Saturday, August 13, 2011

கட்டுமான தொழிலில் போட்டி : தமிழகத்துக்கு படையெடுக்கும் வடமாநில தொழிலாளர்கள்.

கட்டுமான தொழிலில் போட்டி: தமிழகத்துக்கு படையெடுக்கும் வடமாநில தொழிலாளர்கள்; வேலைவாய்ப்பை இழக்கும் உள்ளூர் வாசிகள்

கட்டுமான தொழிலில் கைதேர்ந்தவர்கள் தமிழர்கள். நேர்த்தியான வேலை, கலை நுணுக்கம் ஆகியவற்றால் கட்டுமான தொழிலில் தனி முத்திரை பதித்தார்கள். இப்போது அந்த நிலை கொஞ்சம் கொஞ்சமாக மாறி வருகிறது.

கட்டுமான வேலைக்கு தொழிலாளர்கள் கிடைப்பதே அரிதாகி விட்டது. நாட்டு முன்னேற்றம், தொழில் வளர்ச்சி, மக்களின் வாழ்க்கை தரம், பணப்புழக்கம் காரணமாக கட்டுமான பணிகள் அதிக அளவில் நடக்கிறது. இந்த தொழிலுக்கு தொழிலாளர்கள் அதிக அளவில் தேவைப்படுகிறார்கள். இதற்காக ஒரிசா, பீகார், உத்தரபிரதேசம் உள்ளிட்ட வடமாநிலங்களில் இருந்து ஏராளமான தொழிலாளர்கள் அழைத்து வரப்படுகிறார்கள்.

சென்னையில் மிகப்பெரிய கட்டிடங்கள் எந்த பக்கம் கட்டினாலும் அங்கு வட மாநில தொழிலாளர்கள் கட்டுமான தொழிலில் ஈடுபட்டுள்ளதை பார்க்கலாம். இதேபோல சென்னை மெட்ரோ ரெயில், பெரிய பாலங்கள் கட்டுவது போன்ற பணிகளிலும் வெளிமாநில தொழிலாளர்கள்தான் ஈடுபட்டுள்ளனர்.

சென்னை மட்டுமின்றி கோவை, திருச்சி, மதுரை போன்ற நகரங்களுக்கும் வட மாநில தொழிலாளர்கள் படையெடுத்து வருகிறார்கள். போகிற போக்கை பார்த்தால் நம்மூர் தொழிலாளர்களின் வேலைவாய்ப்பு பறி போய்விடுமோ? என்ற அச்சம் உண்மையான தொழிலாளர்கள் மனதில் எழுந்துள்ளது.

இந்த தலைகீழ் மாற்றத்துக்கு என்ன காரணம்?

ஒரு காலத்தில் மேஸ்திரி, கொத்தனார்கள் முழு திறனையும் காட்டி உழைத்தார்கள். சம்பாதித்தார்கள். அந்த உழைப்புக்கு தனி மரியாதை இருந்தது. இன்று அப்படி இல்லை என்பதுதான் பரவலான குற்றச்சாட்டாக உள்ளது.

காலை 9 மணிக்கு பிறகே வேலையை தொடங்குகிறார்கள். மாலை 5 மணிக்கு அலுவலக வேலை போல் வேலையை முடித்து விட்டு கிளம்பி விடுகிறார்கள். எதிர்பார்த்த அளவுக்கு வேலை நடப்பதில்லை. ஆனால் சம்பளம் மட்டும் எகிறுகிறது.

ஒரு கொத்தனார் சம்பளம் ரூ.550 மதல் 600 வரை உள்ளது. சித்தாள் கூலி ரூ.250 முதல் 300 வரை உள்ளது. வீட்டை கட்டிப்பார்... கல்யாணம் பண்ணிப்பார்... என்று முன்னோர்கள் எந்த சிரமத்தை நினைத்து சொன்னார்களோ? வீடு கட்டுபவர்கள் பெரும் பாடுபடுகிறார்கள்.

நேரில் தொழிலாளர்களை அழைத்து இஷ்டம்போல் வீட்டை கட்டலாம் என்று நினைப்பவர்கள் மிகவும் கஷ்டப்படுவார்கள். எனவே காண்டிராக்டு முறையில் தொழிலாளர்களை நியமித்தார்கள். சதுர அடிக்கு ரூ.450 வரை கொடுக்கிறார்கள்.

அதிலும் இப்போது பிரச்சினை ஏற்படுகிறது. கட்டுமான பொருட்கள் தயாராக இருந்தால், தொழிலாளர்கள் வேலைக்கு வர மாட்டார்கள். தொழிலாளர்கள் வந்தால் கட்டுமான பொருட்கள் இருக்காது. இப்படிப்பட்ட சிரமத்தை தவிர்க்க வீடு கட்டுவது முழுவதையும் காண்டிராக்டு முறையில் ஒப்படைத்து விடுகிறார்கள்.

சதுர அடிக்கு ரூ.1200 முதல் 1300 வரை கட்டணம் வாங்குகிறார்கள். பெரிய கட்டிடங்கள், பல அடுக்குமாடி குடியிருப்புகளை பெரிய நிறுவனங்கள், பில்டர்கள் கட்டுகிறார்கள். குறித்த காலத்துக்குள் கட்டி முடிப்பது, செலவினங்களை குறைப்பது மூலமே லாபம் ஈட்ட முடியும்.

வடமாநிலங்களில் இருந்து வரும் தொழிலாளர்களை குடிசை கட்டி தங்க வைத்து 3 வேளை உணவு கொடுத்தால் போதும். காலை 7 மணிக்கெல்லாம் வேலையில் இறங்கி விடுகிறார்கள். மாலையில் 6 மணிக்கு பிறகும் வேலை செய்கிறார்கள். சம்பளம் நம்மூர் சம்பளத்தைவிட பாதிதான்.

கல் உடைப்பது, கம்பி வளைப்பது, மண்தோண்டி போடுதல் என்று எதையும் யோசிக்காமல் செய்து விடுகிறார்கள். தொழிலாளர்கள் வரவில்லை என்ற பிரச்சினை இல்லாமல் தடை இல்லாமல் வேலையும் நடக்கிறது. இதனால் கட்டுமான ஒப்பந்ததாரர்கள் வெளிமாநில கூலி தொழிலாளர்களையே விரும்புகிறார்கள்.

முன்பு சேலம், விழுப்புரம், தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களில் இருந்து ஏராளமான தொழிலாளர்கள் சென்னைக்கு வந்தார்கள். இப்போது உள்ளூரிலேயே 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தில் வேலை செய்தால் தினக்கூலி ரூ.100, அரிசி இலவசம், குடும்பத்தோடு இருக்கும் திருப்தி கிடைப்பதால் வெளியூர் வேலையை விரும்புவதில்லை. சம்பளமும் அதிகம் வேண்டும் வேலையும் கஷ்டம் இல்லாமல் இருக்கவேண்டும் என்ற மனோநிலையும் அதிகரித்து வருகிறது. இதனால் வெளிநாட்டுக்கு செல்லும் ஆர்வம் அதிகரித்து வருகிறது.

ஆனால் வடமாநில தொழிலாளர்களோ தினமும் வேலை கிடைக்கிறது. சாப்பாடு செலவு இல்லை. ஓரளவு சம்பாதிக்க முடிகிறது. வெளிநாடு சென்றாலும் இவ்வளவுதான் சம்பாதிக்க முடியும் என்று நினைக்கிறார்கள்.

எனவே சென்னை, பெங்களூர், மும்பை, ஐதராபாத் ஆகிய பெருநகரங்களுக்கு வட மாநில தொழிலாளர்கள் படையெடுக்கிறார்கள்.

No comments: