Thursday, June 2, 2011

ராம்தேவ் உண்ணாவிரதத்தில் அன்னாவும் பங்கேற்பு !


யோகி பாபா ராம்தேவ் நாளை மறுநாள் தொடங்க இருக்கும் உண்ணாவிரதப் போராட்டத்தில் தானும் பங்கேற்கப் போவதாக அன்னா ஹஸாரே அறிவித்து உள்ளதால் மத்திய அரசுக்கு மேலும் நெருக்கடி அதிகரித்துள்ளது.

கருப்புப் பணம் மற்றும் லஞ்ச ஊழலுக்கு எதிராக அன்னா ஹஸாரேவும், ராம்தேவும் போர்க்கொடி உயர்த்தியுள்ளனர். சமீபத்தில் அன்னா ஹஸாரே டெல்லியில் இதற்காக சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தில் குதித்தார். இதனால் நாடே பரபரப்பானது.

இந்த நிலையில் தற்போது ஜூன் 4ம் தேதி முதல் ராம்லீலா மைதானத்தில் கருப்புப் பண ஒழிப்பு, லஞ்ச ஒழிப்பை வலியுறுத்தி சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கப் போவதாக ராம் தேவ் அறிவித்துள்ளார். இதனால் மத்திய அரசு பீதியடைந்துள்ளது.

ஆரம்பத்தில் பிரச்சினையை ஆறப் போட்டு அமைதியாக்கி விடலாம் என நினைத்தது மத்திய அரசு. ஆனால் ராம்தேவுக்கு நாடு முழுவதும் ஆதரவு அதிகரித்து வருகிறது. லட்சக்கணக்கானோர் உண்ணாவிரதப் போராட்டத்தில் குதிக்கவுள்ளதாக உளவுத்துறைக்கு தகவல் கிடைக்கவே மத்திய அரசு இப்போது உஷாராகி விட்டது.

ராம்தேவை சமாளிக்க, சமாதானப்படுத்த பிரணாப் முகர்ஜி தலைமையில் அமைச்சர்கள் குழுவையே பிரதமர் அமைத்துள்ளார். அவர்களும் நேற்று ராம்தேவுடன் பேசிப் பார்த்தனர். ஆனால் தனது கோரிக்கைகளை நிறைவேற்றும் வரை போராட்ட முடிவில் மாற்றம் இல்லை என்று கூறி விட்டார் ராம்தேவ்.

இந்த நிலையில் ராம்தேவின் போராட்டத்தில் தானும் பங்கேற்கப் போவதாக காந்தியவாதி அன்னா ஹஸாரே அறிவித்துள்ளார். இருவரும் இணைந்து போராட்டத்தை மேற்கொண்டால் அது நாட்டில் பெரும் புயலைக் கிளப்பும் என்பதால் மத்திய அரசு பெரும் கவலை அடைந்துள்ளது.

லோக்பால் மசோதா தொடர்பாக அன்னாவுக்கும், ராம்தேவுக்கும் இடையே பல கருத்து வேறுபாடுகள் உள்ளன. பிரதமர் உள்ளிட்டோரை இதில் சேர்க்க ராம்தேவ் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார். ஆனால் பிரதமரையும் இதில் சேர்க்க வேண்டும் என்று அன்னா கூறி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இருப்பினும் ராம்தேவின் போராட்ட நோக்கம் ஒன்றாக இருப்பதால் தானும் பங்கேற்கவுள்ளதாக அன்னா கூறியுள்ளார்.

மேலும் அன்னா கூறுகையில், கறுப்புப் பண விவகாரத்தில் பாபாவுக்கு தவறான தகவல்கள் தந்து, அவரது உண்ணாவிரதத்தை கைவிடச் செய்ய மத்திய அரசு நாடகம் போட்டது. ஆனால், அதில் அவர்களுக்கு வெற்றி கிடைக்கவில்லை. இந் நிலையில் லோக்பால் மசோதா குழுவினரை மத்திய அரசு வேவு பார்க்கவும் ஆரம்பித்துள்ளது என்றார்.

No comments: