Wednesday, May 4, 2011

பின்லேடனுக்கு அடைக்கலம் கொடுத்ததாக அமெரிக்கா புகார் : பாகிஸ்தானுக்கு நெருக்கடி ; தீவிரவாத இயக்கங்களும் மிரட்டுகின்றன.

பின்லேடனுக்கு அடைக்கலம் கொடுத்ததாக அமெரிக்கா புகார்: பாகிஸ்தானுக்கு நெருக்கடி; தீவிரவாத இயக்கங்களும் மிரட்டுகின்றன

பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தை அடுத்த அபோதாபாத் நகரில் உள்ள பாதுகாப்பு மிகுந்த ஒரு பங்களா வீட்டில் பின்லேடன் பதுங்கி இருந்தார். அந்த வீட்டிற்குள் அமெரிக்க ராணுவ வீரர்கள் கடந்த ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவில் அதிரடியாக புகுந்து பின்லேடனை சுட்டுக்கொன்றனர்.

இந்த தாக்குதலில் அங்கிருந்த மேலும் 4 பேரும் பலியானார்கள். பின்லேடனின் பாதுகாவலர்கள் உள்பட சிலர் உயிருடன் பிடிபட்டனர். பாகிஸ்தான் நாட்டுக்குள் அமெரிக்க ராணுவம் நடத்திய இந்த அதிபயங்கர தாக்குதல் பாகிஸ்தான் அரசுக்கே தெரியாது என்று கூறப்படுகிறது.

பின்லேடன் தங்கி இருந்து வீட்டுக்கு சற்று தொலைவில்தான் பாகிஸ்தான் ராணுவ அகாடமி உள்ளது. பாகிஸ்தான் ராணுவம் முகாமிட்டுள்ள அபோதாபாத் நகரில் நீண்ட காலமாக பின்லேடன் தங்கி இருந்தது அமெரிக்காவுக்கு பெரும் அதிர்ச்சியையும், ஆச்சரியத்தையும் ஏற்படுத்தி உள்ளது. சர்வதேச அளவில் நடைபெறும் தீவிரவாதத்துக்கு எதிரான போரிலும், பின்லேடனை ஒழிக்கும் நடவடிக்கையிலும் அமெரிக்காவுடன் இணைந்து செயல்படுவதாக பாகிஸ்தான் பல ஆண்டுகளாக கூறி வருகிறது.

அப்படி இருக்கும் போது பாகிஸ்தானிலேயே அதுவும் ராணுவ தளம் உள்ள நகரில் பின்லேடன் தங்கி இருந்தது, பாகிஸ்தான் அரசுக்கு தெரியாமல் இருந்திருக்க முடியாது என்றும், பாகிஸ்தான் அடைக்கலம் கொடுத்து இருக்கலாம் என்றும் அமெரிக்கா கருதுகிறது. தீவிரவாதத்துக்கு எதிரான போரில் இணைந்து செயல்படுவதாக கூறிக்கொண்டு, பின்லேடனுக்கு பாகிஸ்தான் பாதுகாப்பு அளித்ததா? என்ற கேள்வி அமெரிக்கர்கள் மனதில் எழுந்து இருக்கிறது.

தீவிரவாதத்துக்கு எதிரான போரில் பாகிஸ்தான் இரட்டை வேடம் போடுவதாகவே அவர்களில் பலர் கருதுகிறார்கள். இதனால் இரு நாடுகளுக்கும் இடையே கருத்து வேறுபாடு உருவாகி, உறவில் விரிசல் ஏற்பட்டு உள்ளது. பின்லேடனுக்கு பாகிஸ்தான் அரசின் ஆதரவு கிடைத்தது பற்றியும், அவருக்கு உதவிய அதிகாரிகள் பற்றியும் விசாரணை நடத்தப்படும் என்று அமெரிக்கா அறிவித்து உள்ளது. இதுபற்றி தீவிரவாதத்துக்கு எதிரான அமெரிக்க தேசிய பாதுகாப்பு துணை ஆலோசகர் ஜான் பிரென்னன் நிருபர்களிடம் கூறியதாவது:-

பாகிஸ்தானில் நீண்ட காலம் பின்லேடன் தங்கி இருந்து இருக்கிறார் என்றால் அவருக்கு அந்த நாட்டின் ஆதரவு இல்லாமல் இருந்திருக்க முடியாது. அவருக்கு அரசாங்க அடிப்படையில் பாகிஸ்தானுக்குள் ஆதரவு கிடைத்து இருக்கக்கூடும். இதுபற்றி எல்லாம் ïகம் செய்யப்போவது இல்லை. பின்லேடன் தலைநகர் இஸ்லாமாபாத்துக்கு மிக அருகில் தங்கி இருந்து இருக்கிறார். இது பல கேள்விகளை எழுப்புகிறது. இது தொடர்பாக நாங்கள் பாகிஸ்தான் அரசாங்கத்துடன் பேசி வருகிறோம்.

பின்லேடனுக்கு உதவிய அதிகாரிகள் யார் என்பது பற்றி விசாரணை நடத்தப்படும். பாகிஸ்தான் அரசாங்கத்தில் பலர் இருக்கிறார்கள். அவருக்கு எந்த மாதிரியான உதவிகள் கிடைத்தன. அரசாங்கத்தில் எந்த மாதிரியானவர்கள் உதவினார்கள் என்பதை எல்லாம் விசாரிக்க இருக்கிறோம். பின்லேடன் சுட்டுக்கொல்லப்பட்டதும் அமெரிக்க அதிகாரிகள் பலர் பாகிஸ்தான் அதிகாரிகளை தொடர்பு கொண்டு வருகிறார்கள். அப்போது அவருக்கு எப்படிப்பட்ட உதவிகள் கிடைத்தன என்பது பற்றிய தகவல்கள் தெரியவரும்.

இவ்வாறு ஜான் பிரென்னன் தெரிவித்தார்.

தீவிரவாதத்துக்கு எதிரான போரில் பாகிஸ்தான் இரட்டைவேடம் போடுகிறது என்று அமெரிக்க செனட்டர்கள் குற்றம் சாட்டினார்கள். செனட்டர் சூசன் காலின்ஸ் கூறுகையில், "தலைநகருக்கு மிக அருகிலேயே பின்லேடனை வைத்துக்கொண்டு அவர் இருக்கும் இடம் தெரியாது என்று பாகிஸ்தான் கூறி வந்து உள்ளது. இதன் மூலம் அது உறுதியற்ற நண்பர் என்பது உறுதியாகிறது'' என்று குறிப்பிட்டார்.

பின்லேடன் பாகிஸ்தானில் தங்கி இருந்தது அந்த நாட்டின் புலனாய்வு துறையினருக்கு தெரிந்திருக்க வேண்டும் ஜோ லீபர்மேன் என்ற செனட்டர் கூறினார். தீவிரவாதத்துக்கு எதிரான போரில் பாகிஸ்தான் உண்மையிலேயே அமெரிக்காவுடன் இணைந்து செயல்படுகிறதா? என்பதை உறுதிப்படுத்த வேண்டும் என்றும், அதே சமயம் பின்லேடன் அங்கு தங்கி இருந்தது பற்றி உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என்றும், இல்லையேல் அந்த நாட்டுக்கு வழங்க முடிவு செய்துள்ள 15 ஆயிரம் கோடி நிதி உதவியை அமெரிக்க அரசு ரத்து செய்ய வேண்டும் என்றும் பிராங்க் லடென்பெர்க் என்ற செனட்டர் வற்புறுத்தி உள்ளார்.

அமெரிக்காவுக்கான பாகிஸ்தான் தூதர் உசேன் ஹக்கானியும் பின்லேடனுக்கு பாகிஸ்தானில் ஆதரவு இருந்தது என்று தெரிவித்து உள்ளார். அவர் நிருபர்களிடம் கூறியதாவது:- பின்லேடனுக்கு அரசாங்கத்திடம் இருந்து ஆதரவு கிடைத்ததா? பாகிஸ்தான் மக்களிடம் இருந்து கிடைத்ததா? என்பது தான் கேள்வி. பின்லேடனை போன்ற நம்பிக்கையாளர்கள் பாகிஸ்தானில் நிறைய பேர் இருக்கிறார்கள். அவர்கள் தான் பின்லேடனை பாதுகாத்து வந்தனர்.

ஆனால் அவர் தங்கள் மண்ணில் தான் இருக்கிறார் என்பது பாகிஸ்தான் அரசுக்கு தெரியாமல் இருந்தது. பின்லேடன் பாகிஸ்தானில் தங்கி இருப்பது முன்பே எங்களுக்கு தெரிந்து இருக்குமானால் நாங்கள் முன்பாகவே நடவடிக்கை எடுத்து இருப்போம். பின்லேடன் பாகிஸ்தானில் தங்கி இருந்தது எப்படி உளவுத்துறைக்கு தெரியாமல் போனது என்பது குறித்து அரசாங்கம் விசாரணை நடத்த இருக்கிறது.

இதில் உளவுத்துறையினர் தோற்று இருந்தால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் இவ்வாறு தூதர் உசேன் ஹக்கானி தெரிவித்தார். தீவிரவாதிகளின் அச்சுறுத்தல் காரணமாக பாகிஸ்தானில் உள்ள தூதரகங்களை மூட அமெரிக்கா உத்தரவிட்டு உள்ளது. அதன்படி தலைநகர் இஸ்லாமாபாத்தில் உள்ள தூதரகம் மற்றும் பெஷாவர், லாகூர், கராச்சி ஆகிய நகரங்களில் உள்ள துணைத்தூதரகங்கள் மூடப்படுகின்றன. பாஸ்போர்ட், விசா உள்ளிட்ட பொதுமக்களுக்கான வழக்கமான பணிகள் எதுவும் நடைபெறாது.

அதே நேரத்தில், பாகிஸ்தானில் உள்ள அமெரிக்கர்களுக்கு தேவையான அவசர கால சேவைகள் நடைபெறும். இந்த தகவலை, பாகிஸ்தானில் உள்ள அமெரிக்க தூதரக செய்தி தொடர்பாளர் ஆல்பர்டோ ரோட்ரிக்ஸ் தெரிவித்தார். இதற்கிடையே, பின்லேடன் கொல்லப்பட்டது அல்கொய்தா இயக்கத்தினர் இடையேயும், பாகிஸ்தானில் உள்ள தலிபான்கள் இடையேயும் மிகுந்த ஆத்திரத்தையும் கோபத்தையும் ஏற்படுத்தி உள்ளது. அவர்கள் அமெரிக்காவையும், பாகிஸ்தானையும் பழிக்கு பழி வாங்க திட்டமிட்டு உள்ளனர்.

பின்லேடன் கொலைக்காக, அதிபர் சர்தாரி உள்ளிட்ட பாகிஸ்தான் தலைவர்களை கொல்வோம் என்று தாரிக்-இ- தலிபான் என்ற இயக்கம் மிரட்டல் விடுத்து உள்ளது. அமெரிக்காவுக்கு எதிராக தாக்குதல் நடத்தப்போவதாகவும் எச்சரிக்கை விடுத்து இருக்கிறது. பின்லேடன் படுகொலை சம்பவத்தை தொடர்ந்து அமெரிக்காவின் அவநம்பிக்கையை சம்பாதித்து உள்ள பாகிஸ்தானுக்கு, தீவிரவாதிகளிடம் இருந்தும் மிரட்டல் வந்து இருப்பதால் பாகிஸ்தானுக்கு நெருக்கடியான சூழ்நிலை ஏற்பட்டு உள்ளது. இதனால், அமெரிக்காவை சமாதானப்படுத்தும் முயற்சியில் பாகிஸ்தான் அரசு ஈடுபட்டு இருக்கிறது.

அதே சமயம், தீவிரவாதிகளிடம் இருந்து வந்துள்ள மிரட்டலை சமாளிப்பதற்காக நடவடிக்கைகள் பற்றியும் தீவிரமாக ஆலோசித்து வருகிறது.

No comments: