Friday, July 22, 2011

வீரபாண்டி ஆறுமுகத்திற்கு போலீஸ் காவல்.



நில அபகரிப்பு வழக்குகள் தொடர்பாக போலீசாரால் தேடப்பட்டு வரும் முன்னாள் திமுக அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் வெளி மாநிலத்தில் பதுங்கியிருக்கலாம் என்று போலீசார் கருதுகின்றனர்.

இதுகுறித்து சேலம் மாநகர போலீஸ் கமிஷனர் சொக்கலிங்கம் கூறுகையில், வீரபாண்டி ஆறுமுகத்தை கைது செய்ய போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். அவரை பற்றி தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறோம். மேலும் அவரைப்பற்றிய தகவல்கள் யார் வேண்டுமானாலும் கூறலாம் என்றார்.

இதற்கிடையே வீரபாண்டி ஆறுமுகம் பெங்களூர் புறநகர் பகுதியில் பதுங்கி இருப்பதாக கிடைத்த தகவலின்படி போலீசார் கிருஷ்ணகிரி அருகே கிராணைட் குவாரிகள் தேடுதல் வேட்டை நடத்தினர். போலீசார் தேடுவதை அறிந்த வீரபாண்டி ஆறுமுகம் வேறு இடத்துக்கு தப்பி இருக்கலாம் என்று தெரிகிறது.

வீரபாண்டி ஆறுமுகம், தான் கைது செய்யப்படுவதை தடுக்கும் பொருட்டு, சென்னை ஐகோர்ட்டில் முன்ஜாமீன் மனு தாக்கல் செய்திருந்தார்.

நேற்று இந்த மனு விசாரணைக்கு வந்தபோது வீரபாண்டி ஆறுமுகம் தரப்பில் ஆஜரான வக்கீல் என்.ஜோதி வாதிடுகையில்,

வீரபாண்டி ஆறுமுகம் தி.மு.க. கட்சியில் முக்கிய பொறுப்பில் இருக்கிறார். அந்தக் கட்சியின் செயற்குழு 23ம் தேதியன்றும், பொதுக்குழு 24ம் தேதியன்றும் கோவையில் நடைபெற உள்ளது. இந்தக் கூட்டங்களில் மனுதாரர் கலந்து கொள்ள வேண்டும்.

ஆதனால் இந்த வழக்கில் அரசு தீவிரம் காட்டுகின்றது. எனவே அவரை கைது செய்யக்கூடாது என்றார்.

இதற்கிடையே வீரபாண்டி ஆறுமுகத்தின் முன்ஜாமீன் மனு மீதான விசாரணை இன்றும் நடந்தது.

அப்போது சேலம் அங்கம்மாள் காலனி மக்கள் நிலங்களை அபகரித்த புகார் தொடர்பாக குற்றம் சாட்டப்பட்டுள்ள திமுக முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தின், முன்ஜாமீன் மனுவை விசாரித்த ஐகோர்ட் நீதிபதி ராஜசூர்யா, வீரபாண்டி ஆறுமுகம் சேலம் மாநகர மத்திய குற்றப்பிரிவு போலீசில் வரும் திங்கட்கிழமை காலை 10 மணிக்குள் சரண் அடைய வேண்டும் என்றும், மேலும் வீரபாண்டி ஆறுமுகத்தை 3 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்கவும் உத்தரவிட்டார்.

ஆக, திமுக முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்திற்கு வரும் திங்கள் முதல் புதன் வரையிலான 3 நாட்கள் போலீஸ் காவல் விதிக்கப்பட்டுள்ளது.

No comments: