Tuesday, May 3, 2011

பின்லேடனை அமெரிக்கா கொன்றது போல தாவூத்தை நம்மால் அழிக்க முடியாது - ப.சிதம்பரம்.


ஒசாமா பின்லேடனை அமெரிக்கா கொன்றது போல நம்மால் பாகிஸ்தானுக்குள் போய் தாவூத் இப்ராகிமை அழிக்க முடியாது என்று மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் கூறியுள்ளார்.

அமெரிக்காவால் பாகிஸ்தானுக்குள் புகுந்து உலகப் பெரும் தீவிரவாதியான பின்லேடனை சுட்டுக் கொன்றது போல இந்தியாவும் ஏன் பாகிஸ்தானில் பதுங்கியிருக்கும் தாவூத் இப்ராகிம் போன்ற தீவிரவாதிகளை அழிக்கக் கூடாது, அழிக்க முடியாது என்ற கேள்வி இந்தியர்கள் மனதில் எழுந்துள்ளது.

உலகைப் பொறுத்தவரை பின்லேடன் மிகப் பெரிய தீவிரவாதியாக இருக்கலாம். ஆனால் இந்தியாவைப் பொறுத்தவரை தாவூத் இப்ராகிம்தான் இந்தியாவின் பின்லேடனாக இருக்கிறான்.

பின்லேடன் மேற்கத்திய நாடுகளைத்தான் குறிப்பாக அமெரிக்காவைத்தான் குறி வைத்து தாக்கி வந்தான். இந்தியா அவனது இலக்காகவே இல்லை. இந்தியாவுக்கு எதிராக அல் கொய்தா அமைப்பு பெரிய அளவில் எதையும் செய்ததில்லை.

அதேசமயம் லஷ்கர் இ தொய்பா அமைப்புதான் இந்தியாவைக் குறி வைத்துத் தொடர்ந்து தாக்கி வருகிறது. தாவூத் இப்ராகிம் போன்றவர்கள்தான் இந்தியாவை தொடர்ந்து குத்திக் குதறிக் கொண்டிருக்கின்றனர். எனவே பின்லேடனின் சாவால் இந்தியாவுக்கு லாபமோ, நஷ்டமோ கிடையாது. மாறாக தாவூத் இப்ராகிம், ஹபீஸ் சயீத் போன்றோர்தான் நமக்கு உண்மையான மிரட்டல். இன்னும் வெளிப்படையாக சொல்வதானால், இந்தியாவுக்கான தீவிரவாத அபாயம் சற்றும் குறையவில்லை, அது அழிக்கப்படவும் இல்லை.

பின்லேடனின் மரணம் அமெரிக்காவுக்கு வேண்டுமானால் உற்சாகத்தைக் கொடுக்கலாம். ஆனால் இந்தியாவுக்கு இதனால் பலன் ஏதும் இல்லை.

பின்லேடனைப் போலவே தாவூத் இப்ராகிமும் பாகிஸ்தானில்தான் புகலிடம் அடைந்து தங்கியுள்ளான். அவனை பாகிஸ்தானின் ஐஎஸ்ஐதான் தொடர்ந்து காத்து ஆதரித்து வருகிறது. பாகிஸ்தான் அரசின் ஆதரவும் கூட அவனுக்கு உள்ளது. இது இந்தியாவுக்கு மட்டுமல்ல அமெரிக்காவுக்குமே கூட நன்றாகத் தெரியும்.

அதேசமயம், பின்லேடனை தூள் தூளாக்க அமெரிக்க தலைவர்கள் எடுத்த ஆணித்தரமான நடவடிக்கைகளில் ஒரு பங்கைக் கூட, தாவூத்தை வீழ்த்த இந்தியத் தலைவர்கள் எடுக்கவில்லை, எடுக்க முடியவில்லை என்பதுதான் உண்மை.

இந்த விஷயத்தில் இந்தியாவின் இயலாமையை ஒத்துக் கொள்ளும் வகையில் மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் கருத்து தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில்,

பாகிஸ்தானுக்குள் அமெரிக்க ராணுவத்தால் செயல்பட முடிகிறது. பாகிஸ்தான் அரசுக்குத் தெரிந்தே இதுபோல அவர்களால் செயல்பட முடிகிறது. அமெரிக்க உளவாளிகள் பெருமளவில் பாகிஸ்தானில் உள்ளனர். பாகிஸ்தான் அரசுக்கும் இது தெரியும்.

பின்லேடனை கொல்ல அமெரிக்காவால் முடிந்தது. பாகிஸ்தானுக்குள் போய், பாகிஸ்தான் அதிகாரிகளுக்குத் தெரிந்தோ, தெரியாமலோ இதை செய்ய அவர்களால் முடிந்தது.

ஆனால் இந்தியாவுக்கு அப்படி ஒரு நிலை பாகிஸ்தானில் இல்லை. இந்தியப் பாதுகாப்புப் படையினர் பாகிஸ்தானில் செயல்படவில்லை. நமக்கு அங்கு அமெரிக்காவைப் போல பெருமளவில் உளவாளிகள் இல்லை. எனவே தாவூத் இப்ராகிமைக் கொல்வது என்பது மிகக் கடினமானது. இதுதான் உண்மை, இதை நான் ஏற்றுத்தான் ஆக வேண்டும்.

அமெரிக்காவால் முடிந்தது, ஆனால் நம்மால் முடியாது என்றார் ப.சிதம்பரம்.

thatstamil.oneindia.in

No comments: