Friday, April 1, 2011

அரசியல் வாரிசுகள் நிறைந்த அசாம்.

வாரிசு அரசியல் அசாம் மாநிலத்தையும் விட்டுவைக்கவில்லை. முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு அதிக எண்ணிக்கையில் அரசியல் தலைவர்களின் வாரிசுகள் எதிர்வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடுகின்றனர். அரசியல் வாரிசுகள் 26 பேர் களத்தில் குதித்துள்ளனர். இதில் காங்கிரஸ் கட்சியின் அரசியல் வாரிசுகளின் எண்ணிக்கைதான் மிக அதிகமாகும்.

காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அரசியல் தலைவர்களின் மனைவி, மகன், மகள், மருமகள், சகோதரர் உள்பட 14 வாரிசுகளுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. இவர்களில் அரசியல் தலைவர்களின் அத்தை, மருமகன், மைத்துனன், மாமனார் ஆகியோரும் அடங்குவர்.

பாஜக ஒரே ஒரு அரசியல் வாரிசுக்கு மட்டுமே இடமளித்துள்ளது. கட்சியின் மறைந்த தலைவரின் மகனுக்கு வாய்ப்பு அளித்துள்ளது. ""வாரிசு அரசியலில் எங்களுக்கு நம்பிக்கையில்லை. இருப்பினும் வேட்பாளரின் திறமையைக் கருத்தில் கொண்டு அவருக்குள்ள செல்வாக்கை கணக்கில் கொண்டு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளதாக கட்சியின் மாநிலத் தலைவர் ராஜ்தீப் ராய் தெரிவித்தார். பாஜக-வின் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் பிமலங்ஷு ராயின் மகனான ராஜ்தீப், மருத்துவராகப் பணியாற்றிவருகிறார். இவருக்கு சில்சார் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. இவரை எதிர்த்து காங்கிரஸ் வேட்பாளர் சுஷ்மிதா தேவ் போட்டியிடுகிறார். இவர் முன்னாள் மத்திய அமைச்சரும் காங்கிரஸின் முக்கிய பிரமுகருமான சந்தோஷ் மோகன் தேவின் மகளாவார். இந்தத் தொகுதி சந்தோஷ் மோகன் தேவின் குடும்பத்துக்கு மிகவும் நெருங்கிய தொகுதியாகக் கருதப்படுகிறது. கடந்த முறை இத்தொகுதியிலிருந்து சந்தோஷ் மோகன் தேவின் மனைவி பிதிகா தேவ் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார்.

பராக் பள்ளத்தாக்கு தொகுதியில் மற்றொரு காங்கிரஸ் பிரமுகரின் மகனும் சட்டப்பேரவை உறுப்பினருமான ராகுல் ராய் மீண்டும் போட்டியிடுகிறார். இவரது தந்தை கெüதம் ராய்க்கும் சீட் அளிக்கப்பட்டுள்ளது. அவர் அல்காபூர் தொகுதியில் போட்டியிடுகிறார்.

அசாம் மாநில முன்னாள் முதல்வர் ஹிதேஸ்வர் சைக்கியாவின் மகன் தேவவிரத சைக்கியாவுக்கும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. இவர் நஸிரா தொகுதியிலிருந்து போட்டியிடுகிறார். இத்தொகுதியில் முன்னர் இவரது தாய் ஹெமோபுரோவா சைக்கியா போட்டியிட்டு தோல்வியைச் சந்தித்தார்.

அரசியல் தலைவர்களின் வாரிசுகளுக்குக் கண்ணை மூடிக்கொண்டு சீட் வழங்கப்படவில்லை. கீழ்நிலையிலிருந்து அவர்களது செயல்பாடு கவனிக்கப்பட்டு அவர்களது செயல்பாடுகளின் அடிப்படையில் சீட் வழங்கப்பட்டதாக அசாம் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் புவனேஸ்வர் காலிதா தெரிவித்தார். வெறுமனே அரசியல் தலைவர்களின் மகன், மகள், மனைவி என்ற ஒரே காரணத்துக்காக சீட் அளிக்கப்படவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

சுற்றுலா மற்றும் வனத்துறை அமைச்சர் ராக்கிபுல் ஹுசேன், தொடர்ந்து மூன்றாவது முறையாக சமகுரி தொகுதியில் போட்டியிடுகிறார். இவர் முன்னாள் காங்கிரஸ் தலைவர் நூருல் ஹசனின் மகனாவார்.

மூன்று சட்டப்பேரவை உறுப்பினர்களின் மகன்களுக்கும் காங்கிரஸ் கட்சி சீட் அளித்துள்ளது. மாநிலத்தின் முதலாவது பழங்குடியின பிரிவைச் சேர்ந்த அமைச்சர் ரூபம் குர்மி-யின் மகன் ருப்ஜியோதி குர்மி-க்கு சீட் அளிக்கப்பட்டுள்ளது. பைரேன் சிங் எங்டி-யின் மகன் கிலெங்டுன் எங்டி-க்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. இவர் போகஜான் தொகுதியில் போட்டியிடுகிறார். கிறிஸ்டோடும் டுடு, முன்னாள் அமைச்சர் கொசைகோனின் மகனாவார். இவர் டுடு தொகுதியில் போட்டியிடுகிறார்.

இவர்கள் தவிர, அசாம் ஐக்கிய ஜனநாயக முன்னணி வேட்பாளர் பத்ருதீன் அஜ்மலின் மகன் அப்துர் ரெஹ்மான், அசாம் கண பரிஷத் கட்சி (ஏஜிபி) ஆட்சியிலிருந்தபோது சட்டப்பேரவைத் தலைவராக இருந்த கணேஷ் குதும்-ஸின் மகன் சங்கர் ஜோதி குதும், கோபுர் தொகுதியில் சுயேச்சை வேட்பாளராகப் போட்டியிடுகிறார். காங்கிரஸ் கட்சியின் முன்னாள் அமைச்சர் ஜைருல் இஸ்லாம் மகன்கள் காலிப் இஸ்லாம் மற்றும் ஜாவித் இஸ்லாம் ஆகிய இருவரும் மன்காசர் தொகுதியில் ஒருவரையொருவர் எதிர்த்து போட்டியிடுகின்றனர். காலிப் இஸ்லாம் அசாம் ஐக்கிய ஜனநாயக முன்னணி வேட்பாளராகவும், ஜாவித் இஸ்லாம் சுயேச்சை வேட்பாளராகவும் போட்டியிடுகின்றனர்.

முன்னாள் அமைச்சரும் கோபுர் தொகுதி சட்டபேரவை உறுப்பினருமான ரிபுன் போரா-வின் மனைவி மோனிகா போரா, காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிடுகிறார். அமைச்சராக இருந்தபோது ரிபுன் போரா லஞ்சம் வாங்கியபோது சிபிஐ அதிகாரிகளிடம் பிடிபட்டார். இதனால் இவர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார். இப்போது அவரது மனைவிக்கு சீட் வழங்கப்பட்டுள்ளது.

குமாதி தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டப்பேரவை உறுப்பினும் அசாம் கண பரிஷத் கட்சியைச் சேர்ந்தவருமான புரோபின் கோகோய், உடல் நிலை சரியில்லாததால் இம்முறை போட்டியிடவில்லை.

மூன்று முன்னாள் காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினர்களின் விதவை மனைவிகளுக்கு சீட் வழங்கப்பட்டுள்ளது. அரசியல் தலைவர்களின் இரண்டு மருமகள்களுக்கும் சீட் அளிக்கப்பட்டுள்ளது. சட்டப்பேரவை உறுப்பினர் சஞ்சய் ராய் இப்போது போட்டியிடுகிறார். இவர் முன்னாள் காங்கிரஸ் எம்பி மணி குமார் சுபாவின் சகோதரராவார். கடந்த முறை சுயேச்சையாக போட்டியிட்ட இவருக்கு காங்கிரஸ் சார்பில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் கூட்டணியில் உள்ள போடோலாந்து மக்கள் முன்னணியின் தலைவர் ஹங்ரமா மொஹிலாரி-யின் மூன்று உறவினர்களும் களமிறங்கியுள்ளனர். இவரது மாமனார் பதேந்திரா தேர்தலில் முதல் முறையாகப் போட்டியிடுகிறார்

No comments: