Wednesday, May 25, 2011

திருத்தப்பட்ட புதிய ஒப்பந்தம் மூலம் கறுப்பு பண பிரச்சினைக்கு தீர்வு : பிரணாப் முகர்ஜி .

திருத்தப்பட்ட புதிய ஒப்பந்தம் மூலம் கறுப்பு பண பிரச்சினைக்கு தீர்வு: பிரணாப் முகர்ஜி

வெளிநாடுகளில் இந்தியர்கள் பதுக்கி வைத்து இருக்கும் பல லட்சம் கோடி கறுப்பு பணத்தை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, எதிர்க்கட்சிகள் வற்புறுத்தி வருகின்றன. இந்த பிரச்சினையில் மெத்தனமாக செயல்பட்டு வருவதாக சுப்ரீம் கோர்ட்டும் மத்திய அரசை குற்றம் சாட்டி வருகிறது.

அதைத் தொடர்ந்து, கறுப்பு பணத்தை மீட்டு இந்தியா கொண்டு வருவதற்கு மத்திய அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. நேற்று டெல்லியில் நடைபெற்ற வருமான வரி தொடர்பான மாநாடு ஒன்றில் நிதி மந்திரி பிரணாப் முகர்ஜி பங்கேற்றார்.

அப்போது நிருபர்களுக்கு பேட்டி அளித்த அவர், கறுப்பு பணத்தை வெளிக் கொண்டு வரும் நடவடிக்கைகளில் வருமான வரித்துறை ஈடுபட்டு வருவதாக தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது- "பல்வேறு நாடுகளுடன் உள்ள இரட்டை வரிவிதிப்பு தவிர்ப்பு ஒப்பந்தத்தில், வங்கி கணக்கு விவரம் மற்றும் வருமான வரி தொடர்பான தகவல்களை பகிர்ந்து கொள்ள வகை செய்யும் சட்டப்பிரிவு ஒன்றை இணைத்து திருத்தம் கொண்டு வரப்பட்டு உள்ளது.

இந்த நடவடிக்கையினால், வெளிநாடுகளில் பதுக்கி வைத்துள்ள கறுப்பு பண பிரச்சினைக்கு வருமான வரித்துறை மூலம் தீர்வு காண முடியும். 40 நாடுகளுடன் இந்த ஒப்பந்தத்தில் திருத்தம் செய்யப்பட்டு உள்ளது. வரி ஏய்ப்பாளர்களின் சொர்க்கம் என்று வர்ணிக்கப்படும் மான் தீவு பெர்முடா மற்றும் பகாமாஸ் நாடுகளில் உள்ள வங்கிகளிடம் இருந்து கறுப்பு பணம் பற்றிய தகவல் பரிமாற்றத்துக்கும் வகை செய்யப்பட்டு உள்ளது.

ஜி-20 நாடுகளின் உச்சி மாநாட்டுக்குப்பிறகு, மேலும் 20 நாடுகள் இந்த ஒப்பந்தத்தில் திருத்தம் செய்து கொள்ள சம்மதம் தெரிவித்து உள்ளன. அத்துடன் மாற்று விலை நிர்ணய திட்டத்தை வலுப்படுத்தியதன் மூலம் 33 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு தவறான வழிமுறைகளில் வெளி நாடுகளுக்குச் செல்வது தடுக்கப்பட்டு உள்ளது''.

இவ்வாறு பிரணாப் முகர்ஜி கூறினார்.

No comments: