அவனை கிராம மக்கள் விரட்டிச் சென்று மடக்கிப்பிடித்தனர். பின்னர் கிராம பெண்கள் மவுனிகா வீட்டுக்குள் சென்று பார்த்த போது மவுனிகா ஆடை களைந்த நிலையில் ரத்த வெள்ளத்தில் மயங்கி கிடந்தாள்.

இதனால் ஆத்திரம் அடைந்த கிராம மக்கள் பாபுவை ஒரு மரத்தில் கட்டி வைத்து சரமாரியாக அடித்து உதைத்தனர். இதையறிந்ததும் ஜாபர் கட் பகுதி போலீசார் அங்கு விரைந்து வந்தனர். பின்னர் பாபுவை மீட்டு விசாரணை நடத்தினர்.

அப்போது அவன் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தான். இதனால் ஆவேசம் அடைந்த கிராம மக்கள் பாபுவை குண்டு கட்டாக தூக்கிச் சென்று வைக்கோல் போரில் தூக்கிப் போட்டனர். பின்னர் வைக்கோலுக்கு தீவைத்தனர். இதில் பாபுவின் உடல் மீது தீ பற்றியது. சிறிது நேரத்தில் அவன் துடிதுடித்து இறந்து போனான்.

போலீசார் முன்னிலையில் பாபு உயிருடன் எரிக்கப்பட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து அங்கு ஏராளமான போலீசார் வரவழைக்கப்பட்டனர். இதையறிந்ததும் கிராம மக்கள் அனைவரும் தப்பி ஓடிவிட்டனர்.

இதுபற்றி போலீசார் வழக்கு பதிவு செய்து கிராமத்தினரை தேடி வருகிறார்கள். மாணவி மவுனிகாவுக்கு அங்குள்ள ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவள் அபாய கட்டத்தை தாண்டி விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

தமிழ் ஈழம் குறித்து ; ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் வைகோ பேச்சு.


ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்ற உறுப்பினர்கள், இடதுசாரி பசுமைக் கட்சிகள், தமிழ் ஈழ மக்கள் அவைகளின் அனைத்து உலகச் செயலகம் ஆகியவை இணைந்து ஈழத்தமிழர்களின் தேசிய இனப்பிரச்சினை குறித்த கருத்தரங்குக்கு ஏற்பாடு செய்திருந்தன. ஐரோப்பிய ஒன்றிய நாடாளு மன்றக் கட்டடத்தில், நடந்த இந்த கூட்டத்தில் வைகோ கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

ஐரோப்பாவில் வசந்த காலத்தை இப்போது அனுபவித்தீர்கள். அதுபோல, ஈழத்தமிழ் மக்களுக்கும் வசந்தம் விடியட்டும். உலகின் ஜனநாயக நாடுகள் அதற்கு வழிகாட்டட்டும். ஈழத்தமிழரின் கண்ணீரை, உலக நாடுகள், பல ஆண்டுகள் கண்டு கொள்ளவில்லை. ஐரோப்பிய நாடாளு மன்றத்தில் இலங்கையில் போர் நிறுத்தம் செய்ய வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றியதற்காக, நன்றி தெரிவித்துக் கொள்கின்றேன்.

ஈழத்தமிழர்கள்தான், இலங்கைத் தீவின் வடக்குகிழக்கு பகுதிகளின் பூர்வீகக் குடிமக்கள். சுதந்திர அரசு அமைத்து, தனித்துவமான நாகரிகத்தோடு வாழ்ந்தனர். அவர்கள்தான் பூர்வீகக்குடி மக்கள் என்று, இந்தியாவின் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி, இந்திய நாடாளுமன்றத்தில் ஆற்றிய தன் கடைசி உரையில் குறிப்பிட்டார். போர்த்துகீசியர் படை எடுத்தனர். 1619-ல் தமிழர்கள் தங்கள் அரசை இழந்தனர். 1638-ல் டச்சுக்காரர்கள் தமிழ் ஈழத்தைக் கைப்பற்றினர்.

பின்னர், 1796-ல் பிரித்தானியர்கள் வந்தனர். நிர்வாக வசதிக்காக, தமிழர்களையும், சிங்களவர்களையும் தங்கள் காலனி ஆட்சியின் கீழ் ஒன்றாக்கினர். 1948 பிப்ரவரி 4-ல் பிரித்தானியர்கள் இலங்கைக்கு சுதந்திரம் தந்தபோது, அதிகாரத்தை சிங்களவர்களிடம் ஒப்படைத்தனர்.

இலங்கை சுதந்திரம் பெற்றது. ஆனால், ஈழத்தமிழர்கள் அடிமைகள் ஆனார்கள். ஆயுதப் போராட்டத்தை, பிரபாகரன் தலைமையில் தமிழ் ஈழ விடுதலைப்புலிகள் முன்னெடுத்தனர். போர்க்களத்தில் வெற்றிகளைக் குவித்தனர். யுத்தகள அதிசயமாக யானை இறவைக் கைப்பற்றினர். தங்கள் பலத்தை நிரூபித்த நிலையில், விடுதலைப்புலிகள்தான் போர் நிறுத்தத்தைத் தாங்களாக அறிவித்தனர்.

2001-ம் ஆண்டு டிசம்பர் 24 ஆம் நாள், கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு முதல் நாள், 30 நாள்களுக்கான போர் நிறுத்தத்தையும், அதன் பின்னர் மேலும் 30 நாள்களுக்கான போர் நிறுத்தத்தையும், விடுதலைப்புலிகள் பிரகடனம் செய்தனர். சிங்கள அரசுக்கும், விடுதலைப்புலிகளுக்கும் இடையில், நடைபெற்ற 3 கட்ட பேச்சுவார்த்தைகளையும் இலங்கை அதிபர் சந்திரிகா குமாரதுங்க பாழாக்கினார். 2005-ல் மகிந்த ராஜபக்சே அதிபர் ஆனார்.

ஈழத்தமிழர் படுகொலை தீவிரம் ஆயிற்று. ஏழு வல்லரசுகளின் ராணுவ உதவியோடு, சிங்கள அரசு, கொடூரமாக தமிழ் மக்களைக் கொன்று குவித்தது. தமிழ் நாட்டில் முத்துக்குமார் உள்ளிட்ட 17 பேர் தீக்குளித்து மடிந்தனர். ஐரோப்பிய நாடுகளும், அமெரிக்காவும் போரை நிறுத்தச் சொல்லியும், இலங்கை அரசு போரை நிறுத்தவில்லை. கடந்த வாரத்தில் செர்பிய முஸ்லிம்கள் 8 ஆயிரம் பேரை 95-ல் படுகொலை செய்தான் என்று போஸ்னி யாவின் தளபதி ராட்கோ மிலாடிக்கைக் கைது செய்து விட்டார்களே? ஏன் ராஜபக்சேயைக் கூண்டில் எற்றக் கூடாது அவரது சகோதரர்களையும் கொலைகாரக் கூட்டாளிகளையும் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்த வேண்டும்.

யாராவது ஒரு சிங்களப் பெண்ணை, விடுதலைப்புலிகள் பாலியல் வன்கொடுமை செய்ததாக ராஜபக்சே கூட்டம் கூடச் சொன்னது இல்லையே? அப்படி அவர்கள் நடந்து கொண்டதாக யாராவது நிரூபித்தால், நான் தமிழ் ஈழத்தை ஆதரித்துப் பேசுவதை விட்டு விடுகிறேன். தமிழ் ஈழம் சுதந்திர தேசமாவதற்கு வாக்கெடுப்பு நடத்த வேண்டும். அனைத்து நாடுகளின் பார்வை யாளர்களின் கண்காணிப்பில் நடத்தப்பட வேண்டும். வெளிநாடுகளில் உள்ள ஈழத் தமிழர்களும், அந்தந்த நாடுகளிலேயே பங்கேற்க ஏற்பாடு செய்ய வேண்டும்.

இலங்கையில் தமிழர் பகுதிகளில் இருந்து ராணுவ மும், காவல்துறையும் உடனடியாக அகற்றப்பட வேண்டும். என் உரையை முடிக்கும் போது, என் மனதில், என் உள்ளத்தில் தாக்கமாகி உள்ள ஒரு கவிதையைச் சொல்லுகிறேன.

கல்லறைகள் திறந்து கொண்டன.

மடிந்தவர்கள் வருகிறார்கள்

மாவீரர்களின் ஆவிகள் யுத்தத்துக்கு எழுந்து விட்டன

புகழ் மலர்களோடும், உறுவிய வாளோடும் வருகிறார்கள்

இதயத்தில் ஈழத்தின் விடுதலையை ஏந்தி வருகிறார்கள்

ஈழ விடுதலை முரசம் ஒலிக்கட்டும்

ஈழம் உதயமாகட்டும்

சுதந்திர ஈழக் கொடிபட்டொளி வீசிப்பறக்கட்டும்

ஆம், ஐ.நா. சபைக்கு முன் சுதந்திர தேசங்களின் கொடிகளோடு

எங்கள் தமிழ் ஈழ தேசக் கொடியும் பறக்கட்டும்.

இவ்வாறு வைகோ உரை ஆற்றினார்.

கனிமொழியின் சிறை வாழ்க்கை !


2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் விசாரணைக் கைதியாக திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள திமுக எம்பி கனிமொழி தொடர்ந்து உறுதிகுலையாத அரசியல் வாதியாகக் காணப்படுகிறார்.

சிறை எண் 6-ல் 475 பெண்கைதிகளுடன் அடைக்கப்பட்டுள்ள கனிமொழி, குறுகிய காலத்திலேயே அங்கு புகழ்பெற்றுவிட்டார்.

சிறையில் மற்றவர்களுக்கு உதவுவதில் கனிமொழி தனக்குத்தானே பிஸியாக்கிக் கொண்டுவிட்டார். சிறைக்கைதிகளின் பிரச்னைகளை கேட்டறிந்து அவற்றை சிறை நிர்வாகத்திடம் கொண்டுசெல்கிறார்.

சமீபத்தில் சிறை எண் 6-ல் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டது. சக கைதிகள் பெரும் எதிர்பார்ப்புடன் கனிமொழியை அணுகினர். அவரும் அவர்களை ஏமாற்றாமல் சிறை நிர்வாகத்திடம் அந்தப் பிரச்னையைக் கொண்டுசென்றார். உடனடியாக அந்தப் பிரச்னை தீர்க்கப்பட்டதாக சிறை வட்டாரங்கள் தெரிவித்தன.

சிறையில் கனிமொழியைக் காண கைதிகள் காலையிலேயே கூடி விடுகின்றனர். அங்கிருந்து அவர் தினமும் நீதிமன்றத்துக்குச் செல்லும்போது வணக்கம் தெரிவித்து அவரை வழி அனுப்பி வைக்கின்றனர்.

மாலையில் சிறையில் இருந்து அவர் திரும்பும்போது அறை வாசலில் நின்று அவரை வரவேற்கின்றனர். மீண்டும் அவருடன் உரையாட கைதிகளுக்கு நேரம் கிடைக்கிறது.

சிறை வசதிகள் குறித்து சிறையின் கண்காணிப்பாளருடனும், இதர அதிகாரி களுடன் கனிமொழி உரையாடுவதைக் காணமுடிவதாக சிறை வட்டாரங்கள் தெரிவித்தன.

சிறைக்கு சென்ற முதல்நாளில், அவருக்கான கழிவறை குறித்து புகார் தெரிவித்தார். பின்னர் அது மாற்றப்பட்டது.

கனிமொழி அவரது அறையில் படிப்பதிலும், டிவி பார்ப்பதிலும் நேரத்தை செலவிடுகிறார்.

வீட்டில் கொண்டுவரப்பட்ட உணவை சாப்பிட கனிமொழிக்கு அனுமதி அளிக்கப்பட்டிருந்தாலும், அவ்வப்போது சிறை உணவையும் ருசிபார்க்கிறார். கொசுவர்த்தியும் வைத்துக்கொள்ள அவருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக சிறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

என்ஜினீயரிங் மோகம் குறைந்தது : கலை - அறிவியல் கல்லூரிகளில் சேர மாணவர்கள் ஆர்வம்.


பொறியியல் கல்லூரிகளில் சேர 90 ஆயிரம் மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். இது கடந்த ஆண்டை விட 50 ஆயிரம் பேர் குறைவாக விண்ணப்பித்து உள்ளனர். மாணவர்களின் மனநிலை கலை-அறிவியல் கல்லூரிகளை நோக்கி சென்றுள்ளது.

இந்த வருடம் வரலாறு காணாத கலை-அறிவியல் கல்லூரிகளுக்கு மாணவர்கள் படையெடுக்கிறார்கள். கடந்த வருடத்தை காட்டிலும் 25 சதவீதம் மாணவர் சேர்க்கை உயர்ந்துள்ளது.

பி.எஸ்சி. கம்யூட்டர் சயின்ஸ் பிரிவில் 20 இடங்களுக்கு 100 பேர் விண்ணப்பித்து உள்ளனர். பி.எஸ்சி. இயற்பியல், பி.எஸ்சி. கணிதம், பி.ஏ. ஆங்கிலம், பி.காம். போன்ற பட்டப்படிப்புகளில் சேர மாணவர்கள் இடையே கடுமையான போட்டி ஏற்பட்டுள்ளது.

அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்கள்கூட கலை - அறிவியல் கல்லூரியை நாடிச் செல்கிறார்கள். மேலும் வேதியியல், நுண்ணுயிரியல், இளநிலை பொது நிர்வாக இயல், வங்கிமேலாண்மை, நிர்வாகமேலாண்மை உள்ளிட்ட பாடங்களுக்கும் மாணவர்கள் மத்தியில் வரவேற்பு ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து அரும்பாக்கம் வைஷ்ணவா கல்லூரி முதல்வர் நரசிம்மன் கூறியதாவது:-

கலை-அறிவியல் பாடத்தில் சேர இந்த ஆண்டு மாணவர்கள் அதிக ஆர்வம் காட்டி வருகிறார்கள். விண்ணப்பித்துள்ள மாணவர்கள் பெரும்பாலும் அதிக மதிப்பெண் பெற்றவர்களாக உள்ளனர். இதனால் தேர்வு செய்வதில் பெரும் சிரமம் ஏற்படுகிறது.

90 சதவீத மதிப்பெண் பெற்ற மாணவர்கள் அதிகளவில் விண்ணப்பித்துள்ளனர். எனவே அவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

அரசு கலை-அறிவியல் கல்லூரியிலும் இதே நிலைதான். சென்னையில் உள்ள அனைத்து அரசு கலைக் கல்லூரிகளில் சேர மாணவர்கள் போட்டி போடுகிறார்கள்.

இதுபற்றி சென்னை பல்கலைக்கழக துணை வேந்தர் திருவாசகம் கூறுகையில், சென்னை பல்கலைக்கழக கட்டுப்பாட்டில் உள்ள கல்லூரிகளில் படித்த 1300 மாணவர்களுக்கு மென்பொருள் நிறுவனங்களில் வேலை கிடைத்திருக்கிறது. ஊதியமாக ரூ.15 ஆயிரம் முதல் ரூ.25 ஆயிரம் வரை பெறுகிறார்கள்.

பொறியியல் கல்லூரிகளில் படிப்பதற்கு அதிகளவு பணம் செலவு செய்ய வேண்டியுள்ளது. ஆனால் கலை-அறிவியல் கல்லூரிகளில் படித்தால் குறைந்த செலவாகும். வேலைவாய்ப்பும் உடனே கிடைத்து விடும் என்று மாணவர்கள் கருதுகிறார்கள் என்றார்.

ராம்தேவ் உண்ணாவிரதத்தில் அன்னாவும் பங்கேற்பு !


யோகி பாபா ராம்தேவ் நாளை மறுநாள் தொடங்க இருக்கும் உண்ணாவிரதப் போராட்டத்தில் தானும் பங்கேற்கப் போவதாக அன்னா ஹஸாரே அறிவித்து உள்ளதால் மத்திய அரசுக்கு மேலும் நெருக்கடி அதிகரித்துள்ளது.

கருப்புப் பணம் மற்றும் லஞ்ச ஊழலுக்கு எதிராக அன்னா ஹஸாரேவும், ராம்தேவும் போர்க்கொடி உயர்த்தியுள்ளனர். சமீபத்தில் அன்னா ஹஸாரே டெல்லியில் இதற்காக சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தில் குதித்தார். இதனால் நாடே பரபரப்பானது.

இந்த நிலையில் தற்போது ஜூன் 4ம் தேதி முதல் ராம்லீலா மைதானத்தில் கருப்புப் பண ஒழிப்பு, லஞ்ச ஒழிப்பை வலியுறுத்தி சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கப் போவதாக ராம் தேவ் அறிவித்துள்ளார். இதனால் மத்திய அரசு பீதியடைந்துள்ளது.

ஆரம்பத்தில் பிரச்சினையை ஆறப் போட்டு அமைதியாக்கி விடலாம் என நினைத்தது மத்திய அரசு. ஆனால் ராம்தேவுக்கு நாடு முழுவதும் ஆதரவு அதிகரித்து வருகிறது. லட்சக்கணக்கானோர் உண்ணாவிரதப் போராட்டத்தில் குதிக்கவுள்ளதாக உளவுத்துறைக்கு தகவல் கிடைக்கவே மத்திய அரசு இப்போது உஷாராகி விட்டது.

ராம்தேவை சமாளிக்க, சமாதானப்படுத்த பிரணாப் முகர்ஜி தலைமையில் அமைச்சர்கள் குழுவையே பிரதமர் அமைத்துள்ளார். அவர்களும் நேற்று ராம்தேவுடன் பேசிப் பார்த்தனர். ஆனால் தனது கோரிக்கைகளை நிறைவேற்றும் வரை போராட்ட முடிவில் மாற்றம் இல்லை என்று கூறி விட்டார் ராம்தேவ்.

இந்த நிலையில் ராம்தேவின் போராட்டத்தில் தானும் பங்கேற்கப் போவதாக காந்தியவாதி அன்னா ஹஸாரே அறிவித்துள்ளார். இருவரும் இணைந்து போராட்டத்தை மேற்கொண்டால் அது நாட்டில் பெரும் புயலைக் கிளப்பும் என்பதால் மத்திய அரசு பெரும் கவலை அடைந்துள்ளது.

லோக்பால் மசோதா தொடர்பாக அன்னாவுக்கும், ராம்தேவுக்கும் இடையே பல கருத்து வேறுபாடுகள் உள்ளன. பிரதமர் உள்ளிட்டோரை இதில் சேர்க்க ராம்தேவ் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார். ஆனால் பிரதமரையும் இதில் சேர்க்க வேண்டும் என்று அன்னா கூறி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இருப்பினும் ராம்தேவின் போராட்ட நோக்கம் ஒன்றாக இருப்பதால் தானும் பங்கேற்கவுள்ளதாக அன்னா கூறியுள்ளார்.

மேலும் அன்னா கூறுகையில், கறுப்புப் பண விவகாரத்தில் பாபாவுக்கு தவறான தகவல்கள் தந்து, அவரது உண்ணாவிரதத்தை கைவிடச் செய்ய மத்திய அரசு நாடகம் போட்டது. ஆனால், அதில் அவர்களுக்கு வெற்றி கிடைக்கவில்லை. இந் நிலையில் லோக்பால் மசோதா குழுவினரை மத்திய அரசு வேவு பார்க்கவும் ஆரம்பித்துள்ளது என்றார்.

ராம்தேவ் ஒன்றும் யோகியல்ல.. அவர் ஒரு தொழிலதிபர் - திக்விஜய் தாக்கு.


கறுப்புப் பணத்தை மீட்க மத்திய அரசு கடுமையான நடவடிக்கை எடுக்கக் கோரி சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப் போவதாக மிரட்டி வரும் யோகா குரு ராம்தேவுக்கு மிக அதிகமான முக்கியத்துவம் தரப்படுவதாகவும், அவரை அழைத்து வருவதற்காக 4 அமைச்சர்கள், அதிகாரிகளை விமான நிலையத்துக்கு அரசு அனுப்பி வைத்தது ரொம்ப ஓவர் என்றும் காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளரான திக்விஜய் சிங் கூறியுள்ளார்.

யோகா குரு ராம்தேவை மிகக் கடுமையாக விமர்சிப்போரில் திக்விஜய் சிங்கும் ஒருவர். ரூ. 15,000 கோடி மதிப்புள்ள மருத்துவமனை, யோகா மையம், ஆயுர்வேத மருந்து நிறுவனங்கள் ஆகியவற்றை நடத்தி வரும் ராம்தேவ் பயணிப்பது தனி விமானத்தில் தான். மேலும் ஸ்காட்லாந்து அருகே பல மில்லியன் பவுண்டு மதிப்பில் ஒரு தீவையே விலைக்கு வாங்கியுள்ளார். இவரது அறக்கட்டளைக்கு ஏராளமான வெளிநாட்டுப் பணமும் வருகிறது.

இந் நிலையில் வெளிநாடுகளில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள கறுப்புப் பணத்தை மீட்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ராம்தேவ் குரல் கொடுக்க ஆரம்பித்ததில் இருந்தே அவருக்கு எதிராகப் பேசி வருபவர் திக்விஜய் சிங்.

கறுப்புப் பண விசாரணையை ராம்தேவின் அறக்கட்டளையிலிருந்து தான் ஆரம்பிக்க வேண்டும் என்று கூறி வரும் திக்விஜய் சிங், நேற்று நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜியை சந்திப்பதற்காக டெல்லி வந்த ராம்தேவுக்கு மத்திய அரசு தந்த அளவுக்கதிகமான மரியாதைக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.

கறுப்புப் பணம், ஊழலை ஒழிக்க மத்திய அரசு எடுக்கும் நடவடிக்கைகள் குறித்து நேரில் விளக்க விரும்புவதாகவும், இதற்காக தன்னை டெல்லியில் சந்திக்குமாறும் ராம்தேவுக்கு மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி கோரிக்கை வைத்தார். இதை ஏற்று நேற்று தனது தனி விமானத்தில் டெல்லி வந்தார் ராம்தேவ்.

அவரை வரவேற்க மத்திய அமைச்சர்கள் பிரணாப்முகர்ஜி, கபில்சிபல், பி.கே.பன்சால், சுபோந்த் காந்த் சகாய், பிரதமரின் முதன்மைச் செயலாளர் டி.கே.ஏ.நாயர் ஆகியோர் விமான நிலையத்துக்கே சென்றனர். அவரை மிக மிக மிக முக்கியமான விஐபி போல நடத்தி, கிட்டத்தட்ட ரெட் கார்பெட் வரவேற்பு அளித்து அழைத்துச் சென்றனர். இவருக்கு ஏன் இவ்வளவு பெரிய வரவேற்பு அளிக்கப் படுகிறது என்ற அனைவரும் ஆச்சரியப்பட்டனர்.

இது குறித்து திக்விஜய் சிங் கூறுகையில், ராம்தேவ் ஒன்றும் யோகி அல்ல. அவர் ஒரு தொழிலதிபர். அவருக்கு இவ்வளவு மரியாதை தருவதும் அமைச்சர்களை அனுப்பி அழைத்து வந்ததும் தேவையில்லாதது. இதைச் செய்தது மத்திய அரசு தான். இதில் காங்கிரசுக்குத் தொடர்பில்லை.

உண்ணாவிரதம் இருந்துவிட்டால் கறுப்புப் பண பிரச்சனை தீர்ந்துவிடாது என்பதை ராம்தேவ் உணர வேண்டும் என்றார்.

மத்திய அமைச்சரவைக் கூட்டம்:

இந் நிலையில் பாபா ராம்தேவின் உண்ணாவிரதம் குறித்தும், கறுப்புப் பண விவகாரத்தில் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் விவாதிக்க இன்று பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் டெல்லியில் அவசர கேபினட் கூட்டம் நடந்தது.

இதில் பிரணாபமுகர்ஜி, கபில்சிபல், ப.சிதம்பரம், தயாநிதிமாறன் உள்ளிட்ட மத்திய அமைச்சர்கள் கலந்து கொண்டனர்.

தயாநிதி வீடு - சன் டிவி - ரகசிய எக்ஸ்சேஞ்ச் ரூ.400 கோடி இழப்பு : சிபிஐ புகார்.


ஏர்செல் சர்ச்சையில் சிக்கியுள்ள முன்னாள் மத்திய தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் தயாநிதி மாறன் தற்போது மேலும் ஒரு மோசடி சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

தொலைத்தொடர்புத்துறை அமைச்சராகப் பதவி வகித்தபோது தனது வீட்டுக்கும், சன் டிவி தலைமையகத்திற்கும் இடையே தகவல் தொடர்புக்காக 323 இணைப்பு களைக் கொண்ட ஒரு சட்டவிரோதமான, பிரத்யேக எக்ஸ்சேஞ்சையே அமைத்து உள்ளார். இதில் ஒரு இணைப்பிலிருந்து மட்டும் மாதம் ஒன்றுக்கு 48 லட்சம் தொலைபேசி அழைப்புகள் பேசப்பட்டுள்ளன. இந்த வகையில் ரூ. 400 கோடி அளவுக்கு பிஎஸ்என்எல்லுக்கு பேரிழப்பு ஏற்பட்டுள்ளதாக சிபிஐ கணக்கிட்டுள்ளது.

இப்படி ஒரு தனிப்பட்ட சட்டவிரோதமான எக்ஸ்சேஞ்ச் தயாநிதி மாறன் வீட்டில் இயங்கி வருவதாக முன்பே கூறப்பட்டது. ஆனால் அதை அப்போது தயாநிதி மாறன் மறுத்து விட்டார். அந்த சமயத்தில் அவருக்கும், திமுகவுக்கும், கருணாநிதி குடும்பத்திற்கும் நல்லுறவு இருந்தது. அதேபோல காங்கிரஸ் கட்சியும், திமுகவுடன் ஒட்டி உறவாடி வந்தது.இதனால் அந்தப் புகார் குறித்து விசாரிக்கப் படாமலேயே அமுக்கப்பட்டு விட்டது.

இந்த 323 இணைப்புகளையும் தனது பெயரில் இல்லாமல், பிஎஸ்என்எல் பொது மேலாளர் பெயரில் வைத்துள்ளார் தயாநிதி மாறன். தனது வீட்டுக்கும், சன் டிவி தலைமையகத்திற்கும் இடையிலான தகவல் தொடர்புக்காகக இப்படி ஒரு குட்டி எக்ஸ்சேஞ்சையே தனது வீட்டில் நடத்தி வந்துள்ளார் தயாநிதி மாறன்.

இந்த இணைப்புகளை தயாநிதி மாறன் குடும்பத்தினர் வர்த்தக நோக்கத்திற்காகப் பயன்படுத்தி வந்துள்ளனர். இந்த ரகசிய இணைப்புக்காக 3.4 கிலோமீட்டர் தூரத்திற்கு, அதாவது மாறன் வீட்டிலிருந்து சன் டிவி அலுவலகத்திற்கு ரகசியமாக கேபிள்களையும் பதித்துள்ளனர். பொதுச் சாலையில் இந்த கேபிள் போகிறது. இதுவும் சட்டவிரோதமான வேலையாகும்.

ராசாவுக்கு முன்பு தொலைத் தொடர்புத்துறை அமைச்சராக இருந்தபோதுதான் சத்தம் போடாமல் அரசின் பிஎஸ்என்எல் நிறுவனத்தை தனது குடும்பச் சொத்து போல பாவித்து இப்படி விளையாடியிருக்கிறார் தயாநிதி மாறன் என்பது சிபிஐயின் குற்றச்சாட்டு.

இதுகுறித்து விசாரித்த சிபிஐ இதுதொடர்பாக மாறன் மீது நடவடிக்கை எடுக்குமாறு 2007ம் ஆண்டு செப்டம்பர் 10ம் தேதி கடிதம் எழுதியுள்ளது.

அதில் தயாநிதி மாறனின் மோசடிகளை விரிவாக விளக்கியுள்ளது சிபிஐ.

என்ன கொடுமை என்றால் தயாநிதி மாறனின் வீடு உள்ள போட் கிளப் பகுதியிலிருந்து, அண்ணா சாலை வழியாக, இந்த ரகசிய இணைப்ப கேபிள்கள் போய் முடிந்த இடம் திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில். அங்குதான் அப்போது சன் டிவியின் தலைமையகம் இருந்துள்ளது. எனவே இந்த மெகா மோசடி குறித்து திமுக தலைமைக்கும் தெரிந்திருக்கும் என்றே கருதப்படுகிறது.

தனது சொந்த பயன்பாட்டுக்கு என்று கூறி வாங்கிய இந்த 323 இணைப்புகளையும், அண்ணன் கலாநிதி மாறன் நடத்தி வந்த சன் டிவியின் நிகழ்ச்சி ஒளிபரப்புகளுக்காக, பயன்படுத்தியுள்ளார் தயாநிதி மாறன்.

இந்த 323 இணைப்புகளில் முதல் 23 இணைப்புகள் 24372211 முதல் 24372301 வரையிலான எண்ணில் செயல்பட்டவை. அடுத்த 300 இணைப்புகள் 24371500 முதல் 24371799 வரையிலானவை. எல்லா தொலைபேசிகளும் 2437 என்ற எண்ணுடன் தொடங்கியதால் 323 இணைப்புகளும் ஒரே தொலைபேசி இணைப்பகத்தைச் சேர்ந்தவையாகச் செயல்பட்டன. 2007 ஜனவரி முதல் பல மாதங்களுக்கு இந்த இணைப்பகம் சன் குழுமத்துக்காகப் பயன்படுத்தப்பட்டது.

இவை அனைத்தும் சாதாரண தொலைபேசி இணைப்புகள் கிடையாது. ஐஎஸ்டிஎன் இணைப்புகளாகும். அதாவது படு விரைவாக தகவல்களைக் கொண்டு செல்லக் கூடியவை. செயற்கைக் கோள்களை விட மின்னல் வேகத்தில் தகவல்களை செலுத்தக் கூடியவை. உலகின் எந்தப் பகுதிக்கும் தகவல்களை அனுப்பினால் அவை அதி வேகமாக போய்ச்சேரக் கூடிய வகையிலான அதி நவீன இணைப்புகள்.

டிஜிடல் தகவல்களைக் கொண்டுபோய்ச் சேர்க்கவும் வீடியோ கான்ஃபரன்சிங் சேவை அளிக்கவும் ஆடியோ, விடியோ சேவைகளை அளிக்கவும் வல்லவை இந்த இணைப்புகள். சுருக்கமாகச் சொன்னால் சன் குழுமத் தொலைக்காட்சி நிறுவன சானல்கள் அனைத்தும் படு பளிச்செனவும், துல்லியமான சத்தத்துடனும் செயல்பட இந்த இணைப்புகள்தான் காரணம். இப்படிப்பட்ட இணைப்புகள் தமிழில் வேறு எந்த சானலுக்கும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. தயாநிதி மாறன் புண்ணியத்தால் இப்படி ஒரு அசாத்தியமான வசதியை சன் டிவி நிறுவனம் பெற முடிந்துள்ளது.

இந்த வசதியைப் பெற வேண்டுமானால் பல கோடி ரூபாய் பணத்தை வாடகையாக சன் டிவி நிறுவனம் செலுத்த வேண்டியிருக்கும். ஆனால் ஒரு பைசா கூட செலவில்லாமல் ஓசியிலேயே எடுத்து விளையாடியிருக்கிறார்கள் சன் டிவி குடும்பத்தார், தயாநிதி மாறன் மூலமாக.

வழக்கமாக யாராவது சிலர் தொலைபேசி இணைப்புகளை தவறாகப் பயன்படுத்தினாலே பெரிய அளவில் மோசடி வழக்குப் பதிவு செய்யப்பட்டு சிறையில் தள்ளப்படுவார்கள். ரகசிய தொலைபேசி இணைப்பகத்தை நடத்தி வந்தவர் கைது என்று செய்திகளில் படித்திருக்கிறோம். ஆனால் தயாநிதி மாறன் நடத்தி வந்த இந்த ரகசிய இணைப்பகம் எப்படி யாராலும் கண்டு கொள்ளப்படாமல் விடப்பட்டது என்பதுதான் ஆச்சரியமாக உள்ளது.

சிபிஐ இதுகுறித்து புகார் கூறியும் கூட அதை மத்திய அரசு கண்டு கொள்ளாமல் இருந்துள்ளது பெரும் ஆச்சரியமாக உள்ளது. நியாயஸ்தனாக தன்னைக் காட்டிக்கொள்ளும் மன்மோகன் சிங்குக்கு கூடவா இது தெரியாமல் போயிற்று என்பதுதான் பெரிய ஆச்சரியமாக உள்ளது.

இந்த 323 இணைப்புகளில், 24371515 என்ற ஒரு தொலைபேசி மூலம் மட்டும் 2007 மார்ச் மாதத்தில் மட்டும் 48 லட்சத்து 72 ஆயிரத்து 27 யூனிட்டுகள் அளவுக்குப் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அதாவது ஒரே ஒரு தொலைபேசி மூலம் ஒரு மாதத்துக்கு சராசரியாக 49 லட்சம் யூனிட்டுகள் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அப்படியானால் 323 இணைப்புகள் வாயிலாக 2007 ஜனவரி முதல் ஏப்ரல் வரையில் 629.5 கோடி யூனிட்டுகள் பயன்படுத்தப்பட்டிருக்கும் என்று சராசரி கணக்கெடுப்பு தெரிவிக்கிறது.

ஒரு யூனிட்டுக்கு 70 பைசா என்ற கணக்கில் பார்த்தால் பி.எஸ்.என்.எல்லுக்கு இதன் மூலம் ரூ.440 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டிருக்கும் என்கிறது சி.பி.ஐ.

சன் டிவிக்கு மட்டுமல்லாமல் மதுரையில் உள்ள தினகரன் நாளிதழ் அலுவலகத்திற்கும் கூட இந்த இணைப்புகளை மோசடியாக பயன்படுத்தியுள்ளனர் மாறன் சகோதரர்கள். அதுகுறித்து தற்போது சிபிஐ விசாரித்து வருகிறது.

தயாநிதி மாறன் செய்ததாக கூறப்படும் இந்த பகிரங்க மோசடி மற்றும் முறைகேடுகள் குறித்து நிச்சயமாக பிரதமருக்கும், சோனியா காந்திக்கும் தெரிந்திருக்கும் என்றே நம்பப்படுகிறது. அப்படி உள்ள நிலையில், ராசாவுக்கு பெரும் நெருக்கடி கொடுத்து அவரை பதவியை விட்டே ஓட வைத்த காங்கிரஸ் மற்றும் மத்திய அரசு தயாநிதி மாறன் விவகாரத்தில் மட்டும் பெருத்த மெளனம் காத்தது, காப்பது ஏன் என்பதுதான் புரியாத புதிராக உள்ளது.