தி.மு.க. தலைவர் கருணாநிதி நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
அதன் விவரம் வருமாறு:-
கேள்வி:- சமச்சீர் கல்வித் திட்டம் பற்றி உச்சநீதிமன்றம் - உயர்நீதிமன்றத் தீர்ப்புக்கு தடை கொடுக்க மறுத்ததோடு - ஆகஸ்ட் மாதம் 2-ந் தேதிக்குள் சமச்சீர் கல்விப் பாடத் திட்டப் புத்தகங்களை மாணவர்களுக்கு வழங்க வேண்டுமென்றும் சொல்லி இருக்கிறதே?
பதில்:-அந்தவழக்கினை 26-ந் தேதி இறுதியாக விசாரிப்பதாகச் சொல்லியிருக்கிறார் கள். அப்போது சமச்சீர் கல்விக்குச் சாதகமாக நல்ல தீர்ப்பு வரும் என்று எதிர்பார்க் கிறேன். அப்படி வருகின்ற தீர்ப்புக்கு வரவேற்பும் வாழ்த்தும் கூற வேண்டிய கடமை தமிழக அரசுக்கு இருக்கிறது.
கேள்வி:-ஆகஸ்ட் 2-ந் தேதிக்குள் சமச்சீர் கல்விப் பாடத் திட்டப்புத்தகங்களை மாணவர்களுக்கு வழங்க வேண்டுமென்று உச்சநீதிமன்றம் தெரிவித்துவிட்டதே?
பதில்:- மகிழ்ச்சி.
கேள்வி:- அ.தி.மு.க. அரசு பொய் வழக்குகள் போடுவதை எதிர்த்து தி.மு.க. சார்பில் ஆகஸ்ட் 1-ந் தேதி ஆர்ப்பாட்டம் நடத்துவதாக அறிவித்திருக்கிறீர்களே?
பதில்:- நான் ஏற்கனவே சொல்லியிருக்கிறேன். யார் தவறு செய்திருக்கிறார்களோ அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கலாம், வேண்டுமென்றே, கட்சியைப் பலவீனப் படுத்தவும், கழக தோழர்களைப் பயமுறுத்தவும், பொது மக்களிடையே பீதியை உண்டாக்கவும் முயற்சி செய்யாதீர்கள் என்று நான் தொடக்கத்திலேயே சொல்லி இருக்கிறேன்.
தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கலாம். குறிப்பாக இதில் கட்சி வித்தியாசம் பார்க்கக் கூடாது என்று சொல்லியிருக்கிறேன். ஆனால் அ.தி.மு.க.வினர் மீதே குற்றச்சாட்டுகள் இருக்கும் போதே அவர்களுக்கெல்லாம் ``பாலாபிஷேகம்'' செய்துவிட்டு - தி.மு.க.வினரை மாத்திரம் பயமுறுத்துவது என்ன நியாயம்?
கேள்வி:-கோவை பொதுக்குழுவில் என்ன மாதிரி விஷயங்கள் விவாதிக்கப்பட உள்ளது?
பதில்:-இதுபோன்ற விஷயங்களும் விவாதிக்கப்படும். இதையெல்லாம் எப்படி தி.மு.க. சந்திப்பது என்பது பற்றி விவாதிக்கப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.
கேள்வி:-தி.மு.க. ஆட்சியில் தியாகராய நகர் போன்ற பகுதிகளில் பல கட்டிடங் களுக்கு விதிகளை மீறி சி.எம்.டி.ஏ. அனுமதி கொடுத்திருப்பதாகவும், அதனால் அவைகளையெல்லாம் இடிக்கப் போவதாகவும் சொல்கிறார்களே?
பதில்:-அப்படி ஏதாவது நடைபெற்றிருந்தால், அவைகளைச் சட்டப்படி சுட்டிக்காட்டி னால் நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம்.
கேள்வி:-நித்தியானந்தா, அந்தரத்தில் பறக்க வைக்கப்போவதாக தெரிவித்தது, பகுத்தறிவாளர்களையெல்லாம் முகம் சுளிக்க வைத்திருக்கிறதே?
பதில்:-எந்தச் சாமியார்களுடைய லீலைகளும், அற்புதங்களும் - தி.மு.க.வின் பகுத்தறிவு கொள்கைக்கு ஏற்புடையதல்ல. அதற்காக அந்த சாமியார்களின் மீதோ, துறவிகளின் மீதோ தனிப்பட்ட முறையில் தி.மு.க. எத்தகைய தாக்குதலையும் நடத்தியதில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
No comments:
Post a Comment