Wednesday, June 8, 2011

சிசுக்களையும் துளைத்தெடுத்த சிங்களப் படையின் குண்டுகள் !


இலங்கைப் படையினரின் கொடூரத் தாக்குதலுக்கு வயிற்றில் இருக்கும் சிசுக்களும் கூட தப்பாத அவலம் வன்னியில் நிகழ்ந்துள்ளது.

வன்னியின் மாத்தளன் பகுதியில் இலங்கைப் படைகள் வெள்ளிக்கிழமை நடந்த எறிகணைத் தாக்குதலில் நான்கு கர்ப்பிணிப் பெண்கள் கொடூரமாக உயிரிழந்தனர்.

விஸ்வமடு, தியாரவில் என்ற பகுதியைச் சேர்ந்த 24 வயதான சிவதர்சனி என்ற கர்ப்பிணிப் பெண் மார்ச் 2ம் தேதி நடந்த எறிகணைத் தாக்குதலில் காயமடைந்தார்.

உடனடியாக அவரை அருகில் இருந்த தற்காலிக மருத்துவ மையத்திற்குக் கொண்டு சென்றனர். அவரது அடி வயிற்றில் குண்டுத் துகள்கள் பாய்ந்திருந்தன. நேற்று அவருக்கு பிரசவம் ஏற்பட்டது. பெண் குழந்தையைப் பெற்றெடுத்தார் அந்தத் தமிழ்த் தாய்.

பிறந்த குழந்தையைப் பரிசோதித்த மருத்துவமனை ஊழியர்கள், அக்குழந்தையின் இடது தொடையில், குண்டுத் துகள்கள் பாய்ந்திருப்பதைப் பார்த்து திடுக்கிட்டனர். தாயிடம் முதல் பாலைக் கூட குடிக்காத நிலையில் அக்குழந்தைக்கு அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டது. தொடையில் பாய்ந்திருந்த துகள்கள் வெளியே எடுக்கப்பட்டன.

அதேபோல, கடந்த புதன்கிழமை நடந்த தாக்குதலில் படுகாயமடைந்த 28 வயதுப் பெண் ஒருவர் மருத்துவமனைக்குக் கொண்டு வரப்பட்டார்.

படுகாயமடைந்த நிலையில் இருந்த அவருக்கு அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டது. அப்போது வயிற்றில் இருந்த கரு, இரு கால்களும் சுருங்கிப் போன நிலையில் பிணமாக எடுக்கப்பட்டது.

அடுத்த நாளே அந்தத் தாயும் பரிதாபமாக உயிரிழந்தார். தமிழ்நெட் இணையதளம் இந்த மனதை உறைய வைக்கும் செய்தியையும், படங்களையும் வெளியிட்டுள்ளது.

அதேபோல வியாழக்கிழமை ஒரு பெண்ணுக்கு இரட்டைக் குழந்தைகள் இறந்து பிறந்தன.

தொடர்ந்து நடைபெறும் தாக்குதல்களால், கர்ப்பிணித் தாய்மார்கள் பெரும் மன அழுத்தத்திற்கு ஆளாகின்றனர். சுகாதாரமான, ஆரோக்கியமான உணவு அவர்களுக்குக் கிடைப்பதவில்லை. இதுவே இந்த அவலத்திற்குக் காரணம்.

கடந்த வாரம் வீசிய திடீர் புயல் மற்றும் கன மழை காரணமாகவும் கர்ப்பிணிப் பெண்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

1 comment:

பனித்துளி சங்கர் said...

உள்ளம் கனத்துபோனது . எனது தமிழ் மக்களின் வேதனைகள அறிந்த பொழுது . பகிர்ந்தமைக்கு நன்றி