Wednesday, June 8, 2011

கேபிஎன் பேருந்து லாரி மீது மோதி விபத்து - தீயில் கருகி 22 பேர் பலி






சென்னையிலிருந்து திருப்பூருக்கு சென்ற கேபிஎன் டிராவல்ஸ் பேருந்து லாரி மீது மோதி விபத்தில் எரிந்தது 22 பேர் பலி.

காஞ்சிபுரத்தை அடுத்த ஓச்சேரி அருகே, ஆம்னி பஸ் பள்ளத்தில் கவிழ்ந்து தீப்பிடித்ததில், தீயில் கருகி, 22 பேர் பலியாகினர்.

சென்னையிலிருந்து திருப்பூருக்கு 07.06.2011 அன்று இரவு கேபிஎன் அல்ட்ரா கோச் பேருந்து சென்று கொண்டிருந்தது. இரவு 11.30 மணியளவில், பயணிகள் அனைவரும் ஆழ்ந்த தூக்கித்தில் இருந்தனர். காஞ்சிபுரத்தை அடுத்த காவேரிபாக்கம், அவலூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் வேகமாக சென்ற பஸ் முன்னால் நின்று கொண்டிருந்த லாரி மீது எதிர்பாராத விதமாக மோதியது. மோதிய வேகத்தில் பஸ், ரோட்டை ஒட்டியுள்ள 10 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

பள்ளத்தில் கவிழ்ந்த பஸ்ஸின் டீஸல் டேங்க் வெடித்ததில் பஸ் முழுவதும் தீப்பிடிக்க தொடங்கியது. இரவு நேரம் என்பதால், ஆழ்ந்த தூக்கத்தில் இருந்த பயணிகள் என்ன நடந்தது என்று சுதாரிப்பதற்குள், பஸ் முழுவதும் மளமளவென தீ பரவியது. ஆம்னி பஸ் என்பதாலும், இருந்த ஒரு கதவும் தாழிடப்பட்டு, ஜன்னல்களும் டபட்டிருந்ததால், பஸ்சிலிருந்து பயணிகள் வெளியே வர முடியாமல் தவித்தனர்.

தீ பரவி புகை மூட்டம் சூழ்ந்ததால், என்ன ஆனது என்றே தெரியாமல், பலரும் மயங்கினர். இதனால் பலியானவர்களின் எண்ணிக்கை அதிகரித்தது. சாலையோர பள்ளத்தில் பஸ் கவிழ்ந்து தீப்பிடித்து எரிந்ததை பார்த்த, மற்ற வாகனங்களும் ரோட்டில் நிறுத்தப்பட்டன. அதில், இருந்தவர்கள் போலீஸ், மற்றும் அவசர ஆம்புலன்ஸுக்கு தகவல் தெரிவித்துவிட்டு மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

இருப்பினும், தீயின் தாக்கம் கடுமையாக இருந்ததால், பஸ்சுக்குள் சிக்கியவர்களை உடனடியாக மீட்க முடியவில்லை. அதனால், மூன்று குழந்தைகள் உட்பட 22 பேர் உடல் கருகி பலியாகினர். 2 பேர் காயமடைந்துள்ளனர்.

இச்சம்பவம் நடந்தது பற்றி அறிந்ததும் தமிழக அமைச்சர்கள் செந்தில் பாலாஜி, வி.எஸ்.விஜய், சின்னையா ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.

இரவு நேரம் என்பதால் மீட்பு பணியில் தொய்வு ஏற்பட்டது. பலியானவர்களின் உடல்கள் ஒவ்வொன்றாக மீட்கப்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மூன்று அமைச்சர்களும் பொதுமக்களுடன் இறந்தவர்களின் உடல்களை 108 ஆம்புலன்சில் ஏற்றினர். விடியற்காலை 4 மணி வரை பலியானவர்களின் உடல்கள் மீட்கப்பட்டது. அதிகாலை 4 மணிக்கு பிறகே அமைச்சர்கள் சம்பவ இடத்தை விட்டு கிளம்பினர்.

ஆம்னி பஸ் விபத்து நடந்தது எப்படி ?

தனக்கு முன்னால் சென்று கொண்டிருந்த லாரி திடீரென பிரேக் போட்டதால், கட்டுப்பாட்டை இழந்த கேபிஎன் ஆம்னி பேருந்தின் டிரைவர், இடதுபுறம் பேருந்தைத் திருப்பியதால் விபத்து நேரிட்டதாக தெரிய வந்துள்ளது.

காவேரிப்பாக்கம் அருகே அவலூர் என்ற இடத்தில் நேற்று இரவு விபத்துக்குள்ளான கேபிஎன் பேருந்து சென்னையிலிருந்து எட்டரை மணியளவில் திருப்பூருக்குக் கிளம்பியது.

1.30 மணியளவில் பேருந்து அவலூரில் வந்து கொண்டிருந்தது. அப்போது பேருந்துக்கு முன்னால் ஒரு லாரி போய்க் கொண்டிருந்தது. அந்த லாரி திடீரென பிரேக் போட்டதால் ஆம்னி பேருந்தின் டிரைவர் நாகராஜ் தடுமாறினார். உடனடியாக பேருந்தை இடதுபுறமாக அவர் திருப்பியுள்ளார். அப்போது பேருந்து கட்டுப்பாட்டை இழந்து, சாலையோரம் இருந்த கால்வாய் பாலத்தின் சுவரில் மோதி இடித்துத் தள்ளி கீழே விழுந்து கவிழ்ந்து தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது.

லாரி டிரைவர் ஏன் திடீரென பிரேக் போட்டார் என்பது தெரியவில்லை. அதேசமயம், பேருந்து அதிவேகமாக போய்க் கொண்டிருந்ததா என்பதும் தெரியவில்லை.

விபத்தில் உயிர் தப்பிய நாகராஜ் உடனடியாக அடுக்கம்பாறை காவல் நிலையத்தில் சரணடைந்தார். அவரை உடனடியாக போலீஸார் வேலூர் கொண்டு சென்று விசாரணை நடத்தினர். நாகராஜ், சேலம் தாசநாயக்கன்பட்டியைச் சேர்ந்தவர்.

வாலாஜா மருத்துவமனையில் உடல்கள்

விபத்தில் உயிரிழந்தோரின் உடல்கள் தற்போது வாலாஜா அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளன. அங்கு பிரேதப் பரிசோதனை நடத்தப்பட்டு பின்னர் உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும்.

பல உடல்கள் அடையாளம் காண முடியாத அளவுக்கு கருகிப் போயிருப்பதால் அடையாளம் காண்பதில் பெரும் சிக்கல் நிலவுகிறது.

உயிர் பிழைத்தவர் கதறல்

இந்தக் கோர விபத்தில் சென்னை முகப்பேரைச் சேர்ந்த கார்த்திக் ராஜா என்பவர் மட்டும் உயிர் தப்பினார். காயத்துடன் உயிர் தப்பிய அவர் தற்போது சென்னை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அவர் விபத்து குறித்துக் கூறுகையில், பேருந்து அவலூர் என்ற இடத்தில் வந்தபோது திடீரென விபத்துக்குள்ளானது. எப்படி விபத்து நடந்தது என்பது தெரியவில்லை. ஆனால், பேருந்து கவிழத் தொடங்கியது மட்டும் எனக்குத் தெரியும்.

பேருந்து எதன் மீதோ பலத்த சப்தத்துடன் மோதியது. மோதிய வேகத்தில் பேருந்தின் பின்பக்க அவசர கால கதவு திறந்து கொண்டது. என்ன நடந்தது என்பதை நான் சுதாரிப்பதற்குள் தீ மளமளவென பேருந்துக்குள் பரவி விட்டது. உடனடியாக நான் வெளியே குதித்தேன்.

ஆனால் என்னுடன் பயணித்த எனது மனைவி ஸ்மிதாவை என்னால் காப்பாற்ற முடியவில்லை. அவர் மீது தீ பரவியதால் அவர் உடல் கருகி இறந்து போய் விட்டார் என்றார் கண்ணீர் விட்டபடி.

No comments: