Thursday, June 2, 2011

ராம்தேவ் ஒன்றும் யோகியல்ல.. அவர் ஒரு தொழிலதிபர் - திக்விஜய் தாக்கு.


கறுப்புப் பணத்தை மீட்க மத்திய அரசு கடுமையான நடவடிக்கை எடுக்கக் கோரி சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப் போவதாக மிரட்டி வரும் யோகா குரு ராம்தேவுக்கு மிக அதிகமான முக்கியத்துவம் தரப்படுவதாகவும், அவரை அழைத்து வருவதற்காக 4 அமைச்சர்கள், அதிகாரிகளை விமான நிலையத்துக்கு அரசு அனுப்பி வைத்தது ரொம்ப ஓவர் என்றும் காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளரான திக்விஜய் சிங் கூறியுள்ளார்.

யோகா குரு ராம்தேவை மிகக் கடுமையாக விமர்சிப்போரில் திக்விஜய் சிங்கும் ஒருவர். ரூ. 15,000 கோடி மதிப்புள்ள மருத்துவமனை, யோகா மையம், ஆயுர்வேத மருந்து நிறுவனங்கள் ஆகியவற்றை நடத்தி வரும் ராம்தேவ் பயணிப்பது தனி விமானத்தில் தான். மேலும் ஸ்காட்லாந்து அருகே பல மில்லியன் பவுண்டு மதிப்பில் ஒரு தீவையே விலைக்கு வாங்கியுள்ளார். இவரது அறக்கட்டளைக்கு ஏராளமான வெளிநாட்டுப் பணமும் வருகிறது.

இந் நிலையில் வெளிநாடுகளில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள கறுப்புப் பணத்தை மீட்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ராம்தேவ் குரல் கொடுக்க ஆரம்பித்ததில் இருந்தே அவருக்கு எதிராகப் பேசி வருபவர் திக்விஜய் சிங்.

கறுப்புப் பண விசாரணையை ராம்தேவின் அறக்கட்டளையிலிருந்து தான் ஆரம்பிக்க வேண்டும் என்று கூறி வரும் திக்விஜய் சிங், நேற்று நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜியை சந்திப்பதற்காக டெல்லி வந்த ராம்தேவுக்கு மத்திய அரசு தந்த அளவுக்கதிகமான மரியாதைக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.

கறுப்புப் பணம், ஊழலை ஒழிக்க மத்திய அரசு எடுக்கும் நடவடிக்கைகள் குறித்து நேரில் விளக்க விரும்புவதாகவும், இதற்காக தன்னை டெல்லியில் சந்திக்குமாறும் ராம்தேவுக்கு மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி கோரிக்கை வைத்தார். இதை ஏற்று நேற்று தனது தனி விமானத்தில் டெல்லி வந்தார் ராம்தேவ்.

அவரை வரவேற்க மத்திய அமைச்சர்கள் பிரணாப்முகர்ஜி, கபில்சிபல், பி.கே.பன்சால், சுபோந்த் காந்த் சகாய், பிரதமரின் முதன்மைச் செயலாளர் டி.கே.ஏ.நாயர் ஆகியோர் விமான நிலையத்துக்கே சென்றனர். அவரை மிக மிக மிக முக்கியமான விஐபி போல நடத்தி, கிட்டத்தட்ட ரெட் கார்பெட் வரவேற்பு அளித்து அழைத்துச் சென்றனர். இவருக்கு ஏன் இவ்வளவு பெரிய வரவேற்பு அளிக்கப் படுகிறது என்ற அனைவரும் ஆச்சரியப்பட்டனர்.

இது குறித்து திக்விஜய் சிங் கூறுகையில், ராம்தேவ் ஒன்றும் யோகி அல்ல. அவர் ஒரு தொழிலதிபர். அவருக்கு இவ்வளவு மரியாதை தருவதும் அமைச்சர்களை அனுப்பி அழைத்து வந்ததும் தேவையில்லாதது. இதைச் செய்தது மத்திய அரசு தான். இதில் காங்கிரசுக்குத் தொடர்பில்லை.

உண்ணாவிரதம் இருந்துவிட்டால் கறுப்புப் பண பிரச்சனை தீர்ந்துவிடாது என்பதை ராம்தேவ் உணர வேண்டும் என்றார்.

மத்திய அமைச்சரவைக் கூட்டம்:

இந் நிலையில் பாபா ராம்தேவின் உண்ணாவிரதம் குறித்தும், கறுப்புப் பண விவகாரத்தில் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் விவாதிக்க இன்று பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் டெல்லியில் அவசர கேபினட் கூட்டம் நடந்தது.

இதில் பிரணாபமுகர்ஜி, கபில்சிபல், ப.சிதம்பரம், தயாநிதிமாறன் உள்ளிட்ட மத்திய அமைச்சர்கள் கலந்து கொண்டனர்.

No comments: