Saturday, August 13, 2011

நிலம் அபகரிப்பு வழக்குகளை விசாரிக்க தமிழ்நாடு முழுவதும் 25 சிறப்பு கோர்ட்டுகள் ; தமிழக அரசு ஏற்பாடு.

நிலம் அபகரிப்பு வழக்குகளை  விசாரிக்க    தமிழ்நாடு முழுவதும்   25 சிறப்பு கோர்ட்டுகள்;    தமிழக அரசு ஏற்பாடு

தமிழ்நாடு முழுவதும் ஏராளமானவர்கள் தங்கள் நிலத்தை அரசியல் வாதிகள் அபகரித்துக் கொண்டதாக புகார் தெரிவித்தனர். இதையடுத்து அபகரிக்கப்பட்ட நிலங்களை மீட்டு உரியவர்களிடம் ஒப்படைப்போம் என்று முதல்-அமைச்சர் ஜெயலலிதா அறிவித்தார். அரசின் இந்த நடவடிக்கையை தொடர்ந்து நிலத்தை பறி கொடுத்தவர்கள் போலீஸ் நிலையங்களுக்கு துணிச்சலாக வந்து புகார் கொடுத்தனர்.

இந்த புகார்களை பெறுவதற்காக தமிழ்நாடு முழுவதும் 36 இடங்களில் சிறப்பு பிரிவுகள் தொடங்கப்பட்டன. இந்த பிரிவுகளில் இதுவரை 2400-க்கும் மேற்பட்டவர்கள் புகார் கொடுத்துள்ளனர். இந்த புகார் மனுக்களின் மீது தனிப்பிரிவு போலீசார் அதிரடி நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம், முன்னாள் எம்.எல்.ஏ. ப.ரங்கநாதன், ஜெ.அன்பழகன் எம்.எல்.ஏ. உள்பட பலர் கைது செய்யப்பட்டனர்.

இதுவரை பெறப்பட்டுள்ள 2400-க்கும் மேற்பட்ட நில அபகரிப்பு புகார்களில் உரிய ஆவணங்களுடன் தரப்படும் புகார்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்படுவதோடு வழக்குகளும் பதிவு செய்யப்படுகிறது. குற்றச்சாட்டு பதிவாகும் பகுதியில் உள்ள கோர்ட்டுகளில் இந்த வழக்கு விசாரணைகள் நடத்தப்பட வேண்டும். ஆனால் வழக்கமான கோர்ட்டுகளில் நில அபகரிப்பு வழக்கு விசாரணையையும் நடத்தினால் மிகவும் கால தாமதம் ஏற்படலாம் என்று கூறப்படுகிறது.

இதையடுத்து நில அபகரிப்பு வழக்கு விசாரணைகள் நடத்த சிறப்பு கோர்ட்டுக்கள் ஏற்படுத்தலாம் என்று பரிந்துரைக்கப்பட்டது. இந்த பரிந்துரையை ஏற்றுக் கொண்ட தமிழக அரசு, நில அபகரிப்பு வழக்குகளை மட்டும் விசாரிக்க பிரத்யேகமாக 25 சிறப்பு கோர்ட்டுக்கள் அமைக்கப்படும் என்று ஐகோர்ட்டு ஒப்புதலுடன் அறிவித்தது.

சிறப்பு கோர்ட்டுகள் உருவாக்க தமிழக அரசு ரூ.5.84 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. சென்னையில் மட்டும் 2 சிறப்பு கோர்ட்டுக்கள் செயல்படும். மற்ற 23 கோர்ட்டுக்கள் மற்ற மாவட்ட தலைநகரங்களில் இயங்கும். வேலூர், திருவண்ணாமலை, அரியலூர், திருவாரூர், நாகை, சிவகங்கை, திண்டுக்கல், கன்னியாகுமரி ஆகிய 8 மாவட்டங்களில் சிறப்பு கோர்ட்டுக்கள் அமைக்கப்படவில்லை.

இந்த மாவட்டங்களில் பதிவாகும் நிலஅபகரிப்பு புகார் விசாரணை பக்கத்து மாவட்ட சிறப்பு நீதிமன்றங்களில் சேர்த்து நடத்தப்படும். இந்த சிறப்பு கோர்ட்டுகள் ஒவ்வொன்றும் ஜுடீசியல் மாஜிஸ்திரேட்டு தலைமையில் செயல்படும். 7 அதிகாரிகள் ஒவ்வொரு கோர்ட்டு பணியையும் மேற்கொள்வார்கள்.

ஓராண்டுக்கு இவர்களை தமிழக அரசு தற்காலிகமாக பணியில் அமர்த்தியுள்ளது. சிறப்பு கோர்ட்டுகளுக்கு எதிர்கால தேவைக்கு ஏற்ப ஊழியர்களை நியமிக்க தமிழக அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. இந்த கோர்ட்டுக்களை விரைவாக அமைத்து பணிகளை தொடங்க ஏற்பாடுகள் தொடங்கப்பட்டுள்ளன.

மாவட்ட முதன்மை நீதிபதிகளுடன் கலந்து ஆலோசித்து சிறப்பு கோர்ட்டுகளுக்கு தேவையான உள் கட்டமைப்பு வசதிகளை செய்து கொடுக்க மாவட்ட கலெக்டர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் பொதுப்பணித்துறை செயலாளர், டி.ஜி.பி. ஆகி யோரும் கலெக்டர்களிடம் பேசி சிறப்பு கோர்ட்டுக்களை உருவாக்க ஒருங்கிணைப்பு நடவடிக்கைகளை செய்ய அரசு அறிவுறுத்தியுள்ளது. எனவே நிலத்தை பறி கொடுத்தவர்களுக்கு கோர்ட்டு நடவடிக்கை மூலம் அவர்களது நிலம் விரைவில் திரும்ப கிடைக்கும் சூழ்நிலை ஏற்படுத்தப்பட்டுள்ளது.

No comments: