Wednesday, June 8, 2011

மேட்டூர் அணை திறக்கப்பட்டதன் மூலம் 260 மெகாவாட் மின் உற்பத்தி தொடங்கியது - நீர்மட்டம் மளமளவென குறைந்து வருகிறது.

மேட்டூர் அணை திறக்கப்பட்டதன் மூலம்  260 மெகாவாட் மின் உற்பத்தி  தொடங்கியது

காவிரி டெல்டா பாசனத்துக்காக நேற்று காலை மேட்டூர் அணை திறக்கப்பட்டது. பொதுப்பணித்துறை அமைச்சர் ராமலிங்கம் அணையை திறந்து வைத்தார்.

சுதந்திரம் பெற்ற பிறகு ஜூன் மாதம் 12-ந்தேதிக்கு முன்பாக 6-ந்தேதி அணை திறக்கப்படுவது இதுவே முதல் முறை ஆகும்.அணை திறக்கப்பட்டதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர். தற்போதைய நிலவரப்படி செப்டம்பர் மாதம் 30-ந்தேதி வரை விவசாயிகளுக்கு பாசனத்திற்காக தடையின்றி தண்ணீரை வழங்க முடியும்.

நேற்று காலை மேட்டூர் அணையில் இருந்து முதலில் 6 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டது. பின்னர் ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை 2 ஆயிரம் கனஅடி வீதம் அதிகரிக்கப்பட்டது. மாலையில் இருந்து வினாடிக்கு 12 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. தற்போது அணை திறக்கப்பட்டதால் மின் உற்பத்தியும் தொடங்கி உள்ளது.

இனறு காலை நிலவரப்படி 260 மெகாவாட் மின்சாரம் தயாரிக்கப்பட்டு வருகிறது. மேட்டூர் அணை மற்றும் சுரங்க மின் நிலையம் மூலம் 110 மெகாவாட் மின்சாரம் தயாரிக்கப்படுகிறது. காவிரி ஆற்றின் குறுக்கே செக்கானூர், நெருஞ்சிப்பேட்டை, கோனேரிப்பட்டி, குதிரைக்கல் மேடு, பவானி கட்டளை ஆகிய இடங்களில் அமைக்கப்பட்டு உள்ள கீழ் கதவணை மின் திட்டங்கள் மூலம் 150 மெகாவாட் மின்சாரம் தயாரிக்கும் பணியும் தொடங்கி உள்ளது. மொத்தம் 260 மெகாவாட் மின்சாரம் தயாரிக்கப்படுகிறது.

இதன் மூலம் மின்தட்டுப்பாட்டை ஓரளுவு போக்க காவிரி ஆற்றில் தயாரிக்கப்படும் மின்சாரம் கை கொடுக்கிறது. செப்டம்பர் மாதம் 30-ந்தேதி வரை தொடர்ந்து மின்சாரம் தயாரிக்கப்படும். பருவமழை கை கொடுத்து செப்டம்பருக்கு பின்னரும் தொடர்ந்து மேட்டூர் அணையில் இருந்து காவிரி ஆற்றில் தண்ணீர் திறக்கப்பட்டால் தொடர்ந்து மின்சாரம் தயாரிக்கப்படும்.

ஜூன்.7 - காலை 8 மணி நிலவரப்படி மேட்டூர் அணையில் 115.38 அடி தண்ணீர் உள்ளது. அணைக்கு வினாடிக்கு 3923 கன அடிவீதம் தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது.

ஜூன்.8 - காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 109.75 அடியாக இருந்தது. மேட்டூர் அணை நீர்மட்டம் மளமளவென குறைந்து வருகிறது. அணைக்கு வினாடிக்கு 1263 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து வினாடிக்கு 1600 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.


No comments: