Thursday, March 3, 2011

காற்றில் பரவும் நீரிழிவு நோய்


காற்று மாசுபடுதலால் நுரையீரல் சம்பந்தமான நோய்கள் தானே பரவும் என்று நினைத்தால் அது தவறு. காற்றில் உள்ள மாசு நீரிழிவு நோயினையும் உண்டு பண்ணுகிறது. அண்மையில் நடந்த ஆய்வில் வகை 2 நீரிழிவு நோய்க்கும், இரத்த நாடி நோய்களுக்கும் நெருங்கிய தொடர்புகள் உண்டு எனக் கண்டுப் பிடிக்கப்பட்டுள்ளது. தொடர்ச்சியாக மாசுப்பட்ட காற்றினை சுவாசித்து வருவதால் நமக்கும் இத்தகைய நோய்கள் வர வாய்ப்புகள் அதிகம் உண்டு.

மருத்துவர் மோகன் தெரிவிக்கையில், ” நமது வாழ்க்கை மாற்றமும், உணவுப் பழக்க வழக்கமுமே நீரிழிவு நோயினை கொண்டுவந்ததாக நம்பப்பட்டு வந்தன, ஆனால் அது முற்றிலும் தவறு. நீரிழிவு நோய் வருவதற்கு அது மட்டுமே காரணம் இல்லை, நல்ல வாழ்க்கை நலத்தைப் பேணுபவர்களுக்குக் கூட நீரிழிவு வருகிறது ” என்றார். காற்றில் உள்ள கடுமையான மாசுத்துகள்கள் நமது உடலில் உள்ள இன்சுலினைத் தாக்குகின்றது, அது நமது இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவைக் குறைத்துவிடுகின்றன என ஆய்வுகள் மூலம் தெரிய வந்துள்ளன.

இந்தியாவில் குறிப்பாக நகரங்களில் நீரிழிவு நோய் அபாயகரமாக பரவி வருகின்றன். இதற்கு முக்கிய காரணமே மாசுப் பட்ட காற்று தான். சென்னைப் போன்ற இந்திய மாநகரங்களில் காற்றில் கலந்துள்ள PM2.5 அமெரிக்க நகரங்களை விட 20 மடங்கு அதிகமாக உள்ளது. அமெரிக்க நகரங்களிலேயே இதன் மாசு அதிகம் எனக் கணித்துள்ள ஆய்வாளர்கள். சென்னையின் இந்த மாசு பன்மடங்கு அதிகம் இருப்பதால், சென்னையில் வசிப்போரில் பெரும்பான்மையானவர்களுக்கு நீரிழிவு நோய் கண்டிப்பாக ஏற்படும் வாய்ப்பு உள்ளது. இதன் தொடர்பாக அரசும், மக்களும் போதிய விழிப்புணர் இல்லாமல் இருப்பது வருத்தமளிக்கும் செயலாகும். அதே போல காற்றின் மாசைக் கட்டுப்படுத்தவோ, ஆய்வறியவோ போதிய நடவடிக்கைகளும், வசதிகளும் இல்லாமல் இருப்பது இன்னொரு வகையில் பின்னடைவே !


இக்பால் செல்வன்.