Monday, June 6, 2011

பாபா ராம்தேவிற்கு ஆதரவாக பா.ஜனதா தலைவர்கள் சத்யாகிரக போராட்டம்.


பாபா ராம்தேவ் மேற்கொண்ட உண்ணாவிரத போராட்டத்தில் போலீசார் தடியடி நடத்தியதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், காந்தி சமாதி முன்பு பாரதீய ஜனதா தலைவர்கள் சத்யாகிரக போராட்டத்தில் ஈடுபட்டனர்.

டெல்லி ராம்லீலா மைதானத்தில் உண்ணாவிரதம் இருந்த யோகா குரு ராம் தேவை போலீசார் 04.06.2011 அன்று அதிகாலையில் வலுக்கட்டாயமாக வெளியேற்றினர். அவருடன் உண்ணாவிரதம் இருந்த கூட்டத்தினரை தடியடி நடத்தியும் கண்ணீர் புகை குண்டுகளை வீசியும் கலைத்தனர். போலீசாரின் இந்த நடவடிக்கைக்கு பாரதீய ஜனதா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

டெல்லி ராம் லீலா மைதானத்துக்கு வெளியே பா.ஜனதா மூத்த தலைவர் வி.கே.மல்கோத்ரா தலைமையில் பா.ஜனதா கட்சியினர் 04.06.2011 அன்று போராட்டம் நடத்தினார்கள். அதில், டெல்லியை சேர்ந்த 9 எம்.எல்.ஏ.க்கள் உட்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.

டெல்லியில் 04.06.2011 அன்று நடைபெற்ற பாரதீய ஜனதா நிர்வாகிகள் கூட்டத்தில், ஊழலுக்கு எதிராக உண்ணாவிரதம் இருந்தவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தியதற்கு கண்டனம் தெரிவித்தும், பாபா ராம்தேவுக்கு ஆதரவாகவும் நாடு முழுவதும் 24 மணி நேர சத்யாகிரக போராட்டம் நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டது.

அதன்படி, டெல்லி ராஜ்காட்டில் உள்ள காந்தி சமாதி முன்பு பாரதீய ஜனதா தலைவர் நிதின் கட்காரி, மூத்த தலைவர் அத்வானி மற்றும் தலைவர்கள் சத்யாகிரக போராட்டத்தில் ஈடுபட்டனர். 04.06.2011 அன்று இரவு 7 மணிக்கு இந்த போராட்டம் தொடங்கியது.

No comments: