Tuesday, June 7, 2011

தமிழ்நாட்டில் இனிமேல் எந்தக் காலத்திலும் மேல்-சபை வராது : ஜெயலலிதா பேச்சு.


தமிழக சட்டசபையில் மேல்-சபையை ரத்து செய்யும் தீர்மானத்தை முன்மொழிந்து முதல்-அமைச்சர் ஜெயலலிதா பேசியதாவது:-

தமிழ்நாடு மாநிலத்தில் சட்டமன்ற மேலவை ஒன்றைத் தோற்றுவிக்கலாம் என்று எடுக்கப்பட்ட முடிவு இச்சட்டப் பேரவையால் திரும்பப் பெறவேண்டும் என்றும், இந்த முடிவிற்கு செயல்வடிவம் கொடுக்கும் வகையில், நாடாளுமன்றம் தேவையெனக் கருதும் அளவிற்கு, இந்திய அரசமைப்புச் சட்டம் மற்றும் ஏனைய சட்டங்களிலும் திருத்தம் கொண்டு வருவதற்கு உரிய அவசியமான விதிக்கூறுகளை உள்ளடக்கிய தேவையான சட்டத்தினை இயற்ற வேண்டும் என்றும் இப்பேரவை தீர்மானிக்கிறது.

அ.தி.மு.க.வை தோற்றுவித்தவரும், முன்னாள் முதல்-அமைச்சருமான எம்.ஜி.ஆர். அரசால் தமிழக சட்டமன்ற மேலவையை நீக்கும் தீர்மானம் 1986 ஆம் ஆண்டு இந்தச் சட்டமன்றப் பேரவையில் கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்பட்டது.

பின்னர், இந்திய நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் இத்தீர்மானம் ஏற்கப்பட்டு, தமிழ்நாடு சட்டமன்ற மேலவையை நீக்கும் சட்டம் 30.8.1986 அன்று அங்கீகரிக்கப்பட்டு 1.11.1986 முதல் அமல்படுத்தப்பட்டது.

எம்.ஜி.ஆரால் கொண்டு வரப்பட்டு, நிறைவேற்றப்பட்ட இந்தச் சட்டத்திற்கு எதிராக, 1989 ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த தி.மு.க. அரசு சட்டமன்ற மேலவையை மீண்டும் தோற்றுவிப்பதற்கான தீர்மானத்தினை 20.2.1989 அன்று இந்த அவையில் நிறைவேற்றியது.

1991 ஆம் ஆண்டு அ.தி. மு.க. ஆட்சிக்கு வந்தவுடன், புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரால் ஏற்கெனவே நீக்கம் செய்யப்பட்ட சட்டமன்ற மேலவையை மீண்டும் தோற்றுவிக்க வேண்டாம் என முடிவெடுத்து, அதற்கான தீர்மானத்தினை 4.10.1991 அன்று இதே சட்டமன்றப் பேரவையில் நிறைவேற்றியது.

1996 ஆம் ஆண்டு ஆட்சிப் பொறுப்பை ஏற்ற தி.மு.க. அரசு, சட்டமன்ற மேலவையை உருவாக்க வேண்டும் என்ற அளவில் மீண்டும் ஒரு தீர்மானத்தினை 26.7.1996 அன்று நிறைவேற்றியது.

மீண்டும் 2001 ஆம் ஆண்டு ஆட்சிப் பொறுப்பினை ஏற்ற அ.தி.மு.க. அரசு, சட்டமன்ற மேலவைத் தேவையில்லை என்ற அளவில் ஒரு தீர்மானத்தை 12.9.2001 அன்று இயற்றியது.

இதனையடுத்து, 2006 ஆம் ஆண்டு பொறுப்பேற்ற மைனாரிட்டி தி.மு.க. அரசு, நான்கு ஆண்டு காலம் கழித்து 12.4.2010 அன்று சட்டமன்ற மேலவையை தோற்றுவிக்கும் தீர்மானத்தை கொண்டு வந்து நிறைவேற்றியதோடு மட்டுமல்லாமல், மத்தியில் தனக்குள்ள செல்வாக்கைப் பயன்படுத்தி, இதற்கான சட்டத்தினையும் இயற்றியது.

இருப்பினும், சட்டமன்ற மேலவைக்கான தொகுதி வரையறைகள் இந்திய அரசியலமைப்புச் சட்டத்திற்கு முரணாக உள்ளது என்று தெரிவித்து தொடுக்கப்பட்ட வழக்கில் உச்சநீதிமன்றம் தடையாணை பிறப்பித்துள்ளதால், சட்டமன்ற மேலவைக்கான தேர்தல்கள் நடைபெறாத சூழ்நிலை தற்போது உள்ளது.

சட்டமன்ற மேலவை தேவை என்று 2010 ஆம் ஆண்டு தீர்மானத்தை முன்மொழிந்து பேசிய முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி, அரசியல் அறிஞர்கள், சான்றோர்கள், ஆசிரியர்கள், கல்வியாளர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், தொழிலாளர்களுடைய பிரதிநிதிகள், அலுவலர்கள், வழக்கறிஞர்கள், மருத்துவர்கள், தொண்டு நிறுவனப் பிரதிநிதிகள், ... இத்தகைய அமைப்புகளைச் சார்ந்தவர்களின் பிரதிநிதிகள் இடம்பெற்று அரிய ஆலோசனைகளைக் கூறத்தக்க வகையில் ... சட்டமன்ற மேலவையை விரைவில் கொண்டு வருவோம் என்ற அளவில் பேசியிருக்கிறார்.

தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையிலேயே வழக்கறிஞர்கள் இருக்கிறார்கள், மருத்துவர்கள் இருக்கிறார்கள், பொறியாளர்கள் இருக்கிறார்கள், பேராசிரியர்கள் இருக்கிறார்கள், உள்ளாட்சி அமைப்புகளில் பிரதிநிதிகளாக இருந்தவர்களும் இருக்கிறார்கள், கல்வியாளர்கள் இருக்கிறார்கள், சமூக எண்ணம் கொண்டவர்கள் இருக்கிறார்கள். சாமானியர்களையும் சட்டமன்ற உறுப்பினர்களாக, அமைச்சர்களாக ஆக்குகின்ற ஒரே இயக்கம் அ.தி.மு.க. தான் என்பதை இந்தத் தருணத்தில் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

அப்படி இருக்கும்போது, சட்டமன்ற மேலவையை தோற்றுவிக்க வேண்டிய அவசியம் என்ன? என்ற கேள்வியை நான் கேட்க விரும்புகிறேன். இந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட சமயத்தில் இந்த மாநிலத்தின் முதல்-அமைச்சராக இருந்தவர் கருணாநிதி. அவருடைய மகன் மு.க. ஸ்டாலினுக்கு துணை முதலமைச்சர் பதவி வழங்கப்பட்டுவிட்டது. மற்றொரு மகன் மு.க. அழகிரி மற்றும் பேரன் தயாநிதி மாறன் ஆகியோருக்கு மத்திய அமைச்சர் பதவிகள் அளிக்கப்பட்டுவிட்டன. மகள் கனிமொழிக்கு மாநிலங்களவை உறுப்பினர் பதவி கொடுக்கப்பட்டுவிட்டது. குடும்பத்தில் எஞ்சியிருப்பவர்களுக்கும், தன் துதி பாடுகிறவர்களுக்கும் பதவிகள் வழங்கப்பட வேண்டும் என்பதற்காகத்தான் இந்த சட்டமன்ற மேலவையை தி.மு.க. கொண்டு வந்ததே தவிர, பலதரப்பட்டவர்களின் கருத்துக்களை, சான்றோர்களின் கருத்துக்களை பெறுவதற்காக அல்ல என்பதை இந்த நேரத்திலே சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

2010 ஆம் ஆண்டு சட்டமன்ற மேலவை அமைப்பது குறித்து நடைபெற்ற விவாதத்தில் பேசிய செங்கோட்டையன்... இறுதிக் காலத்தில், கடைசி நேரத்தில் ஓராண்டிற்கு முன்னாலே இதைக் கொண்டு வரவேண்டியதன் அவசியம் என்ன? என்று கேட்டதற்கு பதில் அளித்த அப்போதைய முதல்-அமைச்சர் கருணாநிதி, இது யாருக்குக் கடைசி காலம் என்பது இந்த நாட்டு மக்கள் தீர்மானிக்க வேண்டிய ஒன்று என்ற அளவிலே கூறியிருக்கிறார்.

இன்று தீர்ப்பும் வந்துவிட்டது. இந்தத் தீர்ப்பின் மூலம் சட்டமன்ற மேலவை தேவையில்லை என்பதை மக்களும் ஆமோதித்து இருக்கிறார்கள் என்பதை எடுத்துக்கூற விரும்புகிறேன்.

இந்தியாவிலே இருக்கின்ற 28 மாநிலங்களில், கர்நாடகா, மகராஷ்டிரா, பீகார், உத்தரபிரதேசம், ஆந்திரா, ஜம்மு-காஷ்மீர் மாநிலங்களில் மட்டும் தான் சட்டமன்ற மேலவை மற்றும் சட்டமன்றப் பேரவை ஆகிய இரு அமைப்புகளும் இருக்கின்றன.

இன்னும் சொல்லப் போனால், காங்கிரஸ் கட்சி ஆளுகின்ற பெரும்பாலான மாநிலங்களில் சட்டமன்ற மேலவை இல்லை. இதிலிருந்தே மேலவை வேண்டும் என்ற கருத்து எவ்வளவு வலுவிழந்து காணப்படுகிறது என்பதை எளிதில் எவரும் தெரிந்து கொள்ளலாம்.

அந்நியர் நம்மை ஆண்ட போது, 1919-ஆம் ஆண்டு மாண்டேகு செம்ஸ்போர்டு அரசியல் சீர்திருத்தக் குழு கொடுத்த அறிக்கை ஒன்றினால் உருவானவைதான் சட்டமன்ற மேலவைகள். ஆங்கிலேயருக்கு நாம் அடிமைப்பட்டிருந்த காலத்தில், ஜனநாயக ரீதியாக அமையும் சட்டமன்றப் பேரவைகளுக்குப் போட்டியான அமைப்புகளாக உருவாக்கப்பட்டது தான் சட்டமன்ற மேலவைகள் என நற்சிந்தனையாளர்கள் பலரும் கருதி வந்தனர்.

முற்போக்குச் சிந்தனை கொண்டவர்கள் அனைவரும் ஜனநாயக அமைப்பில் இரண்டாம் அவை எனக் கருதப்படும் மேலவை தேவையற்றது என்பதையே மிகத் திட்டவட்டமாகக் கூறி வந்துள்ளனர்.

கம்யூனிஸ்ட் கட்சியினுடைய முதுபெரும் தலைவர்களில் ஒருவரான மறைந்த கல்யாண சுந்தரம், சிக்கனம் தேவையென்று சொன்னால், மிகச் சரியான சிக்கன நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமானால், தேவையற்ற மேலவையை கலைத்துவிடலாம் என்பது என் அபிப்ராயம் என்று தெரிவித்து இருக்கிறார்.

சட்டமேதை டாக்டர் பி.ஆர். அம்பேத்கர், “மேலவை எனப்படும் இந்த இரண்டாம் அவை எப்போதும் நிலைத்திருக்க வேண்டிய ஒன்று அல்ல; தற்காலிகமான ஏற்பாடுதான். இதனை என்றைக்கு வேண்டுமானாலும் ஒதுக்கிக் கொள்ளலாம், நீக்கி விடலாம், கலைத்து விடலாம் என தெளிவுபட கூறியுள்ளார்.

புரட்சித்தலைவர் எம்.ஜி. ஆரின் கொள்கைகளையும், கோட்பாடுகளையும் நிறைவேற்றிட சபதமேற்று, அதற்கான பொறுப்பினை ஏற்றுள்ள நாங்கள், அவருடைய கொள்கைகளின்படியும், சட்ட மேதை டாக்டர் அம்பேத்கரின் மேலான கருத்துக்களின்படியும், அனைத்து முற்போக்கு சிந்தனையுள்ளம் கொண்டவர்கள் கூறியுள்ள ஆலோசனைகளின்படியும், தமிழகத்திற்கு மேலவை தேவையில்லை என முடிவெடுத்து இத்தீர்மானத்தை முன் வைத்துள்ளோம்.

எனக்கு முன்னால் பேசிய கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் குணசேகரன் திரும்பத் திரும்ப அ.தி.மு.க. அரசு வரும்போது இந்த மேலவை வராமல் இருப்பதற்கு நடவடிக்கை எடுக்கிறார்கள். திரும்பத் திரும்ப தி.மு.க. ஆட்சிக்கு வரும்போது மேலவையை கொண்டுவர நடவடிக்கை எடுக்கிறார்கள். இனிமேல் எந்தக் காலத்திலும் மீண்டும் ஆட்சிக்கு வருபவர்கள் மேலவையை கொண்டு வருவதற்கு வழியில்லாமல் செய்திட ஏதாவது ஒரு சட்டத்தைக் கொண்டுவர வேண்டுமென்று இங்கே கேட்டுக் கொண்டார்.

எனக்குத் தெரிந்தவரை மேலவை வேண்டுமென்று நினைக்கின்ற ஒரே கட்சி தி.மு.க. தான். ஆகவே, மீண்டும் தி.மு.க. ஆட்சிக்கு வந்து மேலவையை கொண்டு வந்து நடவடிக்கை எடுப்பதற்கு வாய்ப்பேயில்லை என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

அஸ்தமனமாகிய சூரியன் அஸ்தமனமாகியதுதான். இந்தச் சூரியன் திரும்பவும் உதயமாகாது என்பதைத் தெரிவித்து, தமிழ்நாடு மாநிலத்தில் சட்டமன்ற மேலவை தேவையென எடுக்கப்பட்ட முடிவினை நீக்கிக் கொள்வது என்ற தீர்மானத்தினை நிறைவேற்றித் தருமாறு இந்த மாமன்ற உறுப்பினர்களைக் கேட்டுக் கொண்டு அமைகின்றேன்.
இவ்வாறு ஜெயலலிதா பேசினார்.

No comments: