Friday, April 15, 2011

வாக்காளர்களின் பெருமையை சீர்குலைத்து விட்ட அரசியல்வாதிகள்-அன்னா ஹஸாரே



ஓட்டுக்குப் பணம் கொடுத்து, வாக்காளர்களின் பெருமையை அரசியல்வாதிகள் சீர்குலைத்து விட்டனர் என்று அன்னா ஹஸாரே கடுமையாக தாக்கியுள்ளார்.

டெல்லியை முகாமிட்டு ஊழல்வாதிகளின் வயிற்றில் புளியைக் கரைத்த அன்னா ஹஸாரே தற்போது மகாராஷ்டிர மாநிலம் அகமது நகர் மாவட்டத்தில் உள்ள தனது கிராமத்திற்குத் திரும்பியுள்ளார்.

அங்கு செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில்,

ஊழல்வாதிகளைத் தண்டிக்க வகை செய்யும், லோக்பால் மசோதாவை நிறைவேற்றுவதற்காக, சமீபத்தில் டில்லியில் உண்ணாவிரதம் இருந்தேன். இதற்கு மக்கள் மத்தியில் மகத்தான வரவேற்பு கிடைத்தது. ஊழலுக்கு எதிராக, மக்களிடம் ஏற்பட்டுள்ள இந்த விழிப்புணர்வை பார்த்து, சில அரசியல் கட்சித் தலைவர்களும், குற்றப் பின்னணி உடையவர்களும் கலக்கம் அடைந்துள்ளனர்.

எனவே, ஊழலுக்கு எதிரான மக்களின் போராட்டத்தில், அவர்கள் குழப்பத்தை ஏற்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். என்னை பொறுத்தவரை, அரசியல் கட்சித் தலைவர்கள் அனைவரும் ஊழல்வாதிகள் என, ஒருபோதும் கூறியது இல்லை. அனைத்து துறைகளிலுமே, குறிப்பிட்ட சில நல்ல மனிதர்கள் இருப்பர். ஆனால், இது போன்றவர்கள், தங்களைச் சுற்றி நடக்கும் ஊழலுக்கு எதிராக குரல் கொடுக்கும் போது தான், அவர்கள் நேர்மையானவர்கள் என, மக்களுக்கு தெரிய வரும்.

ஊழலுக்கு எதிராக குரல் கொடுக்காமல், மவுனமாக இருப்பதும், ஒரு வகையில் ஊழலை ஆதரிக்கும் செயல் தான். ஓட்டு வாங்குவதற்காக பணம் கொடுத்து, வாக்காளர்களின் பெருமையை சீர்குலைத்ததற்கு, அரசியல் கட்சிகளும், அரசியல் கட்சித் தலைவர்களும் தான் பொறுப்பேற்க வேண்டும். அரசியல்வாதிகள், முறைகேடான வழிகளின் மூலம், ஏராளமாக கறுப்பு பணம் ஈட்டுகின்றனர். ஆனால், அந்த கறுப்பு பணத்தில், குறிப்பிட்ட சிறிய தொகையை மட்டுமே, வாக்காளர்களுக்கு கொடுக்கின்றனர்.

கறுப்பு பணம் இருந்தால் மட்டுமே, தேர்தலில் வெற்றி பெற முடியும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. நல்ல குணங்கள் உடைய, நேர்மையான வேட்பாளர்கள், தேர்தலில் நிற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

குஜராத் முதல்வர் நரேந்திர மோடி, பீகார் முதல்வர் நிதிஷ்குமார் ஆகியோரை, நான் பாராட்டியதை சிலர் கடுமையாக விமர்சித்துள்ளனர். அவர்களுடைய மாநிலங்களில், அவர்கள் மேற்கொண்ட வளர்ச்சிப் பணிகளையும், திட்டங்களையும் மட்டும் தான், நான் பாராட்டினேன். மற்றபடி, கலவரம் நடந்தபோது, அதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளேன்.

ஊழலுக்கு எதிரான போராட்டத்தில், சாதாரண மக்களும், தன்னார்வ தொண்டு நிறுவனங்களைச் சேர்ந்தவர்களும், மிகுந்த ஈடுபாட்டுடன் பங்கேற்றது, மகிழ்ச்சி அளிக்கிறது என்றார் .


No comments: