
பெங்களூரு, கடந்த இரு தினங்களாக மிகப் பெரிய நிர்வாக மாறுதல்களைச் சந்தித்து வருகிறது தொழில்நுட்பத் துறையில் முக்கிய நிறுவனமாத் திகழும் இன்போஸிஸ்.
இந்த காலாண்டில் இன்போஸிஸ் நிறுவனம் எதிர்ப்பார்த்த லாபம் கிடைக்கவில்லை. இதுகுறித்த காலாண்டு முடிவுகள் வெளியான கையோடு நிறுவனத்தின் பங்கு மதிப்பு சடசடவென சரிந்ததது. 7 சதவீதத்துக்கு மேல் சரிவு காணப்பட்டதும் முதலீட்டாளர்கள் பதற ஆரம்பித்துவிட்டார்கள்.
பய், தினேஷ் விலகல்
இன்னொரு பக்கம் இன்போஸிஸ் மனிதவளத் துறை தலைவர் மோகன்தாஸ் பய் நிறுவனத்திலிருந்து விலகினார். இந்த காலாண்டில் எதிர்ப்பார்க்கப்பட்ட அளவு செயல்திறன் இல்லை என்பதாலேயே அவர் விலகியதாகக் கூறப்படுகிறது.
இன்னொரு பக்கம் இன்போஸிஸ் நிறுவனத்தின் இணை நிறுவனர்களில் ஒருவரும் இயக்குநருமான தினேஷ் ஓய்வு பெறுகிறார். அவருக்கு பணி நீட்டிப்பு வழங்கப்படாது என இன்போஸிஸ் தலைவர் நாராயண மூர்த்தி அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த இருவர் வெளியேறும் அதே நேரம், மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் இந்தியப் பிரிவு தலைவராக இருந்த ரவி வெங்கடேசன் இன்போஸிஸ் நிறுவனத்தின் கூடுதல் இயக்குநராக இன்றுமுதல் பொறுப்பேற்றுள்ளார். மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் பல ஆண்டுகள் பணியாற்றியவர் ரவி. அதற்கு முன் இவர் கம்மின்ஸ் நிறுவனத்தில் 17 ஆண்டுகள் இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
5889 பணியாளர்கள் விலகல்
கடந்த நிதியாண்டில் மட்டும் நியமிக்கப்பட்ட பணியாளர் எண்ணிக்கை 8,930 பேர். இவர்களில் 5889 பணியாளர்கள் நிறுவனத்திலிருந்து விலகியுள்ளனர். ஆனாலும் வரும் ஆண்டில் 45000 புதிய பணியாளர்களை நியமிக்கப்போவதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.
இன்போஸிஸ் நிறுவனத்தின் மொத்த பணியாளர் எண்ணிக்கை 1,30,820.
ஏப்ரல் 30-ல் புதிய தலைவர் அறிவிப்பு
இதற்கிடையே வரும் ஏப்ரல் 30-ம் தேதி நிறுவனத்தின் தலைமைப் பொறுப்புக்கான புதியவரை தேர்ந்தெடுக்க திட்டமிட்டுள்ளது இன்போஸிஸ் நிர்வாகம். இப்போதைய தலைவர் நாராயணமூர்த்தி வரும் ஆகஸ்ட் மாதம் ஓய்வு பெறுகிறார்.
1981-ம் ஆண்டு ஏழு கம்ப்யூட்டர் எஞ்ஜினீயர்களுடன் வெறும் 250 டாலர் முதலீட்டில் தொடங்கப்பட்டது இந்த இன்போஸிஸ். இன்று அதன் நிகர லாபம் மட்டும் 408.5 மில்லியன் டாலர்கள்.
இத்தனை ஆண்டுகள் கிடுகிடு வளர்ச்சியைக் கண்ட இந்த நிறுவனம் இந்த ஆண்டுதான் சற்று மந்தமான கட்டத்தில் நிற்கிறது. இதற்குக் காரணம் அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளின் பொருளாதார வீழ்ச்சியே என்றும், இது இன்போஸிஸை பாதிக்காது என்றும் அந்நிறுவனம் அறிவித்துள்ளது.
நன்றி தட்ஸ்தமிழ்.
No comments:
Post a Comment