Tuesday, June 7, 2011

விண்வெளி மையத்தில் விவசாய பண்ணை ஜப்பான் விஞ்ஞானி தீவிரம்.

விண்வெளி மையத்தில் விவசாய பண்ணை ஜப்பான் விஞ்ஞானி தீவிரம்

சர்வதேச விண்வெளி மையத்தில் விவசாய பண்ணை அமைப்பதில் ஜப்பான் விஞ்ஞானி தீவிரமாக உள்ளார். அமெரிக்கா, ரஷியா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகள் நடுவானில் சர்வதேச விண்வெளி மையத்தை அமைத்து வருகின்றன. சோயுஷ் விண்கலம் மூலம் சென்று அங்கு ஆய்வகம் (பரிசோதனை கூடம்) அமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றன.

அத்துடன் அங்கு விவசாய பண்ணை அமைத்து அதில் காய்கறிகளை பயிரிட திட்ட மிட்டுள்ளன. இந்நிலையில் நாளை (புதன்கிழமை) சோயுஷ் விண்கலம் முலம் விண்வெளி வீரர்கள் சதோஷி புருகவலா (ஜப்பான்), செர்ஜி வல்கோவ் (ரஷியா), மைக்கேல் போசும் (அமெரிக்கா) ஆகியோர் சர்வதேச விண்வெளி மையம் புறப்பட்டு செல்கின்றனர்.

அதற்காக கஜகஸ்தானில் உள்ள பைகாணர் விண்வெளி தளத்தில் தயார் நிலையில் உள்ளனர். இந்த நிலையில் ஜப்பான் விண்வெளி வீரர் சதோஷி புருகவலா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

நாளை புறப்பட்டு செல்லும் நாங்கள் சர்வதேச விண்வெளி மையத்தில் 6 மாதம் தங்கி ஆய்வக பணியை மேற்கொள்ள இருக்கிறோம். அப்போது அங்கு விவசாய பண்ணை அமைத்து அதில் வெள்ளரிக்காய் பயிரிட்டு அறுவடை செய்வது குறித்து ஆய்வு மேற்கொள்ள இருக்கிறோம். இதன் மூலம் எதிர்காலத்தில் விண்வெளி வீரர்கள் தங்களுக்கு தேவையான காய்கறிகளை அங்கேயே அவர்கள் உற்பத்தி செய்ய முடியும் என்றார்.

மேலும் அவர் கூறும்போது, விண் வெளியில் எங்களால் வெள்ளரிக்காய்களை சாப்பிட முடியும். ஆனால் அதற்கு எங்களுக்கு அனுமதி இல்லை என்று நகைச்சுவையுடன் கூறினார்.

ரஷிய விண்வெளி வீரர் செர்ஜி வால்கோவ் கூறும்போது, விண்வெளி மையத்தில் சாலட் தயாரிக்க அனுமதி அளித்தால் அங்கு தக்காளியை உற்பத்தி செய்யவும் தயாராக இருக்கிறோம். எனக்கு வறுத்த உருளைக்கிழங்கும் சாப்பிட பிடிக்கும் என்று நகைச்சுவை உணர்வுடன் கூறினார்.

No comments: