Monday, June 6, 2011

மகாத்மா காந்தி மட்டும் இருந்திருந்தால் கதறி அழுதிருப்பார்-ராம்தேவ்.


மிக நெருக்கமான பந்தலுக்குக் கீழ் தூங்கிக் கொண்டிருந்த அப்பாவி மக்களை கண்ணீர்ப் புகை குண்டுகளை வீசி விரட்டிய செயல் மிகவும் கொடூரமானது. இந்த தாக்குதலை மகாத்மா காந்தி மட்டும் உயிருடன் இருந்து பார்த்திருந்தால் கதறி அழுதிருப்பார். ஊழலுக்கு எதிரான எனது போராட்டம் ஓயாது, தொடர்ந்து போராடுவேன் என்று கூறியுள்ளார் பாபா ராம்தேவ்.

ஹரித்வாரில் தனது உண்ணாவிரதப் போராட்டத்தை இன்று மீண்டும் தொடங்கியுள்ளார் ராம்தேவ். இன்று முற்பகல் அவர் தனது ஆசிரமத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது அவர் கூறுகையில், உச்சநீதிமன்றம் இன்று ராம்லீலா மைதானத்தில் நடந்த அடக்குமுறை அராஜகத்தை தானாக முன்வந்து வழக்காக எடுத்து மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இதை நான் வரவேற்கிறேன்.

நான் ராம்லீலா மைதானத்திலிருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டபோது எனக்குப் பாதுகாப்பு அளித்த பெண்களுக்கும், எனக்குத் துணை நின்ற ஆதரவாளர்களுக்கும் நன்றிகளைக் கூறிக் கொள்கிறேன்.

டெல்லி போலீஸார் அன்றைய தினம் மிகவும் கொடூரமாக நடந்து கொண்டனர். அடக்குமுறைகளை, வன்முறைகளை கட்டவிழ்த்து விட்டனர். மனித உரிமைகளை மீறும் வகையில் நடந்து கொண்டனர்.

யாரையும் அடிக்கவில்லை என்று டெல்லி போலீஸார் பொய் சொல்கின்றனர். மக்களை அவர்கள் அடித்தார்கள். அவர்களின் தாக்குதலால் மக்கள் சிதறி ஓடினார்கள். அதில் பலர் காயமடைந்தனர். எங்களது ஆதரவாளர்கள் யாரும் வன்முறையைத் தூண்டவில்லை.

பெண்கள், குழந்தைகளை போலீஸார் அடித்ததை மகாத்மா காந்தி மட்டும் பார்த்திருந்தால் கதறி அழுதிருப்பார்.

மிகக் குறுகலான பந்தலுக்குக் கீழ் இருந்தவர்கள் மீது, தூங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது கண்ணீர்ப் புகைக் குண்டுகளை வீசிய செயல் மிகவும் கொடூரமானது, கண்டனத்துக்குரியது, மனித உரிமையை மீறும் செயல்.

அப்பாவிப் பெண்களையும், குழந்தைகளையும் கொடூரமாக தாக்கியது போலீஸ். இதுதொடர்பாக டெல்லி போலீஸார் சொல்லும் விளக்கம் எல்லாம் பொய்யாகும்.

இந்த அரசை மக்கள் நாட்டுக்கு அம்பலப்படுத்த வேண்டும். நாடு முழுவதும் மக்கள் ஒன்று திரண்டு போராட முன்வர வேண்டும்.

ஊழலுக்கு எதிரான எனது போராட்டம் நிற்காது, ஓயாது. தொடர்ந்து போராடுவேன் என்றார் ராம்தேவ்.

No comments: