Friday, April 1, 2011

விஜயகாந்த்துக்கு ஜெ. வைத்த ஆப்பு : திருமாவளவன்.

சேலம் திமுக பொதுக்கூட்டத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர்,

தமிழகத்தில் நடைபெறுகிற தேர்தல் யார் யார் சட்டமன்ற உறுப்பினர்களாக வேண்டும் என்பது அல்ல. யார் முதல்வராக வேண்டும் என்பதற்கான தேர்தல். கலைஞர் தலைமையிலான ஒரு அணி. நம்மை எதிர்க்கும் ஒரு அணி. யார் முதல்வராக வேண்டும் என்ற கேள்விக்கு காங்கிரஸ் பேரியக்கம் சொல்லுகிறது கலைஞர்தான் முதல்வராக வேண்டும் என்று. யார் முதல்வராக வேண்டும் என்ற கேள்விக்கு பாமக சொல்கிறது கலைஞர்தான் முதல்வராக வேண்டும் என்று. யார் முதல்வராக வேண்டும் என்ற கேள்விக்கு விடுதலைச் சிறுத்தைகள் சொல்லுகிறோம் கலைஞர்தான் 6வது முறையாக முதல் அமைச்சராக வரவேண்டும். இதேபோன்று கொங்குநாடு முன்னேற்ற கழகம், இந்திய முஸ்லீம் லீக் உள்ளிட்ட தோழமை கட்சிகள் கலைஞர்தான் என்று சொல்லுகிறார்கள்.

ஆனால் நம்மை எதிர்க்கிற அணியில் இருப்பவர்கள் கலைஞர் கேட்ட வினாவிற்கு எதிர் அணியில் இருப்பவர்கள் விடை சொல்லுவார்களா. ஒரே மேடையில் இருந்து அவர்கள் மக்களிடம் வாக்குகள் கேட்பதற்கு கூட, தெம்பு இல்லாதவர்களாக, ஒருவருக்கொருவர் நம்ப கூடியவர்களாக இல்லாத நிலையில் மக்களை சந்திக்கிறார்கள்.

நண்பர் விஜயகாந்த் ஒரே மேடையில் நின்று வாக்குகள் கேட்க வேண்டாம். நாங்கள் அம்மாவை தான் முதல் அமைச்சராக ஆக்குவோம் என்ற துணிச்சல் உண்டா. இல்லை. ஏனென்றால் அடுத்த முதல்வர் நான்தான் என்ற எண்ணத்தில் இருப்பவர் அவர். ஆகவே அதனை அவரால் சொல்ல முடியாது.

வாக்காளர் பெருமக்களே ஒப்பிட்டு பாருங்கள். யார் முதல்வர். தலைவர் கலைஞரா. கலைஞரை விமர்சிக்கும் அம்மையாரா.

1984ல் அரசியலுக்கு வந்தவர் அம்மையார். ஆனால் 1938ஆம் ஆண்டிலேயே வந்தவர் கலைஞர். பெரிய தலைவர்களுடன் பழகி, அரசியல் அனுபவம் பெற்று தமிழ் மக்களையும், தமிழ் மொழியையும், தமிழ் மண்ணையும் பாதுகாப்பதற்காக தம் வாழ்வை அற்பணித்துக்கொண்ட இந்த 87 வயதிலும் சக்கர நாற்காலியில் சுற்றி சுழன்று வந்து, தமிழகத்தில் ஓய்வின்றி உழைத்து வந்துகொண்டிருக்கும் கலைஞர் முதல்வராக வேண்டுமா. அல்லது திட்டி தீர்ப்பதையே அரசியல் கொள்கையாக வைத்திருக்கும் அம்மையார் முதல்வராக வரவேண்டுமா. ஒப்பிட்டு பாருங்கள்.

ரவுடிகள் ஆட்சியை ஒழிப்போம் என்கிறார். பொதுமக்கள் முன்னிலையில் பேசுகிறார். அரசியல் நாகரீகம் இல்லாமல், கலைஞர் அவர்களை ஒருமையில் பேசுகிற அளவுக்கு, பெயரைச் சொல்லி பேசுகிற அளவுக்கு அநாகரிகமான அரசியலுக்கு அடித்தளமிட்டவர் மீண்டும் முதல்வராக வரவேண்டுமா.

சின்னஞ்சிறு பிள்ளையாக இருந்தாலும் தம்பி என்றும், அண்ணா என்றும், பெரியவர் என்றும், அய்யா என்றும் அழைக்கக் கூடிய நாகரீகம் உடைய கலைஞர் முதல்வராக வேண்டுமா. சாதாரண மக்களுக்கு சமூக நீதி வேண்டும் என்று போரடிக் கொண்டிருக்கிற கலைஞர் வேண்டுமா. அல்லது பழிவாங்குவதே ஒன்றே தன் செயல் என்ற அந்த அம்மையார் வேண்டுமா.

அந்த அம்மையார் 10 ஆண்டுகாலம் முதல் அமைச்சராக இருந்தார். முதல் ஐந்து ஆண்டுகாலம் அவர் செய்த சாதனை என்ன. ஒன்றே ஒன்றை சொல்லலாம். 30 வயதுக்கு மேலே உள்ளவரை வளர்ப்பு மகனாக தத்தெடுத்தார். அந்த வளர்ப்பு மகனுக்கு உலகமே வியக்கக் கூடிய வகையில் கோடிக்கணக்கான ரூபாய்களை கொட்டி திருமணம் செய்தார். அடுத்த ஐந்து ஆண்டுகாலம் மக்கள் அவருக்கு வாய்ப்பை கொடுத்தார்கள். அந்த ஐந்து ஆண்டுகாலம் அவர் செய்த சாதனை, தலைவர்களை கைது செய்து பழி வாங்கினார்.

கலைஞரை கைது செய்தார். மதிமுக பொதுச்செயலாளர் அண்ணன் வைகோ அவர்களை கைது செய்தார். இவர்களுக்காக குரல் கொடுத்த நெடுமாறனை கைது செய்தார். தமிழ்நாட்டில் யார் யார் எல்லாம் தமிழர்களுக்காக குரல் கொடுத்தார்களோ அவர்களையெல்லாம் கைது செய்தார். என்னையும் கைது செய்தவர்தான் அந்த அம்மையார். பாமக நிறுவனர் ராமதாசையும் கைது செய்தார். அவர் ஆட்சிக் காலத்தின் சாதனை வளர்ப்பு மகனின் திருமணம். எதிரணி தலைவர்களை கைது செய்து பழி வாங்கிய சாதனை.

கலைஞரின் சாதனைகளையும், எதிரணி சாதனைகளையும் ஒப்பிட்டு பாருங்கள். இந்த மேடையில் யார் யார் அமர்ந்திருக்கிறோம். தலைவர்களை அமர வைத்து அழகு பார்க்கிறார். இந்த ஜனநாயகத்தை எதிரணியில் பார்க்க முடியுமா.

சட்டமன்றத்திலே குடித்துவிட்ட உளறுகிறார் விஜயகாந்த் என்று சொன்னார் அம்மையார். ஊத்தி கொடுத்தாயே என்று பதிலுக்கு கேட்டார் விஜயகாந்த். இரண்டு பேரும் இன்று ஓரணியில் நிற்கிறார்கள். ஆனால் ஒரே மேடையில் நிற்க முடியவில்லை.

சொந்தக் கட்சி வேட்பாளரையே பொதுமக்கள் முன்னிலையில் சாத்து சாத்து என்று சாத்துகிறார் ஒருவர். அடிக்கிறார். அடித்துவிட்டு சொல்லுகிறார் தன் கையால் அடிப்பட்டவர்கள் மகாராஜாவாக ஆவார்களாம். அப்படி என்றால் தனக்கு தானே அடித்துக்கொள்ளலாமே. மகாராஜா ஆகலாமே. ஏன் மக்களிடத்திலே சென்று வாக்கு கேட்டு கெஞ்ச வேண்டும்.

கருப்பு எம்ஜிஆர். அடுத்த முதல் அமைச்சர் எல்லாவற்றுக்கும் சேர்த்து அந்த அம்மையார் ஆப்பு வைத்துவிட்டார். வெள்ளை எம்ஜிஆரே எனக்கு பிடிக்காது. கருப்பு எம்ஜிஆர் என்று சொல்லிக்கொண்டு ஓட்டுக் கேட்டு அலைகிறாய். எம்ஜிஆர் மருத்துவமனையில் படுத்துக்கொண்டிருக்கும்போது, ராஜீவ்காந்தியை சந்தித்து ஆட்சியை என்னிடத்திலே கொடுங்கள் என்று கேட்டவர் அம்ûமையார்.

ஆகவே யார் சட்டமன்ற உறுப்பினராக வேண்டும் என்பதை விட, யார் முதல்வராக வேண்டும் என்பதே முக்கியம். 6வது முறையாக கலைஞர் அவர்களை முதல் அமைச்சராக ஆக்க வேண்டும். இதற்கு விடுதலை சிறுத்தைகள் பாடுபடும். தோழமை கட்சிகளும் பாடுபடும் என்றார்.

No comments: