Saturday, April 2, 2011

தி.மு.க. கூட்டணியை வீழ்த்த சூழ்ச்சி : சேலம் கூட்டத்தில் கலைஞர் பேச்சு.

தமிழக சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணியை வீழ்த்த திட்டமிட்ட சூழ்ச்சி நடைபெறுகிறது என்று சேலத்தில் நடந்த பிரசார கூட்டத்தில் முதல் அமைச்சர் கலைஞர் பேசினார்.

01.04.2011 அன்று மாலையில் சேலம் போஸ் மைதானத்தில் பிரமாண்டமான தி.மு.க. கூட்டணி தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் முதல் அமைச்சர் கலைஞர் சேலம், நாமக்கல், தர்மபுரி மாவட்ட தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:

இந்த மேடையில் பேசிய கூட்டணி கட்சி தலைவர்கள் மற்றும் சேலம் மாவட்ட தி.மு.க. செயலாளரும் இந்த மாவட்டத்தில் கழகத்தை கட்டிக்காக்கும் தளபதியாக விளங்கும் தம்பி வீரபாண்டி ஆறுமுகம் உள்பட அனைவரும் பேசும்போது நம்முடைய கூட்டணி பயணத்தில் நாம் வெற்றிப்பாதையில் வெற்றியை நெருங்கிவிட்டோம் என்று ஒரு கருத்தை தெரிவித்தனர்.

இந்த நேரத்தில் தி.மு.க. ஒரு எமர்ஜென்சியை சந்தித்துக் கொண்டு இருக்கிறது. தமிழகத்தில் நெருக்கடி நிலை மீண்டும் வந்துவிட்டது போன்ற சூழ்நிலையை தமிழ்நாட்டில் காண்கிறோம்.

அன்று இந்திரா காந்தி பிரதமராக இருந்தபோது அறிவிக்கப்பட்ட நெருக்கடி நிலையால் யார், யார் சிறை சென்றார்கள், யார், யார் சித்ரவதையை அனுபவித்தார்கள். எழுத்து உரிமை, பேச்சு உரிமை எப்படியெல்லாம் பாதிக்கப்பட்டது என்றெல்லாம் விலாவாரியாக இந்திரா காந்தியிடம் எடுத்துக் கூறினோம்.

அதைக்கேட்டதும் அவர் அதிர்ச்சி அடைந்தார். அவசர நிலையை பிரகடனப்படுத்தியது மட்டும்தான் நான். அந்த கால கட்டத்தில் அதிகாரிகள் எப்படி எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பதை நான் கண்காணிக்கவில்லை. அதற்காக நான் இந்த நேரத்தில் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என்று சென்னை கடற்கரையில் நடந்த கூட்டத்தில் வருத்தம் தெரிவித்தார்.

இன்று அப்படி ஒரு நெருக்கடி நிலை தி.மு.க.வுக்கு எதிராக பிரகடனப்படுத்தப்பட்டு உள்ளது.

இங்கு அமர்ந்துள்ள தம்பி வீரபாண்டி ஆறுமுகத்தின் வீட்டுக்கு காவல் துறையினரால் வழங்கப்பட்டு வந்த பாதுகாப்பு குறைக்கப்படுகிறது. அல்லது அறவே விலக்கப்படுகிறது.

அவராவது மாநில அமைச்சர் ஆவார். ஆனால் மத்தியில் அமைச்சராக இருக்கும், மதுரை மாவட்டத்தில் களப்பணியில் விறுவிறுப்பாக செயல்பட்டுக் கொண்டிருக்கும் தம்பி மு.க. அழகிரிக்கு அளிக்கப்பட்டு வந்த பாதுகாப்பு முற்றிலும் விலக்கிக் கொள்ளப்பட்டு உள்ளது.

சாதாரணமான ஒரு மனிதன் தன்னுடைய உயிருக்கு ஆபத்து உள்ளது என்று அரசிடமோ, அல்லது மேல்மட்ட அதிகாரிகளிடமோ முறையிட்டால் போதும், அவனுக்கு போலீஸ் பாதுகாப்பு கேட்டு விண்ணப்பித்தால், அரசும், அதிகாரிகளும் அந்த மனிதனுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டியது கடமையாகும்.

அப்படிப்பட்ட ஒரு நிலையில் மதுரையில் மத்திய மந்திரி மு.க.அழகிரிக்கு வழங்கப்பட்டு வந்த பாதுகாப்பு அறவே விலக்கிக்கொள்ளப்பட்டு உள்ளது.

தமிழ்நாட்டு அதிகாரிகளை நான் கேட்கிறேன். உங்களுக்கு இந்த உத்தரவை வழங்கியது யார்? நாடாளும் பொறுப்பில் இருப்பவர்களா? நாட்டை ஆண்டு கொண்டிருக்கும் பிரதமரா? இல்லை. இவர்களுக்கு உத்தரவிட்டுக்கொண்டிருப்பது யார் என்று எனக்கு தெரியும்.

நான் பார்க்கின்றேன். ஒரு கூட்டத்துக்கு 100 போலீசார், 200 போலீசார் என்று பாதுகாப்புக்கு வருகிறார்கள். ஒரு முதல் அமைச்சர் எதிர்க்கட்சிக்காரன் பேசுகின்றதுபோல் பேச வேண்டிய நிலைக்கு என்னை ஆளாக்கி இருக்கிறார்கள் என்றால், நான் உங்களை எல்லாம் கேட்கிறேன். என்னை கடந்த காலத்திலே முதல் அமைச்சராக தேர்ந்தெடுத்தீர்களே. அது தவறு என்றுதான இன்றைக்கு உள்ள அதிகாரிகள், குறிப்பாக போலீஸ் துறை அதிகாரிகள் இத்தகைய நிலையை தமிழகத்தில் உருவாக்கி இருக்கிறார்கள் என்பதை நீங்கள் எண்ணிப்பார்க்க வேண்டும்.

திராவிட முன்னேற்ற கழகம், தம்பி வீரபாண்டி ஆறுமுகம் எடுத்துச் சொன்னதைப்போல், தன்னுடைய கொள்கையை, லட்சியத்தை, யாரிடத்திலும், எவரிடத்திலும், என்றைக்கும் அடமானம் வைத்துவிட்டு தான் வாழ வேண்டும் என்று நினைக்கும் கட்சி அல்ல.

நாங்கள் பார்க்காத எமர்ஜென்சியா? நாங்கள் பார்க்காத நெருக்கடியா? நாங்கள் அனுபவிக்காத சித்ரவதையா? இன்றைக்கும் சேலம் மாவட்டத்தினுடைய செயலாளராக இருக்கின்ற ஆறுமுகத்தை என்னபாடுபடுத்தியது நெருக்கடி கால கொடுமைகள் என்பது எனக்கு தெரியாததா?

இன்றைக்கு துணை முதல் அமைச்சராக பவனி வருகின்ற மு.க.ஸ்டாலின் நெருக்கடி காலத்திலே சிறைச்சாலையில் அடைக்கப்பட்டு இன்னமும் உடல்நலம் குணமாகவில்லை என்று இரவில் புலம்பிக் கொண்டிருக்கிறார். எனவே நெருக்கடிகளோ, சித்ரவதைகளோ எங்களுக்கு புதியது அல்ல.

இந்த நெருக்கடிகளும், சித்ரவதைகளும் எங்களை வளர்த்தது. இன்னமும் எங்களை வாழ வைத்துக்கொண்டிருக்கிறது. என்பதை நான் தெரிவித்துக்கொள்கிறேன்.

இந்த தேர்தலில் தி.மு.கழகத்தை வீழ்த்திவிட பல முனைகளிலும், எல்லா வகையான உபாயங்களிலும், எதிர் அணியினரால் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இன்றுகூட கருத்துக்கணிப்பு வெளியிட்டு இருக்கிறார்கள்.

கருத்துக்கணிப்புகளின் லெட்சணம் என்னவென்று நமக்கு தெரியும். முன்புகூட கருத்துக்கணிப்பு வெளியிட்டார்கள். கடந்த நாடாளுமன்ற தேர்தலின்போது, தி.மு.க. கூட்டணிக்கு, தி.மு.க. காங்கிரஸ் கூட்டணிக்கு 2 இடங்கள் கூட கிடைக்காது என்றுதான் கணித்தார்கள்.

ஆனால் எத்தனை இடம் கிடைத்தது என்றும், இன்றைக்கு மத்தியில் காங்கிரஸ் ஆட்சியை நிலை நிறுத்தக்கூடிய அளவுக்கு அந்த கூட்டணி அன்றைக்கு வெற்றி பெற்றதும் உங்கள் அனைவருக்கும் தெரிந்த உண்மைதான்.

எனக்கு தெரியும், எப்போதும் எந்தெந்த கருத்துக்கணிப்பாளர்கள், இந்த தேர்தலிலே, இந்த புள்ளி விவரங்களை சொல்லி, கருத்துக்கணிப்பு வெளியிடுகிறார்கள் என்று எனக்கு தெரியும். தேர்தல் முடிந்த பிறகு அவர்களுடைய பெயர்களையெல்லாம் நான் வெளியிட தயாராக இருக்கிறேன்.

தி.மு.க. கூட்டணி, வெற்றி பெறுவதற்கு வழி இல்லை என்று கருத்துக்கணிப்பாளர்களை விட்டு, எழுதச் செய்கிறார்கள், பேசச் செய்கிறார்கள். வெளியிடச் செய்கிறார்கள். நான், அவர்களை நுண்ணிய நிலையில் உணர்ந்துப் பார்த்தேன். யார், யாரை இது சம்பந்தமாக தொடர்பு கொண்டால் உண்மைகள் வெளியில் வரும் என்று அந்த வழிமுறைகளை கையாண்டு பார்த்தேன்.

ஒன்றுமில்லை, தேர்தல் களத்திலே இருக்கின்ற அந்த தலைவர்கள், எதிர்க்கட்சிகளை சேர்ந்த நண்பர்கள், தேர்தலில் பணம் செலவழிப்பது ஒரு புறம் இருக்கட்டும். தேர்தலிலே மக்களுக்கு தி.மு.க. கூட்டணி மீது ஒரு நம்பிக்கை இன்மையை உருவாக்குவோம் என்று திட்டமிட்டு, அதற்கான ஆட்களைப் பிடித்து, பெரிய பெரிய பத்திரிகையாளர்கள், ஏற்கனவே பெயர்களை கெடுத்துக்கொண்டவர்கள் ஆகியோர் எல்லாம் நம்மீது கொண்ட அன்பின் காரணமாக, நாம் ஆட்சிக்கு வந்தால், அடித்தட்டு மக்களுக்கு நன்மைகள் செய்வோம், நாம் ஆட்சிக்கு வந்தால் சாக்கடைகளில் உழன்று கொண்டிருக்கும் சாதாரண மக்களுக்கு நன்மைகள் செய்வோம், திட்டங்களை நிறைவேற்றுவோம், தீமைகளை வீழ்த்துவோம், நாம் ஆட்சிக்கு வந்தால் உயர்ந்து உயர்ந்து கொண்டே போகின்ற செல்வந்தர்களுக்கு வாழ்வளிக்க மாட்டோம், ஓலைக்குடிசையிலே, ஒண்ணரை சான் பாயிலே படுத்து உறங்குகின்ற உழைப்பாளிகளுக்கு வாழ்வளிப்போம். ஆகவே இவர்களுடைய ஆட்சியில் நம்மைப்போன்ற, பூர்ஷ்வாக்களை காப்பாற்றாது. ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்போம் என்ற இவர்களின் தாரக மந்திரம், இவர்களின் மூல மந்திரமாக இருக்கின்ற காரணத்தால், மக்கள் மனதிலே இவர்கள் பெற்றிருக்கின்ற நம்பிக்கை குலைந்து, வீழ்த்திவிட வேண்டும் என்று பஞ்சாங்கம் பார்க்கிறார்கள். பத்திரிகைகளிலே பொய்கள் எழுதுகிறார்கள்.

தயவு செய்து இங்கே குழுமியிருக்கிற பல்லாயிரக்கணக்கான மக்கள் இத்தகைய ஜோசியங்களை, இத்தகைய கருத்துக்கணிப்புகளை நம்பமாட்டீர்கள், நம்ப வேண்டாம் என்று உங்களை நான் கேட்டுக்கொள்கிறேன்.

திருமணம் முடிவாகி, நாள் பார்த்து, பத்திரிகையும் அடித்து, எல்லோரும் வாருங்கள் மணமக்களை வாழ்த்த என்று அழைப்பும் விடுத்துள்ள நிலையில், யாரோ ஒரு பொறாமை கொண்ட மனிதர், ஒரு அய்யர், இந்த பெண்ணுக்கும், இந்த பையனுக்கும் திருமணம் நடந்தால் அவர்களுடைய வாழ்க்கை நன்றாக இருக்காது என்று சொல்லி, திருமணத்தை நிறுத்த முயற்சிப்பதுபோல் இன்றைக்கு கருத்துக்கணிப்புகளை சிலர் வெளியிட்டுக் கொண்டிருக்கிறார்கள். அதனை நம்ப வேண்டாம் என்று, நம்பி கெடாதீர்கள் என்று நான் தமிழ்நாட்டு மக்களை, மிகுந்த பணிவன்புடன் கேட்டுக்கொள்கின்றேன்.

நாங்கள் நிறைவேற்றி, நிறைவேற்ற இருக்கின்ற திட்டங்களை சொல்லி, உங்களிடத்தில் வாக்குகளை கேட்கிறோம். ஆனால் எதிர்க்கட்சிகள் எதை சொல்லி வாக்கு கேட்கிறார்கள். கருணாநிதி யார் தெரியுமா? ஒரு காலத்தில் ஓசி ரெயிலில் சென்னைக்கு வந்தவர் என்று என்னை இகழ்ந்துரைக்கிறார்கள். நான் அதை இகழ்ச்சியாக கருதவில்லை.

ஏனென்றால், ரெயிலிலே ஓசி ரெயிலிலே சென்னைக்கு வந்தவனா, இல்லையா என்பது எல்லோருக்கும் தெரியும். ஏதோ நான் ஓசி ரெயிலில் பயணித்து வந்தவன் என்பது போலவும், என் பக்கத்து கம்பார்ட்மெண்ட்டில் அந்த அம்மையார் இருந்தவர் போலவும் மக்களிடத்திலே பிரசாரம் செய்வது நாகரீகமாகாது. பதிலுக்கு பதில் பேச ஆரம்பித்தால் அதற்கு நான் கூடத் தேவையில்லை. இந்த இயக்கத்தில் இருக்கின்ற ஒரு சாதாரண தொண்டன் இதற்கு பதில் அளிப்பான்.

ஆனால் இதுபோன்ற தேர்தல் காலங்களில் ஒருவருடைய தனிப்பட்ட நிலைமைகளை இழிவுபடுத்தி பேசுவது முறையல்ல என்பதை, நான் தந்தை பெரியார் இடத்திலே கற்றுக்கொண்டவன். ஆகவேதான் அந்த நிலைக்கு செல்ல விரும்பவில்லை.

நான் சேலத்துக்கு வந்தால், எனக்கு முன்னால் பேசிய நண்பர்கள் எல்லாம் எடுத்துக் கூறியதைப்போல சேலத்தினுடைய பெருமைகள் என்ன? சேலத்தினுடைய புகழ் என்ன? சேலத்துக்கு தேவையான கோரிக்கைகள் என்ன, அதனை நிறைவேற்ற வழிமுறைகள் என்ன என்பதை உங்களோடு விவாதித்து முடிவுகள் செய்வதுதான் நாகரீகமான அரசியலாகும்.

தயவு செய்து இங்கே அமைதியாக இருந்தால் நான் சொல்ல வேண்டியவைகளை அமைதியாக சொல்ல முடியும்.

ஏனென்றால் நான் இன்றைக்கு இந்த மேடைக்கு வந்திருப்பதே, வரக்கூடிய நிலையில் இல்லை. இருந்தாலும் வந்தேன். காரணம், இன்று மாலை 4 மணிக்கெல்லாம் என்னுடைய மூத்த மகன் மு.க.முத்து, ஒரே கடுமையான நிலையிலே உடல்நிலை பாதிக்கப்பட்டு சென்னையிலே அப்போலோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, உயிர் பிழைப்பது கேள்விக்குறி என்ற நிலையிலே மருத்துவர்கள் சொல்லி, அதன்பிறகு நான் என் மனதை திடப்படுத்திக்கொண்டு, உங்களைவிட என் மகன் பெரிதல்ல, உங்களைவிட என் குடும்பம் பெரிதல்ல என்று எண்ணித்தான் இன்றைக்கு மேடைக்கு வந்திருக்கிறேன். எனவே நீங்கள் என்னோடு அமைதிகாத்து, நான் சொல்லுகின்ற செய்திகளையெல்லாம், நெஞ்சிலே தேக்கி வைத்து அதற்கேற்ப நடந்துகொள்ள வேண்டும் என்று சிலவற்றை இங்கு சொல்ல விரும்புகின்றேன்.

சத்துணவில் தி.மு.க. ஆட்சியில் முதலில் ஒருமுட்டை வழங்கப்பட்டது. அடுத்து வந்த அம்மையார் ஆட்சி அதை நிறுத்தி விட்டது. இப்போது சாமானிய குழந்தைகளும் உடல் வலுவாக இருக்க ஒரு முட்டை என்பதற்கு பதிலாக 3 முட்டை, 5 முட்டை என வாழைப்பழமும் சேர்த்து வழங்கப்படுகிறது. முட்டையை நிறுத்திய ஆட்சி வேண்டுமா? என பார்க்க வேண்டும்.

தி.மு.க. தேர்தல் அறிக்கை வெளிவந்தது. அது மக்களின் மனம் கவர்ந்தது. முந்தைய தேர்தல் அறிக்கையிலே கூறப்பட்டது கதாநாயகன். இந்த தேர்தல் அறிக்கையிலே கூறப்பட்டது கதாநாயகி. கதாநாயகன் கதாநாயகி இருக்கும்போது, வில்லன்களாக வந்தவர்கள் கழகத்தின் வெற்றியை தடுத்திட என்னென்னவோ செய்கிறார்கள். எனக்கு பயமாக உள்ளது. அச்சமாக உள்ளது. சட்டசபையில் எனக்கு என்ன நடக்குமோ? என் தலை என்னவாகுமோ?. தம்பி வீரபாண்டி போன்றவர்கள் அருகில் இருக்கும்போது எனக்கு ஏன் அச்சம். அரசியல் நாகரீகம் அசிங்கமாகி விட்டது. இதற்கு அதிகாரிகளும் உடன்படுகிறார்கள்.

அதிகாரிகளை சொல்கிறேன். போலீஸ் அதிகாரிகளை கூறுகிறேன். நான் ஆட்சிக்கு வந்தபோது போலீஸ் இலாகாவில் மாதம் ரூ.80 சம்பளம் பெற்று வந்தனர்.

நான் நடத்திய உதயசூரியன்' என்ற நாடகத்தில் ஓரங்க காட்சி நடத்தப்பட்டது. போலீஸ்காரர் மனைவியிடம் பேசினார். இதுதானா சாப்பாடு?. தொட்டுக்க ஒன்றும் இல்லையா என கேட்டார். இதுதான் இருக்கு என மனைவி சொன்னார்.

இந்த நிலைமாறி இன்றைக்கு எத்தனை ஆயிரங்கள் பெறுகிறார்கள். எங்களை பார்த்து அவர்கள் கம்பை தூக்குகிறார்கள். எங்கள் கார் வழியை மறிக்கிறார்கள். அலுவலகத்தில் இருந்து உள்ளே வரவும், வெளியே வரவும் எங்களிடம் அனுமதி பெறவேண்டும் என்று கூறுவதை எண்ணிப்பார்க்க வேண்டும்.

இந்தியாவில் முதன் முதலில் போலீசாரின் நல்வாழ்வுக்காக கமிஷன் அமைத்தது தி.மு.க. ஆட்சிதான். பின்னர் நாங்கள் மீண்டும் பொறுப்பேற்றதும் போலீஸ் உரிமைகள் பெற 2 வது கமிஷன் அமைத்ததும் தி.மு.க. ஆட்சிதான். இப்போது 3 வதாகவும் கமிஷன் அமைத்து வசதி வாய்ப்புகளை, கேட்பவற்றை வழங்க பரிந்துரைத்தது இந்த கருணாநிதிதான். இதெல்லாம் தி.மு.க. ஆட்சியில் முதல் அமைச்சர் பொறுப்பேற்று செய்தது. அந்த போலீஸ் கம்பு என்னையே, என்னுடைய தோழர்களை, எங்களையே தாக்கி சிறையில் தள்ளுகிறது என்றாலும் வருத்தப்பட மாட்டேன், பொறுமை இழக்க மாட்டேன். காலம் மாறும், பதில் கிடைக்கும்.

நான் நம்புவது கடவுளையோ தெய்வத்தையோ அல்ல. நான் நம்புவது உங்களைத்தான். மக்களின் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு, ஏழையின் சிரிப்பிலே இறைவனை காணலாம் என பேரறிஞர் அண்ணா சொன்னார். அவர்களுக்கு வாழ்வளிப்போம். வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடினேன் என வள்ளலார் கூறியதை எதிரொலிப்போம். தொடர்ந்து அதே பாணியில் பாடுபடுவோம்.

எங்கள் கொள்கையில், லட்சியங்களில் சிறு மாசு ஏற்பட்டால் கூட இந்த உயிர் இருக்கிறவரை விடமாட்டேன்... விடமாட்டேன் எனக்கூறி விடைபெறுகிறேன். வணக்கம். இவ்வாறு முதல் அமைச்சர் கலைஞர் பேசினார்.