Monday, June 6, 2011

மோனோ ரெயிலின் சிறப்பு அம்சங்கள்.

தமிழக அரசு அறிவித்துள்ள மோனோ ரெயிலின் சிறப்பு அம்சங்கள்: குறுகலான இடத்திலும் செல்லும்; செலவு மிகக்குறைவு

சென்னையில் போக்குவரத்து நெரிசல் பெரும் சவாலாக உள்ளது. வாகனங்களின் எண்ணிக்கை 32 லட்சத்துக்கும் மேல் உள்ளது. போக்குவரத்து நெரிசலை சமாளிக்க கடந்த தி.மு.க. ஆட்சியில் மெட்ரோ ரெயில் திட்டம் கொண்டு வரப்பட்டது. ரூ.15 ஆயிரம் கோடி திட்டமதிப்பீட்டில் தொடங்கப்பட்ட இந்த பணிகள் நடந்து வருகிறது.

கோயம்பேட்டில் இருந்து அசோக் நகர் வரை தூண்கள் அமைக்கப்பட்டு மேம்பாலமும் அமைக்கப்பட்டு விட்டது. அசோக்நகரில் இருந்து பரங்கிமலை வரையிலான பணிகள் நடந்து வருகிறது.

இதேபோல் சென்ட்ரல் முதல் திருமங்கலம் வரையிலான சுரங்கப்பாதை அமைப்பு பணிகளும் தொடங்கப்பட்டுள்ளன. அனைத்து பணிகளும் 2015-க்குள் முடிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் புதிதாக பொறுப்பேற்ற தமிழக அரசு மோனோ ரெயில் திட்டம் நிறைவேற்றப்படும் என்று அறிவித்துள்ளது. ஏற்கனவே 2001-2006 அ.தி.மு.க. ஆட்சியின்போது மோனோ ரெயில் திட்டம் அறிவிக்கப்பட்டது. ஆனால் அதற்குள் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதால் அந்த திட்டம் கிடப்பில் போடப்பட்டது.

இப்போது மீண்டும் முதல்-அமைச்சராக பொறுப்பேற்றுள்ள ஜெயலலிதா மோனோ ரெயில் திட்டத்தை வெற்றிகரமாக நிறைவேற்ற முடிவு செய்துள்ளார்.

முதல் கட்டமாக 111 கிலோ மீட்டர் தூரத்துக்கு செயல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மெட்ரோ ரெயிலை விட மோனோ ரெயிலுக்கான செலவும் குறைவு. கட்டுமான பணிகளையும் விரைவாக முடிக்க முடியும். மோனோ ரெயில் பஸ்சை போல்தான் இருக்கும். குறுகலான ரோடு பகுதியிலும் இயக்க முடியும். மெட்ரோ ரெயிலில் ஒரு மணி நேரத்துக்கு 30 ஆயிரம் பயணிகள் பயணம் செய்யலாம்.

ஆனால் மோனோ ரெயிலில் 10 ஆயிரம் பயணிகள் பயணம் செய்யலாம். மோனோ ரெயில் திட்டத்தை அமைக்க ஒரு கிலோ மீட்டருக்கு 45 முதல் 50 கோடி ரூபாய் செலவாகும். ஆனால் மெட்ரோ ரெயிலுக்கு ஒரு கிலோ மீட்டருக்கு ரூ.300 கோடி வரை செலவாகும்.

மோனோ ரெயில் பெட்டி 6 முதல் 10 டன் எடை உள்ளது. மெட்ரோ ரெயில் பெட்டி 45 டன் எடை உள்ளது. மோனோ ரெயிலுக்கு பேட்டரி சூரிய ஒளி, ஜெனரேட்டர் போன்றவற்றை பயன்படுத்தி அதுவே மின்சாரத்தை தயாரித்து கொள்ளும். ஆனால் மெட்ரோ ரெயி லுக்கு 25 கிலோ வாட் மின்சாரம் தேவைப்படும்.

மோனோ ரெயில் திட்டத்தை 24 மாதத்தில் நிறைவேற்றி இயக்க முடியும். சென்னை நகரில் பொது போக்குவரத்து 27 சதவீதமாக உள்ளது. இந்த 2026-ம் ஆண்டுக்குள் 46 சதவீதமாக உயர்த்த திட்டமிட்டுள்ளனர்.

அரசு டவுன் பஸ், மின்சார ரெயில், பறக்கும் ரெயில், மெட்ரோ ரெயிலை தொடர்ந்து மோனோ ரெயில் திட்டமும் நிறைவேற்றப்பட்டால் பொது போக்குவரத்து அதிகரிக்கும். இதனால் நகர சாலைகளில் நெருக்கடி குறையும். பெருமளவு வாகன இயக்கம் கட்டுப்படுவதால் பெட்ரோல், டீசல் உபயோகமும் குறையும்.

No comments: