Monday, June 6, 2011

ஜூன் 8-ல் நாடு தழுவிய உண்ணாவிரதம் : அண்ணா ஹசாரே.


பாபா ராம்தேவின் உண்ணாவிரதத்துக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை ஜனநாயகத்தின் மீதான தாக்குதல் என்று அண்ணா ஹசாரே கடுமையான கண்டனம் தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவத்தைக் கண்டித்துப் போராட்டம் நடத்துவதன் மூலம் அரசுக்கு சரியான பாடம் கற்பிக்க வேண்டுமெனவும் அவர் கூறியுள்ளார்.

போலீஸார் பகல் நேரத்தில் அவர்களை அணுகுவதை விட்டுவிட்டு நள்ளிரவுக்குப் பின் இப்படியொரு தாக்குதலை நடத்தியுள்ளதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும். இதனை ஜனநாயகத்தின் மீதான தாக்குதல் என்றுதான் கூற வேண்டும்.

இந்த விஷயத்தில் அரசுக்கு எதிராக போராட்டம் நடத்துவது குறித்து சமூகநல ஆர்வலர்கள், அமைப்புகள் என அனைவருடனும் ஆலோசித்து வருகிறோம். நாடு தழுவிய அளவில் போராட்டம் நடைபெறும். இது அரசுக்கு பாடம் புகட்டும் வகையில் இருக்கும். ஜனநாயக நாட்டில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்துவதில் எவ்விதத் தவறும் இல்லை' என்று ஹசாரே கூறியுள்ளார்.

பாபா ராம்தேவ் உண்ணாவிரதத்தில் போலீஸார் தடியடி நடத்தியதைக் கண்டித்து ஜூன் 8-ல் நாடு தழுவிய அளவில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்த அண்ணா ஹசாரே அழைப்பு விடுத்துள்ளார்.

தில்லியில் ஞாயிற்றுக்கிழமை அவர் செய்தியாளர்களிடம் மேலும் கூறியது:

"பாபா ராம்தேவின் போராட்டத்தில் ஒருசில தவறுகள் இருந்திருக்கலாம். ஆனால் நள்ளிரவு நேரத்தில் உண்ணாவிரதப் பந்தலுக்குள் புகுந்து பெண்கள், குழந்தைகள், வயதானவர்களை போலீஸார் அடித்து விரட்டியுள்ளனர். ஜனநாயக நாட்டில் இது ஏற்புடைய விஷயமல்ல. அடித்து விரட்டும் அளவுக்கு அவர்கள் என்ன தவறு செய்தார்கள்.

தில்லியில் நடைபெற்ற தடியடி சம்பவம் கடும் கண்டனத்துக்கு உரியது. இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்து நாடு தழுவிய அளவில் ஜூன் 8-ல் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும். தில்லி ஜந்தர் மந்தரில் நடைபெறும் உண்ணாவிரதத்தில் நான் கலந்து கொள்ள இருக்கிறேன். இதில் இருந்து அரசு பாடம் கற்றுக் கொள்ளவில்லையெனில், அடுத்து தொடர்ந்து அரசுக்கு எதிராக போராட்டங்கள் நடத்தப்படும். அது இரண்டாவது சுதந்திரப் போராட்டமாக இருக்கும்.

ராம்தேவுடன் சில முக்கிய விஷயங்கள் குறித்து முன்பே பேசினேன். ஆனால் அவற்றை இங்கு கூற முடியாது. லோக்பால் மசோதா வரைவுக் கூட்டுக்குழு தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு கடிதம் அனுப்பியுள்ளேன். அதில் ஊழலுக்கு எதிரான சட்டம் உள்ளிட்ட விஷயத்தில் அரசின்நிலைப்பாடு என்ன என்பதைத் தெளிவாகத் தெரிவிக்க வேண்டுமென கேட்டுள்ளேன். நாங்கள் எங்கள் நிலையைத் ஏற்கெனவே தெரிவித்து, அதில் உறுதியாக இருக்கிறோம்.

அடுத்து நடைபெறவுள்ள லோக்பால் மசோதா வரைவுக் குழுவின் அடுத்த கூட்டம் திங்கள்கிழமை (ஜூன் 6) நடைபெறவுள்ளது. இதனைப் புறக்கணிக்க மக்கள் பிரதிநிதிகள் குழு முடிவு செய்துள்ளது. அக்கூட்டத்தை நேரடியாக ஒளிபரப்ப ஏற்பாடு செய்யும் வரை புறக்கணிப்பு தொடரும்.

ஊழலை ஒழிக்க வேண்டும் என்பதில் மத்திய அரசு எந்த அளவுக்கு உறுதியாக இருக்கிறது என்பதில் சந்தேகம் நிலவுகிறது. ஊழலுக்கு எதிராக குரல் கொடுப்பவர்களை ஒடுக்க வேண்டுமென்று மத்திய அரசு செயல்படுகிறது என்றார் அவர்.

No comments: