Wednesday, May 4, 2011

டீசல் லிட்டருக்கு ரூ. 6 அதிகரிக்கிறது;பெட்ரோல் விலை ரூ. 4 உயருகிறது ; சமையல் கியாஸ் விலையும் கூடுகிறது.


5 மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தல்கள் முடிந்ததும் டீசல் விலையை ரூ 6 உயர்த்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

பெட்ரோலின் விலையையும் அதே அளவு உயர்த்த அரசு பரிசீலித்து வருகிறது.

டீசல் விலையை உயர்த்துவது தொடர்பாக பரிசீலிக்க மே 11-ம் தேதி நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி தலைமையிலான அமைச்சர்கள் குழுவின் கூட்டம் நடைபெற உள்ளதாக அரசு உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

பெட்ரோல் விலை நிர்ணயம் செய்வது அரசின் கட்டுப்பாட்டில் இல்லை. எனினும் அதன் விலையையும் ரூ 3 முதல் 6 வரை உயர்த்த எண்ணெய் நிறுவனங்களுக்கு அரசு அனுமதி அளிக்கும் என்று தெரிகிறது. மே 10-ம் தேதி கடைசிகட்ட வாக்குப்பதிவு முடிவடைந்ததும் உடனடியாக இந்த விலைகள் உயர்த்தப்படலாம்.

2011-12ம் ஆண்டுக்கான நிதிக் கொள்கையை ரிசர்வ் வங்கி மும்பையில் வெளியிட்டது. அதில் பெட்ரோலிய பொருட்கள் மற்றும் உரங்களின் விலையை உயர்த்த வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு ஜூன் மாதம் உலகச் சந்தையில் கச்சா எண்ணை விலை பீப்பாய்க்கு 72 டாலராக இருந்தபோது டீசல் விலை உயர்த்தப்பட்டது. அதன் பிறகு இதுவரை டீசல் விலை உயர்த்தப்படவில்லை. அதே போல் சமையல் எரிவாயு, மண்எண்ணை, பெட்ரோல் விலையும் உயர்த்தப்படவில்லை.

இதனால் எண்ணை நிறுவனங்களுக்கு நடப்பு நிதியாண்டில் ரூ. 1 லட்சத்து 80 ஆயிரம் கோடி அளவுக்கு இழப்பு ஏற்படக்கூடும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. தற்போது டீசல் விற்பனையில் எண்ணை நிறுவனங்களுக்கு லிட்டருக்கு 18 ரூபாய் இழப்பு ஏற்படுகிறது.

எனவே இதில் மூன்றில் ஒரு பங்காக அதாவது லிட்டருக்கு 6 ரூபாய் உயர்த்தப்படும் என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன. பெட்ரோல் விலையில் லிட்டருக்கு ரூ. 8.50 இழப்பு ஏற்படுகிறது. இதை 2 அல்லது 3 கட்ட விலை உயர்வின் மூலம் ஈடு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.

எனவே பெட்ரோல் விலை முதல் கட்டமாக லிட்டருக்கு ரூ. 4 முதல் ரூ. 4.50 வரை உயர்த்தப்படலாம் என்று தெரிகிறது.

மேலும் சமையல் கியாஸ் விற்பனையில் சிலிண்டருக்கு 315 ரூபாய் 86 பைசா இழப்பு ஏற்படுகிறது. மண்எண்ணை விற்பனையில் லிட்டருக்கு 26 ரூபாய் 98 பைசா இழப்பு ஏற்படுகிறது.

எனவே சமையல் கியாஸ் விலையும் உயர்த்தப்படுகிறது. மண்எண்ணை விலை மட்டும் உயராது.

மேற்கு வங்காள தேர்தல் முடிந்த பிறகு பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு ஆகிய பொருட்களின் விலை உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மே 13-ம் தேதி வாக்கு எண்ணிக்கை முடிவுகள் அறிவிக்கப்படுவதற்கு முன்பே விலைகளை உயர்த்தும் விவகாரம் தொடர்பாக தேர்தல் ஆணையத்துடன் பெட்ரோலிய அமைச்சக அதிகாரிகள் நேற்று ஆலோசனை நடத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன

No comments: