Thursday, June 2, 2011

என்ஜினீயரிங் மோகம் குறைந்தது : கலை - அறிவியல் கல்லூரிகளில் சேர மாணவர்கள் ஆர்வம்.


பொறியியல் கல்லூரிகளில் சேர 90 ஆயிரம் மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். இது கடந்த ஆண்டை விட 50 ஆயிரம் பேர் குறைவாக விண்ணப்பித்து உள்ளனர். மாணவர்களின் மனநிலை கலை-அறிவியல் கல்லூரிகளை நோக்கி சென்றுள்ளது.

இந்த வருடம் வரலாறு காணாத கலை-அறிவியல் கல்லூரிகளுக்கு மாணவர்கள் படையெடுக்கிறார்கள். கடந்த வருடத்தை காட்டிலும் 25 சதவீதம் மாணவர் சேர்க்கை உயர்ந்துள்ளது.

பி.எஸ்சி. கம்யூட்டர் சயின்ஸ் பிரிவில் 20 இடங்களுக்கு 100 பேர் விண்ணப்பித்து உள்ளனர். பி.எஸ்சி. இயற்பியல், பி.எஸ்சி. கணிதம், பி.ஏ. ஆங்கிலம், பி.காம். போன்ற பட்டப்படிப்புகளில் சேர மாணவர்கள் இடையே கடுமையான போட்டி ஏற்பட்டுள்ளது.

அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்கள்கூட கலை - அறிவியல் கல்லூரியை நாடிச் செல்கிறார்கள். மேலும் வேதியியல், நுண்ணுயிரியல், இளநிலை பொது நிர்வாக இயல், வங்கிமேலாண்மை, நிர்வாகமேலாண்மை உள்ளிட்ட பாடங்களுக்கும் மாணவர்கள் மத்தியில் வரவேற்பு ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து அரும்பாக்கம் வைஷ்ணவா கல்லூரி முதல்வர் நரசிம்மன் கூறியதாவது:-

கலை-அறிவியல் பாடத்தில் சேர இந்த ஆண்டு மாணவர்கள் அதிக ஆர்வம் காட்டி வருகிறார்கள். விண்ணப்பித்துள்ள மாணவர்கள் பெரும்பாலும் அதிக மதிப்பெண் பெற்றவர்களாக உள்ளனர். இதனால் தேர்வு செய்வதில் பெரும் சிரமம் ஏற்படுகிறது.

90 சதவீத மதிப்பெண் பெற்ற மாணவர்கள் அதிகளவில் விண்ணப்பித்துள்ளனர். எனவே அவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

அரசு கலை-அறிவியல் கல்லூரியிலும் இதே நிலைதான். சென்னையில் உள்ள அனைத்து அரசு கலைக் கல்லூரிகளில் சேர மாணவர்கள் போட்டி போடுகிறார்கள்.

இதுபற்றி சென்னை பல்கலைக்கழக துணை வேந்தர் திருவாசகம் கூறுகையில், சென்னை பல்கலைக்கழக கட்டுப்பாட்டில் உள்ள கல்லூரிகளில் படித்த 1300 மாணவர்களுக்கு மென்பொருள் நிறுவனங்களில் வேலை கிடைத்திருக்கிறது. ஊதியமாக ரூ.15 ஆயிரம் முதல் ரூ.25 ஆயிரம் வரை பெறுகிறார்கள்.

பொறியியல் கல்லூரிகளில் படிப்பதற்கு அதிகளவு பணம் செலவு செய்ய வேண்டியுள்ளது. ஆனால் கலை-அறிவியல் கல்லூரிகளில் படித்தால் குறைந்த செலவாகும். வேலைவாய்ப்பும் உடனே கிடைத்து விடும் என்று மாணவர்கள் கருதுகிறார்கள் என்றார்.

No comments: